காவல்துறை கொலைகளை ஆதரிக்கும் அரசே முதல் குற்றவாளி: கமல்ஹாசன்

இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் நினைத்தால் இரண்டு கைதிகளை, காவல் நிலையத்தில் இருந்து, சிறைச்சாலைக்கு மாற்றி விட முடியுமா? அவ்வாறு செய்ய எத்தனை துறைகள் அவர்களுக்கு...

ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரின் மரணம் குறித்து மனித நேய மக்கள் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.  இந்த சம்பவம் தொடர்பாக, பெயரளவில் எடுக்கப்படும் நடவடிக்கை எதற்கும் உதவாத ஒன்று என்றும் தெரிவித்துள்ளார்.

இதுதிடர்பாக கமல்ஹாசன் வெளியிட்ட செய்தி குறிப்பில் “சாத்தான்குளத்தில் நிகழ்ந்திருக்கும் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரின் மரணமும், அதனை சுற்றி நிகழ்ந்திருக்கும் மனித உரிமை மீறல்களும், சட்ட மீறல்களும் இந்நிலை நம்மில் எவருக்கு வேண்டுமானாலும் நிகழக்கூடும் என்ற அச்சத்தை நம்மிடையே விதைத்திருக்கிறது.

இரத்தம் சொட்ட சொட்ட இருவரைத் தாக்கும் மூர்க்கத்தனம் கொலைபாதகக் குற்றம்.

அதை செய்தவர் எவராயிருந்தாலும் அந்த தவறுக்கான தண்டனை வழங்கப்பட வேண்டும். என்கின்ற குரல்களுக்கு இடையில் இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதைப் பார்க்கும் போது, அரசு இந்த விஷயத்தில் துளி கூட உண்மைத் தன்மையை கண்டறிய முயலவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

நான் தெரிந்து கொள்வதற்காகக் கேட்கிறேன். இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் நினைத்தால் இரண்டு கைதிகளை, காவல் நிலையத்தில் இருந்து, சிறைச்சாலைக்கு மாற்றி விட முடியுமா?

அவ்வாறு செய்ய எத்தனை துறைகள் அவர்களுக்கு உதவியிருக்க வேண்டும்?

எத்தனை பேர் உடனிருந்திருக்க வேண்டும்?

அந்த உண்மைகளை ஆராயாமல், பெயரளவில் எடுக்கப்படும் நடவடிக்கை எதற்கும் உதவாத ஒன்று என்பது அரசுக்கு புரியவில்லையா?

அல்லது இது போதும் என்று அரசு நினைக்கிறதா?

இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவியும், நிவாரணமும் தேவை தான்.

 

 

ஆனால் அதை மட்டும் அவசரமாக அறிவித்து விட்டு இந்த கொலைகளை முதல்வர்,கடந்து விடக் கூடாது.

நிதியுதவியை விட இரண்டு உயிர்களுக்கு நீதி தேவை.

இந்த கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். கொலையை செய்தவர்கள், அதற்குத் துணை நின்றவர்கள், கைகட்டி வேடிக்கை பார்த்தவர்கள், இதை மறைக்க முயன்றவர்கள் என பலருக்கு இந்த கொலையில் பங்குண்டு.

இரண்டு அப்பாவிகளின் குருதி படிந்த காவல்துறையைச் சுத்தம் செய்ய அரசு என்ன செய்ய போகிறது?

இவை அனைத்திற்கும் மேலாக காவல்துறையின் கொலைகளை, கண்மூடித்தனமாக ஆதரிக்கும் அரசும், அந்த காவல்துறையை ஏவி மக்களை நசுக்கும் முதல்வரும் இதில் முதல் குற்றவாளிகள்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் அரசின் அடக்குமுறையை செயல்படுத்தும் கரமாக காவல்துறை செயல்பட்டு 13 உயிர்களை குடித்தது. அதற்கு எவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அரசும் அலட்சியம் காட்டி மனித உயிர்களின் மதிப்பையும், உரிமைகளையும் காற்றில் பறக்க விட்டது.

இப்போது அதே காவல் துறையின் கரங்கள் இரண்டு உயிர்களைக் குடித்து விட்டு வந்து நிற்கிறது.

அரசு தன் விசுவாசமான கரத்தைக் காக்கும் செயலை செய்யப் போகிறதா?

அல்லது

சரியானதைச் செய்யப் போகிறதா?

காவல் துறையின் அத்துமீறல்களை அமைதியாக வேடிக்கை பார்த்து, உயிரிழப்புகளின் போது பெயரளவில் நடவடிக்கை எடுத்து அமைதி காக்கும் அரசு, அரச பயங்கரவாதத்தை, அனுமதித்து, ஆதரித்து, வளர்த்து வருகிறது.

மக்களாட்சி என்பதை மறந்து அதிகாரத்தை, ஆதிக்கத்தை, அநீதியை மக்கள் மேல் இந்த அரசு தொடர்ந்து கட்டவிழ்க்கிறது.

மக்களின் உயிரை, உணர்வை, உரிமைகளை, சட்டத்தை மதிக்காத அரசு அகற்றப்பட வேண்டும்.
சட்டம் மக்களுக்கானது, மக்களைக் காப்பதற்கு எனும் போது, நீதித்துறை மக்களுடன் நிற்க வேண்டும்.

தன் கையாலாகாதனத்தை அடக்குமுறையில் ஒளிக்க பார்க்கும் முதல்வர், கொரோனாவைத் தடுக்க காவல் துறையின் தடிகளை நாடுகிறார்.

எத்தனை முறை நாம் எதிர்த்தாலும், தன் விருப்பத்திற்குச் செயல்பட்டு, தவறுகளைத் திருத்திக் கொள்ளாமல், தொடர்ந்து மக்களின் உயிருடனும், உணர்வுகளுடனும் விளையாடும் இந்த அடிமை அரசின் ஆணவத்தை, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி கேட்கும் நம் குரல் அசைத்துப் பார்க்கட்டும்.

எந்த தவறும் செய்யாமல் கொலையான இரண்டு அப்பாவிகளின் உயிர் போல், இனி எந்த ஒரு உயிரும் பாதிக்கப்படாதிருக்க இதைச் செய்ய வேண்டியது நம் கடமையாகும்” என்று தெரிவித்தார்.

நடிகர் சூர்யா:  

சாத்தான்‌குளம்‌ காவல்‌ நிலையத்தில்‌, இரு அப்பாவி உயிர்களுக்கு மரணம்‌ ஏற்படுத்தும்‌ அளவிற்கு நிகழ்ந்த போலீசாரின்‌ ‘லாக்கப்‌ அத்துமீறல்‌’ காவல்‌ துறையின்‌ மாண்பை குறைக்கும்‌ செயல்‌. ‘இது ஏதோ ஒரு இடத்தில்‌ தவறி நடந்த சம்பவம்‌’ என்று கடந்து செல்ல முடியாது என்று சூர்யா தனது செய்தி குறிப்பில் தெரிவித்தார்.

இதுகுறித்து சூர்யா வெளியிட்ட செய்தி குறிப்பில், ” மன்னிக்க முடியாத குற்றங்களைச் செய்தவர்களுக்கு கூட மரண தண்டனை கூடாது என மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன. சாத்தான்குளத்தில் ஜெயராஜ்- பென்னிக்ஸ் உயிரிழப்பு சம்பவம் ‘அதிகார அத்துமீரலை’ வெளிப்படுத்துகிறது.

ஒரு குடிமகனின்‌ உரிமையில்‌ நம்‌ ‘அதிகார அமைப்புகள்‌’ காட்டும்‌ அலட்‌சியத்தை வெளிச்சம்‌ போட்டு காட்டுகின்றன. அதனால்‌ இதுபோன்ற ‘துயர மரணங்கள்‌’ ஒரு வகையான ‘திட்டமிடப்பட்ட குற்றமாக’ (Organised Crime) நடக்கிறது

போலீசாரால்‌ கொடூரமான தாக்குதலுக்கு ஆளான தந்‌தை ஜெயராஜ்‌, மகன்‌ பென்னிக்ஸ்‌ இருவரையும்‌ அரசு மருத்துவர்‌ பரிசோதனை செய்து, ‘நலமாக இருப்பதாக’ சான்று அளித்திருக்கிறார்‌

நீதியை நிலைநாட்ட வேண்டிய மாஜிஸ்ட்ரேட்‌, பாதிக்கப்பட்டவர்களின்‌ நிலையை பரிசோதிக்காமல்‌, ‘இயந்திர கதியில்‌’ சிறையில்‌ அடைக்க உத்தரவிட்டுள்ளார்‌. சிறையில்‌ நடத்தப்பட வேண்டிய சோதனைகளும்‌ முறையாக நடக்கவில்லை.

ஒருவேளை இருவரின்‌ மரணம்‌ நிகழாமல்‌ போயிருந்தால்‌, போலீசாரின்‌ இந்தக்‌ கொடூர தாக்குதல்‌ நம்‌ கவனம்‌ பெறாமலேயே போயிருக்கும்‌. பாதிக்கப்பட்டவர்கள்‌ சிறையிலிருந்து வெளியே வந்தாலும்‌, ‘போலீசாரை எதிர்த்தால்‌ என்ன நடக்கும்‌’ என்பதற்கான வாழும்‌ சாட்சியாகி இருப்பார்கள்‌. தங்கள்‌ மரணத்தின்‌ மூலம்‌ தந்தை, மகன்‌ இருவரும்‌ இந்தச்‌ சமூகத்தின்‌ மனசாட்சியை உலுக்கி இருக்கிறார்கள்‌.

இந்த கொடூர மரணத்தில்‌, தங்களுடைய கடமையை செய்யத்‌ தவறிய அனைவரும்‌ நீதியின்‌ முன்‌ நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்‌. உயர்‌ நீதிமன்றம்‌ தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துவது, நீதி கிடைக்கும்‌ என்ற நம்பிக்கையை அளிக்கிறது.

இதேபோல, ‘தவறு செய்கிறவர்கள்‌ யாராக இருந்தாலும்‌ தண்டனையில்‌ இருந்து தப்பிக்க முடியாது’ என்கிற நம்பிக்கையை அரசாங்கமும்‌, நீதி அமைப்புகளும்‌ மக்களிடம்‌ உருவாக்க வேண்டும்‌. மாறாக, நமது ‘அதிகார அமைப்புகள்‌’ அவநம்பிக்கையையே ஏற்படுத்துகின்றன.

இரண்டு அப்பாவிகளின் மரணத்திற்குப் பிறகும், உடனடியாக எடுக்கப்படுகை நடவடிக்கை, சமந்தப்பட்ட போலீசாரை ‘ ஆயுதபடைக்கு’ மாற்றம் செய்வது மட்டுமே. ஆயுதப்படையில் பணியாற்றுவது என்பது, ‘ தண்டனை கால பணியாக’ பொது மக்கள் மத்தியில் ஒரு பிம்பத்தை அது உருவாக்குகிறது. ‘இரண்டு உயிர்‌ போவதற்கு காரணமானவர்களுக்கு இதுதான்‌ தண்டனையா?’ என்று எழுந்த விமர்சனத்துக்குப்‌ பிறகே, சம்பந்தப்பட்ட போலீசார்‌ ‘பணியிடை நீக்கம்‌’ செய்யப்பட்டனர்‌.

 

காவல்துறையில்‌ அர்ப்பணிப்புடன்‌ தன்‌ கடமையை செய்கிற பலரை தனிப்பட்ட முறையில்‌ நன்கு அறிவேன்‌. ஒட்டுமொத்த நாடும்‌ இயங்க முடியாமல்‌ ஸ்தம்பித்து நிற்கிற இந்த நேரத்திலும்‌ ஓய்வில்லாமல்‌ மக்களின்‌ நலனுக்காக காவல்துறையினர்‌ உழைக்கின்றனர்‌. ‘கொரோனா யுத்தத்தில்‌’ களத்தில்‌ முன்‌ வரிசையில்‌ நிற்கிற காவல்துறையினருக்கு தலைவணங்குகிறேன்‌.

அதேநேரம்‌, அதிகாரத்தை பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்தும்‌ காவல்துறையினருக்கு எனது கடும்‌ கண்டனங்கள்‌. அதிகார அத்துமீறல்‌ வன்முறையால்‌ ஒருபோதும்‌ மக்களின்‌ மனதை வெல்ல முடியாது. அன்பும்‌, அக்கறையும்‌ கொண்டு கடமையை செய்கிற காவல்துறையினரே மக்களின்‌ மனதில்‌ நிலைத்து நிற்கிறார்கள்‌.

ஒரே நேரத்தில்‌ இரண்டு உயிர்கள்‌ பலியாகி இருப்பது, ஒரு குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. தந்தையையும்‌, மகனையும்‌ இழந்து வாடுகிற அந்த குடும்பத்தினரின்‌ துயரத்தில்‌ நானும்‌ பங்கெடுத்துக்‌ கொள்கிறேன்‌.

அதிகார அத்துமீறல்‌ வன்முறையால்‌ ஒருபோதும்‌ மக்களின்‌ மனதை வெல்ல முடியாது. அன்பும்‌, அக்கறையும்‌ கொண்டு கடமையை செய்கிற காவல்துறையினரே மக்களின்‌ மனதில்‌ நிலைத்து நிற்கிறார்கள்‌. ஒரே நேரத்தில்‌ இரண்டு உயிர்கள்‌ பலியாகி இருப்பது, ஒரு குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. தந்தையையும்‌, மகனையும்‌ இழந்து வாடுகிற அந்த குடும்பத்தினரின்‌ துயரத்தில்‌ நானும்‌ பங்கெடுத்துக்‌ கொள்கிறேன்‌ ” என நடிகர் சூர்யா தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close