ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்துப் பரப்புரை செய்த ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன், ‘விஸ்வரூபம் படம் எடுத்தேன். அப்போது என்னை தடுமாற வைத்து சிரித்தார் ஓர் அம்மையார். ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டார் கலைஞர்’ பேசியது குறித்து அ.தி.மு.க ஆதரவாளர்கள் கமல்ஹாசனிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நடிகர் கமல்ஹாசன் நடித்து 2013-ம் ஆண்டு வெளியான விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிடுவதற்கு அப்போது இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அந்த படத்தில் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு பிறகு, சமரசப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, விஸ்வரூபம் திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அப்போது, ஜெயலலிதா தமிழக முதலமைச்சராக இருந்தார்.
இதைத் தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசன் 2018-ல் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். மக்கள் நீதி மய்யம் கட்சித் தொடங்கப்பட்ட பின்னர், 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை சந்தித்தது. ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. தேர்தலில் கூட்டணி இல்லை என்று அறிவித்த கமல்ஹாசன், 2021 சட்டமன்றத் தேர்தலில் பாரிவேந்தரின் ஐ.ஜே.கே, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்டார். இந்த தேர்தலிலும் மநீம ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. கோவை வடக்கில் போட்டியிட்ட கமல்ஹாசன் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் மிகவும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.
கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் சந்தித்த 2 தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியை வலுப்படுத்துவது குறித்து அவ்வப்போது ஆலோசனைகளும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை (பாரத் ஜோடோ யாத்ரா) மேற்கொண்டார். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரைக்கு ஆதரவு தெரிவித்து யாத்திரையில் பங்கேற்ற மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ராகுல் காந்தி உடன் உரையாடல் நடத்தினார்.
இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இந்த இடைத் தேர்தலில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்தது. அதுமட்டுமில்லாமல், கமல்ஹாசன் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து பரப்புரை செய்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் பரப்புரை செய்தபோது கமல்ஹாசன் பேசியதுதான், பத்தாண்டுகளுக்கு முன் அவருடைய விஸ்வரூபம் பிரச்னையைப் பற்றிய விவாதத்தை இப்போது மீண்டும் எழுப்பியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் கருங்கல்பாளையம் பகுதியில் பரப்புரை செய்த கமல்ஹாசன் பேசியதாவது: “எனக்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கும் உறவுமுறை இருக்கிறது அவர் பெரியாரின் பேரன். நானும் பெரியாரின் பேரன். பெரியார் காந்தியாரின் தம்பி. விட்டு போன கடமையை செய்ய வந்திருக்கிறேன். நான் அரசியலுக்கு வந்தது லாபத்திற்காக இல்லை, இங்கே வந்திருப்பதும் ஆதாயத்திற்காக இல்லை. விஸ்வரூபம் படம் வெளியான போது என்னை தடுமாற வைத்து சிரித்தார் ஓர் அம்மையார். கலைஞர் கருணாநிதி என்னை தொடர்பு கொண்டு ஏதாவது உதவி வேண்டுமா என கேட்டார். இது தேச பிரச்னை அல்ல. எனவே, நான் பார்த்துக் கொள்கிறேன் என்றேன். உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் நான் இருக்கிறேன் என்றார் ஸ்டாலின்” என்று விஸ்வரூபம் பிரச்னையை நினைவுகூர்ந்து பேசினார்.
‘விஸ்வரூபம் படத்தின்போது என்னை தடுமாற வைத்து சிரித்தார் ஓர் அம்மையார். ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டார் கலைஞர்’ பேசியது குறித்து அ.தி.மு.க ஆதரவாளர்கள் கமல்ஹாசனிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கமல்ஹாசன் இன்றைக்கு என்னை தடுமாற வைத்து சிரித்தார் ஓர் அம்மையார் என்று ஜெயலலிதாவை விமர்சனம் செய்கிறார். ஆனால், அவர் அன்றைக்கு, விஸ்வரூபம் பிரச்னை தீர்க்கப்பட்டு, படம் வெளியான பிறகு, ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டது ஏன்? ஜெயா டிவி பட்டிமன்றம் நிகழ்ச்சிக்கு நடுவராக சென்றது ஏன் என்று அ.தி.மு.க ஆதரவாளர்கள் பலரும் கமல்ஹாசனை நோக்கி கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும், அப்போது கமல்ஹாசன் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து நாளிதழ்களில் வெளியான விளம்பரத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அந்த விளம்பரத்தில், “நன்றி, காலத்தில் கனிவுடன் என் நிலை உணர்ந்து நியாயமான அறிவுரை வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தோழிலாளர்கள் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் கமல்ஹாசன்.”
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“