அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீது நிதி முறைகேடு புகார் எழுந்ததைத் தொடர்ந்து, தமிழக அரசு சூரப்பா மீதான புகார்களை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில், தனி நபர் விசாணை ஆணையம் அமைக்க உத்தரவிட்டது.
தமிழக அரசின் இந்த செயலை நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சி தலைவருமான கமல் ஹாசன் வன்மையாகக் கண்டித்தார்.
இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்ட காணொலி பதிவில், " உயர் கல்வி அமைச்சர் 60 லட்சம் வாங்கிக்கொண்டுத்தான் பேராசிரியர்களை பணி நியமனம் செய்கிறார் என பாலகுருசாமி ஒரு வார இதழில் குற்றம் சாட்டினாரே அளித்தாரே விசாரித்துவிட்டீர்களா? உள்ளாட்சித்துறை, பால்வளத்துறை, கால்நடைத்துறை, சுகாதாரத்துறை என அத்தனைத்துறை அமைச்சர்களும் ஊழலில் திளைக்கிறார்கள் என சமூக செயற்பாட்டாளர்களும், எதிர்க்கட்சியினரும், ஊடகங்களும் அன்றாடம் குரல் எழுப்புகிறார்களே அதை விசாரித்துவிட்டீர்களா?
நேர்மையாளர்களின் கூடாரமான மக்கள் நீதிமய்யம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. இது ஒரு கல்வியாளருக்கும் அரசியல்வாதிக்குமான பிரச்சினை இல்லை. நேர்மையாளர்களுக்கும், ஊழல்வாதிகளுக்குமான போர். ஊழலுக்கு ஒத்துழைக்க மறுத்தால் உன் வாழ்க்கையை அழிப்போம். அவதூறு பரப்பி உன் அடையாளத்தைச் சிதைப்போம் என சூரப்பாவுக்கும் அவர்போல் பணியாற்றுபவர்களுக்கும் விடுக்கும் எச்சரிக்கை" என்று பதிவிட்டார்.
உண்மையில், சூரப்பா அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்பட்ட போது கமல் ஹாசன் அதையும் வன்மையாக கண்டித்திருந்தார். நவம்பர் 16 2018 அன்று தனது ட்விட்டர் பதிவில், "அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடகத்திலிருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள். தமிழக மக்களின் மனநிலையை மத்திய மாநில அரசுகள் உணரவில்லையா? இல்லை உணரத்தேவையில்லை என எண்ணி விட்டார்களா? சீண்டுகிறார்கள். இந்தச் சீண்டல் எதை எதிர்பார்த்துச் செய்யப்படுகிறது?” என்று தெரிவித்திருந்தார்.
மேலும், மனுஸ்மிருதி குறித்த கேள்விக்கு, " மனுஸ்மிருதி புழக்கத்தில் இல்லாத புத்தகம். அதைப்பற்றி விமர்சனம் தேவையற்றது. அது புழக்கத்துல இல்லை. நீங்கள் ஐபிசி பற்றி கேளுங்கள். அரசியலமைப்பு பற்றி சொல்லுங்கள். அதன் மீது யாராவது கை வைக்கிறார்கள் என்றால் போராட்டம் வெடிக்கும். இது பத்தி பேச வேண்டிய அவசியமே கிடையாது. அது புழக்கத்தில் இல்லாத ஒரு புத்தகம்" என்று பதிலளித்தார்.
கமல்ஹாசன் பாஜகவின் B டீமாக செயல்பட்டு வருகிறார் என்று வாதமும் அவ்வப்போது கூறப்பட்டு வருகிறது. இதற்கு, கமல்ஹாசன் ஏற்கனவே பலமுறை எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில், " அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது. வாழ்நாள் முழுக்க தமிழகத்தைச் சுரண்டித் தின்பவர்கள், ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்து கொள்வதில் ஆச்சர்யமில்லை. திஹாரையும் பரப்பன அக்ரஹாரத்தையும் நிரப்பினவர்கள் அல்லவா? தன் வாழ்க்கையே, தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்குத்தான் நான் பி டீம். ஆறு வயதிலிருந்தே நான் ஏ டீம் என்பதை ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு உறைக்கும்படி சொல்கிறேன் " என்று பதிவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.