“எம்ஜிஆரை போல 10 அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்யும் தைரியம் உண்டா?” என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் ஆளும் அதிமுக, எதிர்க்கட்சியான திமுக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டுவருகின்றனர். அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைநிமிரட்டும் தமிழகம் என்ற முழக்கத்துடன் 3ம் கட்ட பிரச்சாரத்தை திருச்சியில் மேற்கொண்டு வருகிறார்.
கமல்ஹாசன் திறந்த வாகனத்தில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மக்களை சந்தித்தார். பின்னர், தொடர்ந்து திருச்சி ரம்யாஸ் ஹோட்டலில் சிறு குறு தொழில் முனைவோர் சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்றார்.
அந்த நிழ்ச்சியில் கமல்ஹாசன் பேசியதாவது: “முழு நேரம் யாரும் எதையும் கிழிப்பதில்லை என்ற பெரியாரின் வாக்கினை போல் நானும் அப்படி நடந்துகொள்கிறேன். எம்ஜிஆர் வைத்த இலை இப்படி துளிர்க்கும் என அவர் நினைத்திருக்க மாட்டார். என் தந்தையிடம் கற்ற மரியாதை காரணமாக தான் இன்றைய கொள்ளையர்களை கூட நான் திட்டியதில்லை. இலவசங்கள் அனைத்தும் மக்கள் பணம். நியாயமாக மக்களுக்கு வந்து சேர வேண்டிய பணம். ஏழ்மையை இந்த அரசு பாதுகாத்து வைத்துள்ளது. நாங்கள் சிறந்த திட்டங்கள் வைத்துள்ளோம். ஏழைகள் தான் ஓட்டு போடுகிறார்கள். பணக்காரர்கள் ஓட்டு போட வருவதில்லை. வாக்களிக்க வந்தாலும் அங்கு நிற்பவர்களை பார்த்து திரும்பி விடுகின்றனர்.
தமிழ்நாட்டை டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்ற வேண்டியது மக்கள் நீதி மையத்தின் திட்டம். அவ்வாறு மாற்ற தேவைப்படுவது நேர்மையான அரசு. சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மக்கள் நீதி மையம் முக்கியத்துவம் அளிக்கும். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வர்த்தக மையம் அமைக்கப்படும். உலக தரத்திலான தொழில் நுட்பங்களைக் கொண்டு குப்பை கழிவுகளிலிருந்து மின்சாரம் எடுக்கும் திட்டம் கொண்டுவரப்படும். இதன் மூலம் எரிசக்தி கிடைப்பதோடு குப்பை காடாக இருக்கும் நம்முடைய நகரம் தூய்மையடையும்.
ஓட்டுச்சாவடிகளில் நடக்கும் ஊழலை தடுக்க வேண்டியது நமது கடமை. ஊழலை நீக்குவதற்கான தான் அரசியலுக்கு வந்தேன் தொடர்ந்து செயலாற்றுவேன். அரசியல் பிரசுரங்களில் எதுகை, மோனையுடன் பேசும் அரசு நாங்கள் அல்ல. மக்கள் நீதி மையம் சார்பில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளி ஒருவர் பிரதிநிதியாக நிச்சயம் இருப்பார். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை கிடப்பில் இருக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க இது உதவும். இது நேர்மையானவர்கள் கூட்டம். நான் நட்சத்திரம் அல்ல. இனி உங்கள் வீட்டில் உள்ள சிறு விளக்கு. ஊழலுக்கு எதிராக இந்த விளக்கு எரிந்து கொண்டே இருக்கும். அதை அணையாமல் பார்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பு” என்று கூறினார்.
இதையடுத்து, ஊழலில் சாதனை படைத்தவர்களை நீக்க துணிச்சல் உண்டா என்று கமல்ஹாசன் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகாறும் ‘அம்மா ஆட்சி’ என்றே முழங்கிக்கொண்டிருந்தவர்கள் மீண்டும் புரட்சித் தலைவரின் பெயரைப் புழங்க ஆரம்பித்திருக்கிறார்கள். மகிழ்ச்சி.
எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்கும் முன்னரே, அவரவர் குவித்த சொத்துக்களுக்கு கணக்கு காட்டச் சொன்னவர் வாத்யார். காட்டுவீர்களா?
(1/2) pic.twitter.com/oJ7YmCoTZr
— Kamal Haasan (@ikamalhaasan) December 27, 2020
கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “இதுகாறும் ‘அம்மா ஆட்சி’ என்றே முழங்கிக்கொண்டிருந்தவர்கள் மீண்டும் புரட்சித் தலைவரின் பெயரைப் புழங்க ஆரம்பித்திருக்கிறார்கள். மகிழ்ச்சி. எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்கும் முன்னரே, அவரவர் குவித்த சொத்துக்களுக்கு கணக்கு காட்டச் சொன்னவர் வாத்யார். காட்டுவீர்களா? ஒரே நாளில் 10 அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்தவர் எம்.ஜி.ஆர். ஊழலில் சாதனை படைத்தவர்களை நீக்க துணிச்சல் உண்டா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.