கமல்ஹாசனுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதன்படி, போலீஸ் விசாரணைக்கு அழைத்தால் கமல்ஹாசன் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கமல்ஹாசன் அண்மையில் அரவக்குறிச்சியில் பிரசாரம் செய்தபோது, ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவரது பெயர், நாதுராம் கோட்சே.’ என்றார். இது இந்துக்களை அவமதித்ததாகவும், இரு சமூகத்தினர் இடையே மோதலை தூண்டும் விதமாக அமைந்ததாகவும் புகார்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குகளில் தனக்கு முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கமல்ஹாசன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் விசாரணை முடிந்து, ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இன்று (மே 20) கமல்ஹாசன் முன் ஜாமீன் வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி, கமல்ஹாசனுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. அரவக்குறிச்சி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கமல்ஹாசன் ஆஜராகி பத்தாயிரம் ரூபாய் செலுத்தி, இரு நபர் கையெழுத்திட்டு ஜாமீன் பெற்றுக் கொள்ள வேண்டும்.
தவிர, இந்த வழக்கு தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு அழைத்தால் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது.