தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக ஸ்டெர்லிட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் பெரும் அளவில் நடைபெற்று வருகிறது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பங்கு பெறும் இப்போராட்டம் கடந்த ஒரு வாரமாக வீரியம் அடைந்துள்ளது. 3வது நாட்களாக வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி மாணவர்களுக்குப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி, சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ளது ஸ்டெர்லைட் தொழிற்சாலை. காப்பர் தயாரிக்கும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் இருந்து நச்சுத்தன்மை கொண்ட புகை வெளியேறுவதால் பொதுமக்களுக்கு நோய்கள் பரவி வருவதாகவும், உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். எனவே இந்த ஆலையை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று தூத்துக்குடியில் மாபெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உலகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்களும் போராட்டம் நடத்தினர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பல்வேறு கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்தை பல்வேறு அமைப்புகளும் இணைந்து நடத்தி வருகின்றது. அதில் ஒன்றான ‘கொலைகார ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் இயக்கத்தின்’ சென்னை ஆதரவுக் குழு நிர்வாகிகள் நேற்று கமல்ஹாசனை ஆழ்வார்பேட்டையில் சந்தித்தனர். இந்தச் சந்திப்பில், ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட கமல், விரைவில் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் மக்களோடு ஒன்றாக இணைவார் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.