சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து ; அது நாதுராம் கோட்சே என்ற கமலின் சர்ச்சை பேச்சுக்கு, திருப்பரங்குன்றம் பிரசாரத்தில் கமல் பதிலளிப்பாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்றும், அது நாதுராம் கோட்சே என்று மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசியிருந்தார். கமல்ஹாசனின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அரவக்குறிச்சி காவல் நிலையத்திலும் கமல் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கமலின் இந்த பேச்சை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றதால், பாதுகாப்பு காரணங்களுக்காக, அவர் மேற்கொள்ள இருந்த பிரசாரங்கள், கடந்த 2 நாட்களாக ரத்து செய்யப்பட்டன. அவரின் வீட்டிற்கும், மக்கள் நீதிமய்யம் கட்சி அலுவலகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
திருப்பரங்குன்றத்தில் இன்று பிரசாரம் : 2 நாட்கள் இடைவெளிக்கு பிறகு, கமல்ஹாசன் இன்று திருப்பரங்குன்றத்தில் பிரசாரம் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட வில்லாபுரம், அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக அவர் மதுரைக்கு சென்றுள்ளார்.
இந்து தீவிரவாதி பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதுகுறித்து கருத்து தெரிவிக்காத கமல்ஹாசன், திருப்பரங்குன்றம் பிரசாரத்தின் இடையே மவுனத்தை கலைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.