தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரு கட்சிகள் எழுதி இயக்கும் அரசியல் நாடகத்தில் எந்தப் பாத்திரமும் வேண்டாம் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடாது என்றும் அறிவித்துள்ளார்.
சினிமாவில் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கி அரசியலில் நுழைந்து வலம் வருகிறார். கமல்ஹாசனின் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கடந்த மக்களவைத் தேர்தலில், போட்டியிட்டு, ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாவிட்டாலும் கனிசமான வாக்குகளைப் பெற்றது.
இருப்பினும் மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாமல் தவிர்த்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “என் தமிப்பெருங்குடும்பத்தாருக்கும், மக்கள் நீதியின் மய்யத்தாருக்கு வணக்கம். இப்பெரு மய்யத்தின் குழு கூட்டமாகி பெருகி இன்று மக்கள் சக்தியாக மாறிவிட்டது. இதுவே நமது நேற்றைய விமர்சகர்களை இன்றைய ஆதரவாளர்களாக மாற்றியிருக்கிறது என்பது இனிய உண்மை. நம்மைப் பற்றி ஹாஸ்யமும் ஹேஸ்யமும் ஜோசியமும் பேசியவர்கள் இன்று நம் நலம் விசாரிக்கத் துவங்கிவிட்டார்கள்.
“தமிழ்நாட்டில் நிகழ இருக்கும் உள்ளாட்சித் தேர்தல் முழுமையான மக்களின் தேர்தலாக இருக்கப் போவதில்லை என்பது அனைவரும் அறிந்ததே. இந்த உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பங்குபெறுவதால் கிட்டக்கூடிய முன்னேற்றம் சொற்பமானது. மாற்றத்தை லட்சியமாகக் கொண்டுள்ள மக்கள் நீதி மய்யம் அதைத் தவணை முறையில் கொஞ்சம் கொஞ்சமாக பெறுவதில் எந்தச் சாதனையும் இல்லை. மக்கள் நீதி மய்யத்தின் வெற்றிக்கான வித்து சாதுர்யமோ, பணபலமோ அல்ல. நேர்மையும் மக்கள் பலமுமே ஆகும்.
இத்தேர்தலில் மக்கள் பங்கீடு மிகக் குறைவாக இருக்கும் என்பது உறுதியாகிவிட்டது. ஊழல் கட்சிகள் தங்களுக்குள் போட்டுக்கொண்ட வியாபாரப் பங்கீடுகள் மட்டுமே அறங்கேறப்போகிறது என்பதே பகிரங்கப் படுத்தப்படாத நிஜம். மக்கல் நலன் நோக்கியப் பயணமாக இந்த உள்ளாட்சித் தேர்தல் இருக்கப் போவதில்லை. ஆதலால், மக்கள் நீதி மய்யத்தார், ஏற்கெனவே இரு கட்சிகள் எழுதி இயக்கும் அரசியல் நாடகத்தில் எந்தப் பாத்திரத்தையும் ஏற்கமாட்டோம் என்பதே நமது பிரகடனமாக இருக்க வேண்டும். இதுவே என் ஆசையும் அறிவுரையும் ஆகும்.
வரும் 50 வாரங்களில் மக்கள் நலம் பேணி நற்பணிகள் செய்வோம். நாளை பறக்கப்போகும் நம் வெற்றிக்கொடியே தமிழகத்தின் அன்னக்கொடியுமாகும் என்பதை மக்கள் உணரச் செய்வோம். இதை மக்கள் திண்ணமாக நம்பவும் வைப்போம். 2021 தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதே நம் நம் லட்சியமாக இருப்பின் வெற்றி நிச்சயம்” என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.