மீனவர்கள் வாழ்வாதார பாதுகாப்பு – அரசுக்கு கமல்ஹாசன் கட்சி கோரிக்கை

Kamalhaasan statement : மீனவர் படகால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத சூழலில் மீனவர்கள் மீது விதிக்கப்படும் சாலை வரியும் பசுமை வழி வரியும் நீக்கப்பட வேண்டும்.

By: July 21, 2020, 4:53:32 PM

மீனவர்களின் பாதுகாப்பையும், வாழ்வாதாரத்தையும் இனிவரும் நாட்களில் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

மீனவர்களின் பாதுகாப்பு தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மீண்டும் ஒரு பேரிடரை எதிர்கொள்ள தயாரா..? மழை ஆரம்பித்து விட்டது. புயல் சின்னங்கள் நிலை கொள்ளும். மீண்டும் முன்பே நாம் எதிர் கொண்ட பிரச்சினைகள் செய்திகளாகும். சுனாமி, பெருமழை, பெருவெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களினால் சமுதாயத்தில் முதலில் பாதிக்கப்படுவது மீனவச்சமுதாயமே.

ஒவ்வொரு பேரிடரின் போதும் படகுகள் காணாமல் போவதும், உயிரிழப்புகள் ஏற்படுவதும் முடியாத் தொடர்கதையாகவே உள்ளது.
குறிப்பாக, கடந்த 2017 நவம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில், அரபிக் கடலில் வீசிய ஒக்கி புயல் தமிழக மற்றும் கேரள கடலோர மாவட்டங்களை நிலைகுலைய செய்தது. இதில், குமரி மாவட்டத்தின் மீனவ கிராமங்களில் மட்டும் 2,000-க்கும் அதிகமான மீனவர்கள் காணாமல் போயினர்.

அப்போது, மத்திய, மாநில அரசுகள் எடுத்த பேரிடருக்கு முன் மற்றும் பின்னரான நடவடிக்கைகள், பல்வேறு தரப்பினரின் விமர்சனத்துக்கும், மீனவ மக்களின் கோபத்துக்கும் உள்ளானது.

குறைந்தது 100 நாட்டிக்கல் மைல்கள் (1 நாட்டிக்கல் = 1.820 கி.மீ.) தூரம் தாண்டி மீன்பிடிக்கும் பழக்கம் கொண்ட மீனவர்களை, 50 நாட்டிகல் மைல் வரை மட்டுமே தேடிய கப்பல்படை, தாமதமாக அறிவிக்கப்பட்ட புயல் சின்னம், கரை ஒதுங்கிய மீனவர்கள் மற்ற மீனவர்களை பற்றி கொடுத்த தகவலை புறக்கணித்தது, கடற்கரை ஓரமாய் வந்து மீனவர்களை சந்திக்காமல் சென்ற மத்திய அமைச்சர் என இப்புயலில் சிக்கி தவித்து வந்தவர்கள் கூறிய தகவல்கள், மத்திய, மாநில அரசுகள் மற்றும் கடலோர காவல்படை துரிதமாக செயல்பட்டு இருந்தால் நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை காப்பாற்றி இருக்கலாம் என்பதையே உணர்த்தியது.

தற்போது பருவ மழை தொடங்கியுள்ள சூழலில் மீண்டும் ஒரு புயலுக்கான சூழல் உருவாகலாம்.

எனவே அரசு கடந்த காலங்களில் செய்த அலட்சியப்போக்கை கைவிட்டுவிட்டு, ஆழ்கடல் மீன்பிடி தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய மக்கள் நீதி மய்யம், பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறது.

1. கடல் அரிப்பு

பழவேற்காடு முதல் நீரோடி வரை உள்ள அனைத்து மீனவர் கிராமங்களில் கடல்நீர் உள்புகுவதை தடுப்பதற்கு பாறைக்கற்களுக்கு பதிலாக, ஆறு மூலை கான்கிரீட் போடவேண்டும்.

2. ரேடியோ தொலைபேசி

பேராபத்துகளில் மீனவர்களை காப்பாற்ற வழங்கப்படும் சேட்டிலைட் போன் மோசமான வானிலையின் போது சிக்னல் இழப்பதால், அனைத்து ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளுக்கு ரேடியோ டெலிபோன் வழங்க வேண்டும். மீனவர்கள் இறந்த பிறகு பல லட்ச ரூபாய் நிவாரணமாக வழங்குவதை விட, அவர்களது உயிரை காப்பாற்றும் அத்தியாவசிய உயிர் பாதுகாப்பு கருவிகளை வழங்க அரசு முன்வர வேண்டும்.

3. மிதவை கவசம் (Life jacket)

கடலில் செல்லும் அனைத்து மீனவர்களுக்கும், தங்கள் உயிரை பாதுகாக்க ஏதுவாக பாதுகாப்பு கவசத்தை அரசே வழங்க வேண்டும்.

4. தொலைத்தொடர்பு மையம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சக்திவாய்ந்த தொலைத்தொடர்பு மையம் ஏற்படுத்த வேண்டும். இது ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்கும் மீனவர்களை, அவசர நேரங்களில் தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும். முன் அனுபவமும், தகுதியுள்ள மீனவர்களை இம்மையத்தில் வேலைக்கு அமர்த்த வேண்டும்.

5. பேரிடர் மீட்பு குழு

தமிழகத்தில் உள்ள அனைத்து துறைமுகங்களிலும் பேரிடர் காலங்களில் கடலில் காணமல் போகும் மீனவர்களை உடனே மீட்பதற்கு, அப்பபகுதி மீனவர்களைக் கொண்ட பேரிடர் கால மீட்புக் குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இக்குழுவில் தகுதியும் அனுபவமுள்ள அந்தந்தப் பகுதி மீனவர்களை கண்டறிந்து, பணியமர்த்த வேண்டும். ஒரு ஹெலிகாப்டர் மற்றும் அதிவேக மீட்பு படகுகள் இந்த குழுவுக்கு வழங்கப்பட வேண்டும்.

6. கடல் ஆம்புலன்ஸ்

மீனவர்கள் விபத்தில் காயமுற்றாலோ, மீன் பிடிக்கும் போது நோயினால் பாதிக்கப்பட்டாலோ அவர்களுக்கு உடனடி மருத்துவ சேவை வழங்க கடல் ஆம்புலன்ஸ் அமைக்க வேண்டும். ஆழ்கடலில் இறக்க நேரிட்டால் அவர்களது உடலை விரைந்து குடும்பத்தாரிடம் ஒப்படைக்க அமரர் ஊர்தி ஒன்றும் வழங்கப்பட வேண்டும்.

7. இழுவை படகுகள்

மீனவர்களின் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு கடலில் பழுதாகி நின்றால், அதனை மீட்டுவர இழுவைப்படகு அல்லது இழுவை கப்பல் வழங்கப்பட வேண்டும்.

8. வரி சலுகை

கடலில் இல்லாத சாலைக்கு சாலை வரி எதற்கு? தவிர மீனவர் படகால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத சூழலில் மீனவர்கள் மீது விதிக்கப்படும் சாலை வரியும் பசுமை வழி வரியும் நீக்கப்பட வேண்டும்.

மீனவர்களுக்கு ஒவ்வொரு மீன்பிடி துறைமுகத்திலும் அரசு எரிபொருள் விநியோகம் செய்ய அரசு முன்வர வேண்டும்.

9. கடற்படையில் மீனவ இளைஞர்கள்

நடுக்கடலில் நீந்துவது, நீச்சல் குளத்தில் நீந்துவது போல் அல்ல என்பதை உணர்ந்து கடல்படையில், தகுதியான கடற்பகுதிகளை சார்ந்த இளைஞர்கள் சேருவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

இலங்கை கடற்படையால் மீனவர்கள் உயிரிழந்த போதும், மாயமான போதும், ஆயிரக்கணக்கில் மீனவர்கள் காணாமல் போனபோதும் கண்டுகொள்ளாமல் கடந்து செல்லும் போக்கை கடைப்பிடிக்கும் அரசின் செயலற்ற தன்மையினை இனி ஒரு போதும் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை அரசு உணரவேண்டும்.

தேசத்தின் கடல்சார் வர்த்தகம் 2019 இல் சுமார் 60 ஆயிரத்து 881 கோடி மதிப்பு கொண்டது. அதில், தமிழகம் முதலிடத்தில். மீனவர்களின் பங்கு இப்படியிருக்க, மீனவர்கள் தங்கள் உயிரை முதலீடாக வைத்து செய்யும் இந்த தொழிலில் அரசு மேலே குறிப்பிட்ட கோரிக்கைகளை போர்க்கால அடிப்படையில் நடைமுறைப்படுத்தி, இனிவரும் நாட்களில் மீனவர்களின் பாதுகாப்பையும், வாழ்வாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி வலியுறுத்துகிறது” இவ்வாறு கமல்ஹாசன் அதில் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Kamal haasan makkal needhi maiam tamilnadu fishermen safety ooki cyclone disaster management

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X