2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் அறிவித்தார்.
கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு இன்று (டிசம்பர் 22) சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் நீதி மய்யம் செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பின்னர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘2019 நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும். இதற்காக கூட்டணி அமைப்போம். ஆனால் ஒத்தக் கருத்துள்ள கட்சிகளுடன் தான் சேருவது என்பதில் நானும் எங்கள் கட்சி நிர்வாகிகளும் உறுதியாக இருக்கிறோம். குறிப்பாக தமிழ்நாட்டின் மரபணுவை மாற்றத் துடிக்கிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க மாட்டோம்’ என்றார்.
கமல்ஹாசன், தமிழ்நாட்டில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளிடம் இருந்தும் விலகியே இருந்து வருகிறார். ஒரு முறை டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சென்று சந்தித்து பேசினார். எனவே காங்கிரஸ் அணியில் இடம் பெற அவருக்கு விருப்பம்தான். ஆனால் கமல்ஹாசனை அந்த அணியில் சேர்க்க திமுக.வும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.
அண்மையில் கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு ரஜினிகாந்த் மற்றும் சினிமாப் பிரபலங்கள் பலர் வருகை தந்தனர். ஆனால் கமல்ஹாசன் ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளை சுட்டிக்காட்டி அந்த நிகழ்ச்சியை தவிர்த்தார். இப்போதே திமுக.வுடன் நெருக்கம் காட்டி, பின்னர் விலகினால் அந்தக் கட்சியை விமர்சிப்பதில் பின்னாளில் நெருடல் ஏற்படும் என்பதற்காகவே கமல் விலகி நிற்பதாக கூறுகிறார்கள்.
இன்னொரு தரப்பினரோ, கமல்ஹாசனை இணைத்தால் நிறைய தொகுதிகளை கேட்பார் என்பதற்காகவே அவரை ஒரு சக்தியாக அங்கீகரிக்காமல் திமுக ஒதுக்கி வைக்கிறது என்கிறார்கள். எனவே திமுக - காங்கிரஸ் அணியில் இணைவாரா, அல்லது தனி அணி கட்டுவாரா? என்பதுதான் கமல்ஹாசனை சுற்றியுள்ள கேள்வி!
இந்தத் தருணத்தில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம் என அவர் அறிவித்திருப்பது முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.