கனிமொழி தேர்வு செய்த ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் மாதிரி கிராமத்தை விசாரித்த கமல்ஹாசன், அதே பாணியில் கிராமங்களை மேம்படுத்த திட்டமிடுகிறார்.
கமல்ஹாசன், ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியிருக்கிறார். இதற்கான உறுப்பினர் சேர்க்கையை முடுக்கி விட்டிருக்கும் கமல்ஹாசன், மக்கள் மத்தியில் கட்சியை கொண்டு சேர்க்கும் வகையில் புதிய முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு கட்டமாக, தமிழ்நாடு முழுவதும் குறிப்பிட்ட சில கிராமங்களை தேர்வு செய்து தனது கட்சி சார்பிலேயே அந்த கிராமங்களில் அடிப்படை பணிகளை செய்ய இருக்கிறார்.
அப்படி தேர்வு செய்யும் கிராமங்களில் என்ன மாதிரியான பணிகளை செய்வது? ஒரு கட்சி அல்லது அமைப்பு அப்படி சுயமாக பணிகளை செய்ய அரசு நிர்வாகங்கள் அனுமதிக்குமா? சுயமாக அந்தப் பணிகளுக்கு நிதி ஆதாரம் திரட்ட முடியுமா? என இதையொட்டி பல கேள்விகள் கமல்ஹாசனுக்கு எழுந்தன. அப்போது தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் என்ற கிராமத்தை திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தத்தெடுத்து மேற்கொண்டு வரும் பணிகள் பற்றி அவரது கவனத்திற்கு நிர்வாகிகள் கொண்டு சென்றனர்.
ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் கிராமத்தை, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் மத்திய அரசின் அறிவிப்புக்கு இணங்கவே கனிமொழி தத்தெடுத்தார். அதன்படி அரசு திட்டங்களின் மூலமாக அங்கு குடிநீர் தொட்டிகள், மருத்துவமனை மேம்பாடு உள்ளிட்ட பணிகள் நிறைவு பெற்றிருக்கின்றன. மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியை கொண்டு வருவது உள்ளிட்ட வேறு சில முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
அரசு திட்டங்களைத் தாண்டி, தனது சுயமான முயற்சியாலும் அங்கு கனிமொழி சில பணிகளை மேற்கொள்வதாக நிர்வாகிகள் சுட்டிக்காட்டியதையே கமல்ஹாசன் உன்னிப்பாக கவனித்தார். குறிப்பாக அந்த ஊரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் குளத்தை தனது சொந்த முயற்சியில் தூர்வார ஏற்பாடு செய்தார். இதனால் அந்தக் குளத்தில் தற்போது கூடுதலான தண்ணீர் தேங்குகிறது.
அந்தக் குளத்தில் இருந்து ஊருக்குள் கட்டப்பட்ட கீழ்நிலை நீர்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் போகிறது. அந்தத் தொட்டியில் இருந்து ஊர் மக்களுக்கு குடிநீர் வினியோகம் ஆகிறது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அந்தக் குளத்தை அரசு நிதியை பயன்படுத்தாமல் தூர் வாரியதற்கு அதிகாரிகள் ஏதாவது ஆட்சேபம் தெரிவித்தார்களா? அதில் சட்டச் சிக்கல் இருக்கிறதா? தூர் வாரிய மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவதில் பிரச்னை இருக்கிறதா? என்றெல்லாம் கமல்ஹாசன் அது தொடர்பான விவரம் அறிந்த நபர்களிடம் விசாரித்திருக்கிறார்.
கமல்ஹாசனும் தனது அடுத்தகட்ட சுற்றுப்பயணத்தையொட்டி தத்தெடுக்கும் கிராமங்களின் பட்டியலை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘நான் தத்தெடுக்கும் கிராமங்களில் பணிகளை செய்ய அரசு ஏதாவது தடை ஏற்படுத்தினால், மக்கள் முன்பு இந்த அரசை அம்பலப்படுத்துவோம்’ என்றும் கூறியிருக்கிறார் கமல்ஹாசன்.