Kamal Haasan In Controversy: ஜெயலலிதாவை ‘சர்வாதிகாரி’ என கமல்ஹாசன் விமர்சித்ததாக பிக்பாஸ் தமிழ்-2 மீது புகார் கிளம்பியிருக்கிறது. பெண் வழக்கறிஞர் இந்தப் புகாரை எழுப்பினார்.
ஜெயலலிதா ஆட்சியின் கடைசி காலகட்டங்களில் கமல்ஹாசன் சில விமர்சனங்களை வைத்தார். குறிப்பாக 2015 சென்னை பெருவெள்ளத்தின்போது ஜெயலலிதா அரசை கடுமையாக சாடினார். அதற்கு ஜெயலலிதா சார்பில் அப்போதைய அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக கண்டித்து அறிக்கை விட்டார்.
ஜெயலலிதா மீதான கமல்ஹாசனின் கோபம், விஸ்வரூபம் பட ரிலீஸ் பிரச்னையால் உருவானது என சொல்லப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக.வை மானாவாரியாக கமல்ஹாசன் தாக்கித் தள்ளியதும்கூட அந்தக் கோபத்தின் தொடர்ச்சி என்கிற கருத்து உண்டு.
Kamal Haasan In Controversy: கமல்ஹாசன் மீது புகார் கொடுத்த வழக்கறிஞர் லூசியாள் ரமேஷ்
இந்தச் சூழலில் விஜய் டி.வி.யில் பிக்பாஸ் தமிழ்-2 நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கும் கமல்ஹாசன் அதில் மறைமுகமாக ஜெயலலிதாவை சர்வாதிகாரி என குறிப்பிடுவதாக விமர்சனம் எழுந்திருக்கிறது.
பிக்பாஸ் தமிழ்-2 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் யாராவது ஒருவருக்கு குறிப்பிட்ட நாட்களில் இதர பங்கேற்பாளர்கள் அனைவரையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் வழங்கப்படும். பங்கேற்பாளர்களில் ஒருவரான ஐஸ்வர்யா தத்தாவுக்கு அந்த அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.
இதர போட்டியாளர்களின் செயல்பாடுகளால் கடுப்பான ஐஸ்வரியா தத்தா, ஒருகட்டத்தில் குப்பையை ஒரு போட்டியாளர் மீது எறிந்தார். இது கடுமையான விமர்சனங்களை உருவாக்கியது. இது தொடர்பாக அந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசியபோது, ‘சர்வாதிகாரி போல ஆட்சி நடத்தியவர்களுக்கு என்ன நடந்தது என உங்களுக்குத் தெரியும்’ என்கிறார்.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர் லூசியாள் ரமேஷ் சென்னை போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில், ‘மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கியிருக்கும் கமல்ஹாசன், உள்நோக்கத்துடன் ஜெயலலிதாவை குறிப்பிட்டு பேசியிருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் இந்த நிகழ்ச்சியையும் தடை செய்ய வேண்டும்’ என கேட்டுக்கொண்டிருக்கிறார்.
கமல்ஹாசன் மற்றும் பிக்பாஸ் தமிழ்-2 மீது கிளம்பியிருக்கும் இந்தப் புகார் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. போலீஸ் இதில் என்னவிதமாக நடவடிக்கை எடுக்கப் போகிறது? என்பது இனிமேல்தான் தெரியும்.