மக்கள் நீதி மய்யத்திற்கு புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார் அக்கட்சியின் தலைவர் கமலஹாசன்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி மற்றும் சமத்துவ மக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்த மக்கள் நீதி மய்யம் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியது. கட்சியின் தலைவர் கமலஹாசன் நீண்ட இழுபறிக்கு பின் தோல்வியை தழுவினார்.
சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததால், மக்கள் நீதி மய்யம் கடசியின் முக்கிய நிர்வாகிகள் அதிருப்தி அடைந்து கட்சியில் இருந்து வெளியேறினர். மகேந்திரன், சந்தோஷ் பாபு, முருகானந்தம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கட்சியில் ஜனநாயகம் இல்லை எனக் கூறி கட்சியிலிருந்து விலகினர். இப்படி அடுத்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் விலகலால், மக்கள் நீதி மய்யம் கட்சியை வலுப்படுத்தத் தேவையான மாற்றங்களைச் செய்வேன் என கமல்ஹாசன் கூறி இருந்தார்.
இந்த நிலையில், ஜூன் 26 இன்று நடந்த இணையவழிக் கலந்துரையாடலில் கமல்ஹாசன் பேசியதாவது, மண், மொழி, மக்கள் காக்க களம் கண்ட நமது கட்சியை வலுப்படுத்தவும், நமது கொள்கைகளை, செயல் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும் சில புதிய நியமனங்களைச் செய்திருக்கிறேன். அதன்படி, கட்சியின் தலைவர் எனும் பொறுப்புடன் கூடுதலாகக் கட்சியின் பொதுச் செயலாளர் எனும் பொறுப்பினையும் ஏற்றுப் பணியாற்ற இருக்கிறேன்.
புதிதாக இரு அரசியல் ஆலோசகர்கள், இரண்டு துணைத் தலைவர்கள், மூன்று மாநிலச் செயலாளர்கள், நிர்வாகக் குழுவில் மேலும் ஒரு உறுப்பினர், நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சில அறிவிப்புகள் இனிவரும் நாட்களில் வெளியாகும்.
புதிய மாநிலச் செயலாளர்கள் ஏற்கெனவே நமது கட்சியின் வேட்பாளர்களாகக் கடந்த சட்டமன்ற தேர்தலில் களம் கண்டவர்கள்தான். எனினும், அவர்களைப் பற்றி மீண்டும் இங்கே குறிப்பிடக் கடமைப்பட்டுள்ளேன்.
சிவ.இளங்கோ சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் நிறுவனர். மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அநீதிகளுக்கு எதிராகச் சட்டப் போராட்டங்களைத் தொடர்ந்த காரணத்தால் ஆட்சியாளர்களால் வேட்டையாடப்பட்டு சிறை சென்றவர். தற்போது சிவ.இளங்கோ கட்சி கட்டமைப்பின் மாநிலச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
செந்தில் ஆறுமுகம் தகவல் தொழில்நுட்பத் துறையில் 7 ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு சமூகப் பணி செய்ய வேண்டும் என்ற தனது லட்சியத்திற்காக பணியை ராஜினாமா செய்தவர். ‘நேர்மையான அரசியலின் மூலம் நல்லாட்சி’ மலர வேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த 20 ஆண்டுகளாக உழைத்து வருபவர். சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முழுமையாகப் பயன்படுத்துவது என மக்கள் நலன் சார்ந்து தொடர்ந்து இயங்கி வருகிறார். செந்தில் ஆறுமுகம் மக்கள் நீதி மய்யத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் செய்தித் தொடர்பு மாநிலச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
சரத்பாபு வெற்றிகரமான தொழில்முனைவோர். புட் கிங் அறக்கட்டளையை நிறுவி பசியோடு இருப்பவர்களுக்கு உணவு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து வருகிறார். சரத் பாபு தற்போது கட்சியின் தலைமை நிலைய செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
மக்கள் நீதி மய்யத்தின் புதிய நிர்வாகிகள்
பழ.கருப்பையா – அரசியல் ஆலோசகர்
பொன்ராஜ் வெள்ளைச்சாமி – அரசியல் ஆலோசகர்
ஏ.ஜி.மவுரியா – துணைத் தலைவர் – கட்டமைப்பு
தங்கவேலு – துணைத் தலைவர் – களப்பணி மற்றும் செயல்படுத்துதல் சரத்பாபு – மாநிலச் செயலாளர் – தலைமை நிலையம்
சிவ.இளங்கோ – மாநிலச் செயலாளர் – கட்டமைப்பு
செந்தில் ஆறுமுகம் – மாநிலச் செயலாளர் – தகவல் தொழில்நுட்பம் & செய்தித் தொடர்பு
ஸ்ரீப்ரியா சேதுபதி – நிர்வாகக் குழு உறுப்பினர்
ஜி.நாகராஜன் – நற்பணி இயக்க ஒருங்கிணைப்பாளர்
மக்கள் சேவைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட இவர்களை என்னோடு சேர்ந்து நீங்களும் வாழ்த்தி வரவேற்பு செய்யுங்கள். இவர்கள் உங்களோடு சேர்ந்து உழைத்துக் கட்சியினை வலுவாக்குவார்கள். உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. அதற்கு நாம் தயாராக வேண்டும்”. இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil