நேற்று தமிழிசை செளந்தரராஜனை உறுப்பினராக சேர்த்து ‘அறிவித்த’ கமல்ஹாசன், இன்று ஹெச்.ராஜாவை தனது கட்சியின் உறுப்பினராக்கி கலகலப்பூட்டியிருக்கிறார்.
ஹெச்.ராஜாவுக்கு வந்த இ மெயில் தகவல்..!
கமல்ஹாசன், பிப்ரவரி 21-ம் தேதி மதுரையில் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற பெயரில் புதிய கட்சியை அறிவித்தார். அந்தக் கட்சிக்கு ‘ஆன் லைன்’னில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
கமல்ஹாசனின் கட்சியின் பாஜக மாநில தலைவர் தமிழிசையை உறுப்பினராக சேர்த்து, அவரது இ மெயிலுக்கு நேற்று அறிவிப்பு வந்தது. அதை நிருபர்களிடம் வெளிப்படுத்திய தமிழிசை செளந்தரராஜன், ‘கிடைக்கிற இ மெயில் முகவரிகளையெல்லாம் சேகரித்து கமல்ஹாசன் தனது கட்சியின் உறுப்பினர் ஆக்கிக் கொண்டிருக்கிறார். அதனால்தான் எனது இ மெயில் முகவரியையும் அவரே இணைத்துக் கொண்டு என்னை அவரது கட்சியின் உறுப்பினர் ஆக்கி நகைப்புக்கு உள்ளாக்கியிருக்கிறார்’ என்றார்.
கமல்ஹாசன் கட்சியின் நிர்வாகிகள் இது குறித்து விளக்கம் தெரிவிக்கையில், ‘ஆன் லைனில் பதிவு செய்கிறவர்களின் இ மெயில் முகவரிகளுக்கு மட்டுமே கட்சியில் இணைத்து தகவல் அனுப்புகிறோம். பதிவு செய்யாத யாருக்கும் நாங்கள் அனுப்புவதில்லை’ என்றார்கள்.
கமல்ஹாசன் கட்சியின் அடுத்த காமெடியாக இன்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவையும் இன்று மக்கள் நீதி மய்யம் உறுப்பினர் ஆக்கியிருக்கிறார்கள். ஹெச்.ராஜாவுக்கும் இது இ மெயிலில் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. கமல்ஹாசன் படத்துடன் கூடிய அந்த இ மெயில் செய்தியில், ‘அன்புக்குரிய ஹெச்.ராஜா சர்மா, உறுப்பினராக சேர்ந்தமைக்கு உளமார்ந்த நன்றி. நீங்களும் நானும் ‘நாம்’ ஆவோம். நாளை நமதே. இது உங்கள் உறுப்பினர் அடையாளமாகும். TNH8AD5725. என்றும் மாறாத அன்புடன் கமல்ஹாசன்’ என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த இ மெயில் தகவலை ‘காபி’ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஹெச்.ராஜா, ‘மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினர் சேர்க்கும் விதம் இதுதான் போல’ என கிண்டல் செய்திருக்கிறார்.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இணையதளத்தில் யாற் சென்று எந்த ஒரு இ மெயில் முகவரியைக் கொடுத்தாலும், அதை ஏற்றுக்கொண்டு உறுப்பினர் எண், கமல்ஹாசனின் அங்கீகார கடிதம் ஆகியவற்றை அனுப்பி வைத்துவிடுவதாக தெரிகிறது. அதனால்தான் தமிழிசை, ஹெச்.ராஜா ஆகியோரின் இ மெயில் முகவரிகளை யாரோ அனுப்பி உறுப்பினர் ஆக்கியிருக்கிறார்கள்.
திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடி, ரஜினிகாந்த் என பலரையும் மக்கள் நீதி மய்யத்தில் இணைத்து அறிவிப்பு வருவதற்குள் ‘உறுப்பினர் இணைப்பு சிஸ்டத்தை’ கமல்ஹாசன் மாற்றிக் கொண்டால் நல்லது.