தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடுவதாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளார். கோவை தெற்கு தொகுதியில் அவரை நேரடியாக எதிர்த்து காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாகுப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இன்று வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. அதனால், தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுவருகின்றனர். வேட்பாளர்கள் சிலர் வேட்புமனு தாக்கல் செய்வதில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “இப்போதும் நான் போட்டியிடப்போகும் தொகுதியைப் பற்றி அந்த தொகுதியை அறிவித்த பிறகு சொல்லலாம் என்று இருக்கிறேன். அந்த தொகுதியை நான்தான் அறிவிப்பதாக இருந்தது. ஒருவர் மல்லுக்கட்டி, மன்றாடி, சண்டைபோட்டு அறிவிப்பை மட்டும் என்னிடம் கொடுங்கள். அந்த பெருமையை எனக்கு கொடுங்கள் என்றார். அந்த வாக்கை முதலில் நிறைவேற்றிவிட்டு. எனது தொகுதிக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணியில் ஈடுபடுகிறேன்.” என்று கூறினார்.
இதையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் ஆர்.மகேந்திரன், “கோவை தெற்கு தொகுதியில் எங்களுடைய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்” என்று அறிவித்தார்.
மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. பாஜக சார்பில் தேசிய மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன் வேட்பாளராக போட்டியிடுகிறார். இதன் மூலம், கமல்ஹாசனை எதிர்த்து தேசியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர்கள் நேரடியாக போட்டியிடுகின்றனர்.