திருச்சியில் நாளை மக்கள் நீதி மய்யம் பொதுக்கூட்டம் - தொண்டர்களுக்கு கமல் ஹாசன் அழைப்பு

திருச்சியில் நாளை நடைபெறவுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்கூட்டத்திற்குத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கமல் ஹாசன் அழைப்பு.

நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தனது 2-வது பொதுக்கூட்டத்தை திருச்சியில் நாளை நடத்துகிறார். இக்கூட்டத்திற்காக இன்று வைகை எக்ஸ்பிரஸ் மூலம் பயணிக்கிறார்.

மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்கூட்டம் பிப்ரவரி மாதம் 21ம் தேதி மதுரையில் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் தனது கட்சி பெயர் மற்றும் சின்னத்தை கமல் அறிவித்தார். நடந்து முடிந்த அக்கூட்டத்தில் பல்வேறு கட்சித் தலைவர்களும், அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றனர். இவர்களுடன் முக்கிய விருந்தினராகத் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார்.

கட்சிப் பணிகளின் அடுத்தகட்ட நடவடிக்கையாக நாளை (ஏப்ரில் 4) மாலை திருச்சியில் இரண்டாவது பொதுக்கூட்டம் நடைபெறும் என்று முன்னதாக அவர் அறிவித்திருந்தார். மேலும் திருச்சி பொன்மலை ‘ஜி’ கார்னர் மைதானத்தில் இக்கூட்டம் நடைபெறும் என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டது.

நாளை நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கான அழைப்பை வீடியோ பதிவு மூலமாகக் கட்சி நிர்வாகம் வெளியிட்டது. இதில் அனைவரும் அணி திரண்டு வந்தால் மாற்றம் நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், “ஊர்க்குருவிகள் நாம் ஒன்று சேர்ந்து பறந்தால் அரசியலுக்கும் ஊழலுக்கும் பிறந்த பிணம் தின்னி கழுகுகளை இல்லாமலேயே செய்து விடலாம். வாருங்கள்.” என்று தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

திருச்சியில் தற்போது இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

×Close
×Close