Advertisment

தி.மு.க அணியில் இடம் கிடைக்குமா? கமல்ஹாசன் கட்சி முக்கிய ஆலோசனை

கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து வியாழக்கிழமை முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Kamal Haasan

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து வியாழக்கிழமை முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தைகளைத் துரிதப்படுத்தி தொகுதிப் பங்கீடுகளை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

வருகிற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ், வி.சி.க, சி.பிஐ. சி.பி.எம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ம.தி.மு.க, கொங்குநாடு  உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தி.மு.க கூட்டணியில், இதுவரை 4 கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை இறுதி செய்துள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல,  கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 சீட்டும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-க்கு 2 சீட்டும் ஒதுக்கப்பட்டு தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 

அதே நேரத்தில், தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ், வி.சி.க, மதி.மு.க உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி 10 சீட்கள் எதிர்பார்க்கும் நிலையில், தி.மு.க 7 சீட்கள் தர முன்வந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
அதே போல, தி.மு.க கூட்டணியில், முதலில் 4 சீட்டுகளைக் கேட்ட வி.சி.க பின்னர் 3 சீட்டுகள் வேண்டும் என்று கேட்டு வருகிறது. ஆனால், தி.மு.க தரப்பில் கடந்த மக்களவைத் தேர்தலில் கொடுத்த அதே 2 சீட்டுகள்தான் கொடுக்கப்படும் என்று கூறுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ம.தி.மு.க இந்த முறை 2 சீட்டுகள் கேட்கிறது. ஆனால், தி.மு.க 1 சீட் மட்டும்தான் தர முடியும். அதுவும், உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று கூறுவதால் ம.தி.மு.க-வும் தொடர்ந்து பேசி வருகிறது.

இதனிடையே, தி.மு.க கூட்டணியில் உள்ள வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஜவாஹிருல்லா தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சி  ஆகியவை தி.மு.க கூட்டணியில் 1 சீட் கேட்டு வருகின்றன. ஆனாலும், தி.மு.க கூட்டணியில், உள்ள கட்சிகள் கேட்ட எண்ணிக்கையில் சீட்டு கிடைக்காவிட்டாலும் கூட்டணியில் இருந்து வெளியேறும் திட்டமில்லை என்று தெரிகிறது.

அ.தி.மு.க கூட்டணியில், தே.மு.தி.க, பா.ம.க ஆகிய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. பார்வர்ட் பிளாக் கட்சி அ.தி.மு.க கூட்டணியில் இணைந்துள்ளது. 

தமிழ்நாட்டில் பா.ஜ.க-வும் ஒரு வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஏ.சி. சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி, பாரி வேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, ஜி.கே.வாசனி த.மா.கா கட்சிகளை சேர்த்து கூட்டணியை வலுப்படுத்தி வருகிறது.

மற்றொருபுறம், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி இந்த மக்களவைத் தேர்தலிலும் தனித்து போட்டி என்பதில் உறுதியாக உள்ளது.

இந்த சூழலில்தான், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் உடன் கூட்டணி என்று கூறி வந்த நிலையில், தமிழ்நாட்டில் இண்டியா கூட்டணிக்கு தி.மு.க தலைமை என்பதால் அக்கட்சி தி.மு.க-விடம் சீட் கேட்குமா? அல்லது காங்கிரஸிடம் சீட் கேட்குமா என்ற கேள்விகளும் விவாதங்களும் எழுந்தன. 

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவு அளித்தார். மேலும், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையிலும் பங்கேற்று அவருடன் உரையாடினார். 

ஆனால், தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் சீட்களில் மக்கள் நீதி மய்யத்துக்கு ஒதுக்கப்படும் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால், தி.மு.க காங்கிரஸ் கட்சிக்கு  முந்தைய தேர்தலில் அளித்த சீட்களின் எண்ணிக்கையைவிட குறைவாகவே அளிக்கும் என்பதால், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க-விடம் பேச வேண்டிய நிலைக்கு சென்றுள்ளது. இதனால், இந்த தேர்தலில் கமல்ஹாசன் தி.மு.க கூட்டணியில் இணைய விரும்புகிறார்.

மக்கள் நீதி மய்யம் நேரடியாக தி.மு.க-வுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்றாலும்,  தி.மு.க கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி 2 சீட் எதிர்பார்க்கும் நிலையில், தி.மு.க 1 சீட் மட்டுமே கொடுக்க முன்வந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், தி.மு.க கூட்டணியில் இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால், மக்கள் நீதி மய்யம் குறைந்தபட்சம் 2 சீட் பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், கோவை லோக்சபா தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. ம.நீ.ம வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால், 2 சீட் தரலாம், இல்லையென்றால் 1 சீட் தான் என்று தி.மு.க தரப்பு உறுதியாக உள்ளது. 

அதுமட்டுமில்லாமல், தி.மு.க கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்ற கோவை தொகுதியில் மீண்டும் போட்டியிட கேட்டு வரும் நிலையில், ம.நீ.ம-வும் கோவையைக் கேட்டால் தொகுதி பிரச்னையும் ஏற்படும் என்று தெரிகிறது. இதனால், தி.மு.க கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்துக்கு இடம் கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதே நேரத்தில், தி.மு.க கூட்டணியில், தொகுதிப் பங்கீடு நிறைவு பெறாததால் வெளிநாட்டு ஷூட்டிங்கைகூட கமல்ஹாசன் தள்ளி வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கடசி அலுவலகத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் நாளை (07.03.2024) ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என ம.நீ.ம பொதுச்செயலாளர் அருணாச்சலம் அறிவுறுத்தியுள்ளார். நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கமல்ஹாசன், தேர்தல் நிலைப்பாடு மற்றும் தேர்தல் கூட்டணி குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kamalhaasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment