தேர்தல் அத்துமீறல்களை மாநில தேர்தல் ஆணையத்திடம் ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளோம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து மறுவாக்குப்பதிவு நடத்துவதே நியாயமானதாக இருக்க முடியும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் பிப்ரவரி 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. சென்னையில் வார்டு எண் 173-ல் மக்கள் நீதி மய்ய வேட்பாளரை வாக்குச் சாவடிக்குள் வர அனுமதிக்காமல் விதிமீறல் செய்து கள்ள ஓட்டு போடப்பட்டதாக மநீம வேட்பாளர் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், தேர்தல் அத்துமீறல்களை மாநில தேர்தல் ஆணையத்திடம் ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளோம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து மறுவாக்குப்பதிவு நடத்துவதே நியாயமானதாக இருக்க முடியும் என்று 7 கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிமுகவையும் திமுகவையும் கடுமையாக விமர்சித்தும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
“ஆட்சியதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் திமுகவும், பணபலம் கொண்ட அதிமுகவும் தேர்தல் ஜனநாயகத்தை தமிழகத்தில் கேலிக்கூத்தாக்கி விட்டன. அனைத்து வார்டுகளிலும் பணமும் பரிசுப் பொருட்களும் வினியோகம் ஆனது. வெளியூரில் இருக்கும் வாக்காளர்கள் பணமளித்து வரவழைக்கப்பட்டார்கள். வேட்பாளர்கள் மிரட்டப்பட்டார்கள். பிரச்சாரத்திற்குச் செல்கையில் அடித்து விரட்டப்பட்டார்கள். தேர்தல் நாளில் வாக்குச் சாவடியிலே பணம் வினியோகம் செய்யப்பட்டது.உச்சகட்ட அநீதியாக வாக்குச்சாவடிகளின் கதவுகளைப் பூட்டிக்கொண்டு கள்ள ஓட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் இச்செயல்களை தேர்தல் அதிகாரிகளால் தடுக்க முடியவில்லை. தங்கள் வாக்கைப் பதிவு செய்யவந்த மாற்றுகட்சி வேட்பாளர்களை வாக்காளர்கள் என நினைத்து பணம் கொடுக்க முயன்றது அவல நகைச்சுவை. உள்ளாட்சிப் பதவிகளைக் கைப்பற்றி மக்கள் பணத்தை துளி விடாமல் உறிஞ்சுவிடத் துடிக்கும் கழகங்களில் ஊழல்வெறிக்கு ஜனநாயகம் பலியாகியுள்ளது. தேர்தல் அத்துமீறல்களை மாநில தேர்தல் ஆணையத்திடம் ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளோம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து மறுவாக்குப்பதிவு நடத்துவதே நியாயமானதாக இருக்க முடியும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மக்கள் நீதி மய்யத்தின் கோரிக்கைகள் என 7 கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்.
- கள்ள ஓட்டு உள்ளிட்ட முறைகேடுகள் குறித்தான உரிய விளக்கத்தை மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிடும் வரை வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும்.
- சென்னையில் வார்டு எண் 1730ல் மக்கள் நீதி மய்ய வேட்பாளரை வாக்குச் சாவடிக்குள் வர அனுமதிக்காமல், அப்பட்டமான விதிமீறல் செய்து கள்ள ஓட்டு போடுவதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் செயல்பட்ட தேர்தல் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வாக்குப்பதிவு நாலன்று (பிப்ரவரி 19) மாலை 5 மணி முதல் 6 மணி வரையில் வாக்குப்பதிவு செய்தவர்களின் விவரங்களை (கையெழுத்து ரெஜிஸ்டர், சிசிடிவி காட்சிகள்) வேட்பாளர்களிடம் காண்பிக்க வேண்டும்.
- வாக்குப்பதிவு நாளன்று (பிப். 19) மாலை 5 மணி முதல் 6 மணி வரையில் வாக்குப்பதிவு செய்த கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விவரங்களை பூத் வாரியாக வெளியிட வேண்டும்.
- தமிழகமெங்கும் நடைபெற்ற ஓட்டுக்குப் பணம், பரிசுப்பொருள், உள்ளிட்ட தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது முறைகேடுகள் நடக்காமல் இருப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும்..
- கோரிக்கைகள் முழுமையாக நிறைவேப்படாத பட்சத்தில் நடைபெற்ற தேர்தலை ரத்துசெய்து மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.