தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில், கமல்ஹாசனை முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவரும் நடிகருமான கருணாஸ் இன்று (ஜூன் 21) சந்தித்துப் பேசியுள்ளார்.
கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையில் சமத்துவ மக்கள் கட்சி, ஐக்கிய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 3வது அணியாக சட்டமன்றத் தேர்தலை சந்தித்தார். ஆனால், இந்த கூட்டணி தேர்தலில் படுதோல்வியடைந்தது. கோவையில் கமல்ஹாசன் மிகவும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.
தேர்தலுக்கு முன்னதாக மக்கள் நீதி மய்யம் கட்சியில், அப்துல் கலாம் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு போன்றவர்கள் இணைந்தனர். அப்போது கமல்ஹாசன் நல்லவர்கள் நல்லவர்களுடன் இணைகிறார்கள் என்று கூறினார். மநீம தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான டாக்டர் மகேந்திரன், பொன்ராஜ், சந்தோஷ் பாபு உள்ளிட்ட பலரும் கட்சியில் இருந்து விலகினார்கள். தேர்தல் தோல்வியைவிட முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகியது கமல்ஹாசனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இதையடுத்து, பெரிய அளவில் வெளியே எங்கேயும் செல்லாமல் அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்காமல் இருந்தார்.
இந்த சூழ்நிலையில்தான், நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடிகர் கமல்ஹாசனை சந்தித்துப் பேசியுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக எம்.எல்.ஏ-வாக இருந்த கருணாஸுக்கு இந்த முறை அதிமுகவில் சீட் கொடுக்கப்படவில்லை. தேர்தல் சமயத்தில் அமைதியாக இருந்தார். தேர்தலிலும் பங்கேற்கவில்லை. இந்த சூழ்நிலையில்தான் கமல்ஹாசனை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
கருணாஸ் உடன் சந்திப்பு நடத்தியன் மூலம் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணியை பலப்படுத்த திட்டமிட்டுள்ளாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த சந்திப்பின்போது, கருணாஸ், கமல்ஹாசனின் அடுத்த அரசியல் திட்டம், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகியவை பெற்ற வாக்குகள் மற்றும் கமல்ஹாசனி இந்தியன் 2 புராஜக்ட் பற்றி பேசியதாக தெரிவித்துள்ளார். சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ் கூறியதாவது: “மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹானை அவரால் உருவாக்கப்பட்ட மாணவர்களில் நானும் ஒருவன் என்ற அடிப்படை உரிமையிலும் அவருடைய தாயார் நினைவகமாக உருவாக்கப்பட்ட நூலகத்தில் படித்த பல ஆயிரம் பேர்களில் நானும் ஒருவன், அவருடைய வீட்டில் நானும் ஒருவன் என்கிற உரிமையிலும் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.
கடந்த பாராளுமன்றத் தேர்தல் நேரத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற புதிய கட்சியை உருவாக்கினார். தற்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் மக்கள் நீதி மையம் 10 லட்சம் வாக்குகள் பெற்றது.
வரும் காலங்களில் லஞ்ச லாபமற்ற ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் மக்கள் நீதி மையம் நாம் தமிழர் கட்சியும் சேர்த்து இந்த தேர்தலில் 40 லட்சம் வாக்குகள் பெற்றது. இது வருங்காலத்தில் ஒரு கோடியை தாண்டும் எனவும் அவருடைய செயல்பாட்டிற்காக மக்களை சந்தித்து வரும் காலங்களில் நாட்டின் மக்களின் பிரச்சினைகளை போராடுகின்ற ஒரு பேரியக்கமாக மக்கள் நீதி மய்யம் உருவெடுக்க வேண்டும்.
தமிழர்களுடைய நலன் காக்கப்பட வேண்டியது என்று சீமானும் கமல்ஹாசனும் உறுதிபட இருப்பதால், இவர்கள் இணைந்து பயணித்தால் எதிர்காலத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். நான் சொன்ன கருத்துகளை உன்னிப்பாக கவனித்த கமல்ஹாசன், நாளை அல்லது நாளை மறுநாள் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பதாக என்னிடம் கூறினார். மக்கள் நீதி மய்யம் தேர்தலில் தோல்வி அடைந்தது வருத்தமாக இருக்கிறது. பல்வேறு விஷயங்கள் குறித்து இதில் நாங்கள் ஆலோசனை செய்தோம் என்று கருணாஸ் குறிப்பிட்டுள்ளார்.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் இணைந்து பயணித்தால் வருங்காலத்தில் பெரிய அரசியல் சக்தியாக உருவெடுக்கும் என்று கருணாஸ் மநீம தலைவர் கமல்ஹாசனிடம் கூறிதாக தெரிவித்திருப்பது தமிழ்நாட்டு அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது. கமல்ஹாசன் - கருணாஸ் சந்திப்பு மூலம் கமல்ஹாசன் இனிவரும் தேர்தலுக்கு முன்னதாக மக்கள் நீதி மய்யம் கூட்டணியை இப்போதிலிருந்தே வலுப்படுத்த திட்டமிட்டுள்ளாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.