ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹ்சான், ‘என்னை தடுமாற வைத்து சிரித்தார் ஓர் அம்மையார்.. கலைஞர் உதவி வேண்டுமா என கேட்டார்’என்பதை நினைவு கூர்ந்து பேசினார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தலில் பிரசாரமும் செய்வார் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள கருங்கல்பாளையம் பகுதியில் பரப்புரை செய்து வாக்கு சேகரித்தார்.
அப்போது கமல்ஹாசன் பேசியதாவது: “சின்னம், கொடி , கட்சி எல்லாம் தாண்டியது தேசம். ஜனநாயகம் வழியாகவும் சர்வாதிகாரம் வந்தடைந்தற்கு பல சான்றுகள் இருக்கிறது. இன்று இந்தியாவிலும் அது நடந்து கொண்டு இருக்கிறது. ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கும் எனக்கும் உறவு இருக்கிறது. அவரும் பெரியார் பேரன். நானும் பெரியாரின் பேரன். பெரியார் காந்தியாரின் தம்பி. இன்று அவர்கள் விட்டுப் போன கடமையை செய்ய வந்திருக்கிறேன்.
நான் அரசியலுக்கு வந்தது லாபத்திற்காக இல்லை. இங்கே வந்திருப்பதும் ஆதாயத்திற்கும் லாபத்திற்கும் இல்லை.
மேவிஸ்வரூபம் படம் வெளியான போது என்னை தடுமாற வைத்து சிரித்தார் ஓர் அம்மையார். கலைஞர் என்னை தொடர்பு கொண்டு ஏதாவது உதவி வேண்டுமா என கேட்டார். இது தேச பிரச்னை அல்ல. நான் பார்த்துகொள்கின்றேன் என்றேன். இப்போது உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் நான் இருக்கின்றேன் என்றார் ஸ்டாலின்.” என்று கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தின் போது எழுந்த பிரச்னையை நினைவு கூர்ந்தார்.
ஈஸ்ட் இந்தியா கம்பெனி போய் நார்த் இந்தியா கம்பெனி வந்துள்ளது – கமல்ஹாசன்
தொடர்ந்து பேசிய கமல்ஹாசன் “நம் நாடு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும். அதற்கு என் ஆதரவை கொடுக்க வேண்டியது இந்தியனாக என் கடமை. நாம் கட்சிக்காக என்பதைவிட அறத்தின் சார்பாக வாக்களிக்க போகிறோம் என நினைத்துக் கொள்ளுங்கள்.
விமர்சனங்களை பின்பு பார்த்துக்கொள்ளலாம் இப்போது வீடே போக போகிறது. ஈஸ்ட் இந்தியா கம்பெனி முடிந்து நார்த் இந்தியா கம்பெனி வந்து இருக்கிறது.
இந்த கூட்டத்துடன் இருப்பது எனக்கு பெருமை. நான் வந்தற்கான காரணத்தை என் தோழர்கள் ஏன் என கேட்கமாட்டார்கள். மய்யம் வாதம் என்பது நடுநிலையில் இருப்பது அல்ல. மக்களின் நலன் என வரும் போது நியாயத்தின் பக்கம் இருப்பதே. என் பயணத்தை பாருங்கள் பாதை புரியும். நாளை நமதே” என்று கமல்ஹாசன் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“