Kamal Haasan And DMK Alliance: திமுக.வுடன் கூட்டணி என வெளியான தகவலை கமல்ஹாசன் மறுத்து அறிக்கை விடுத்தார். இன்று கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் அவரது அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னையில் திமுக தலைமையகமான அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 16) மாலையில் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு சிலையை திறந்து வைக்கிறார்.
அதைத் தொடர்ந்து ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு, பினராயி விஜயன், நாராயணசாமி ஆகிய முதல் அமைச்சர்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள். முன்னதாக அறிவாலயத்தில் நடைபெறும் சிலை திறப்பு விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக சோனியா சென்னை வரும் நிலையில் கமல்ஹாசனை திமுக அணியில் காங்கிரஸ் முயற்சியில் இணைத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. ராயப்பேட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கும் கமல்ஹாசன் அழைத்துச் செல்லப்படுவார் என பேசப்பட்டது.
பரபரப்பான இந்த தகவல்கள் குறித்து இன்று (டிசம்பர் 15) இரவில் தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் ஒரு அறிக்கை விட்டார். அதில் அவர், ‘மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், நான் அரசியலுக்கு வந்த காரணத்தை நாம் உணர்வோம். அது குறுகிய ஆதாயங்களுக்காக அல்ல. வதந்திகளை நம்பாதீர். மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது. உந்தப்பட்டால் தனித்து நிற்போம்.’ என கூறியிருக்கிறார்.
கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெறும் சூழலில், வெளியான தகவலுக்கு கமல்ஹாசன் உடனடி பதில் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதில், ‘தந்திர விளையாட்டு’ என அவர் குறிப்பிடுவது திமுக.வையா? என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது. எனவே சிலை திறப்பு நிகழ்ச்சியில் கமல் கலந்து கொள்வாரா? என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு, திமுக.வின் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு வந்தால் செல்வேன் என கூறினார் கமல். அதற்கு திமுக தரப்பில் பதில் இல்லை. அதன்பிறகு டெல்லியில் ராகுல் காந்தியை நேரடியாக கமல்ஹாசன் சந்தித்து பேசினார். திமுக, அதிமுக அல்லாத கூட்டணியில் இடம் பெறுவோம் என்றும் ஒருமுறை குறிப்பிட்டார்.
இந்தச் சூழலில் முக்கியமான ஒரு நிகழ்ச்சி தருணத்தில் திமுக.வை மறைமுகமாக விமர்சிப்பது போன்ற கருத்தை கமல்ஹாசன் வெளியிட்டிருப்பது விவாதங்களை உருவாக்கியிருக்கிறது.