கமல்ஹாசன் அறிவித்த ரயில் நிலைய சந்திப்புகள் ரத்து: ‘ரயில் மேடையல்ல என்பதை நாமறிவோம்’

கமல்ஹாசன் அறிவித்த ரயில் நிலைய சந்திப்புகள் ரத்தானது. ‘ரயில் மேடையல்ல என்பதை நாமறிவோம். திருச்சியில் சந்திப்போம். நாளை நமதே!’ என கூறியிருக்கிறார்.

கமல்ஹாசன் அறிவித்த ரயில் நிலைய சந்திப்புகள் ரத்தானது. ‘ரயில் மேடையல்ல என்பதை நாமறிவோம். திருச்சியில் சந்திப்போம். நாளை நமதே!’ என கூறியிருக்கிறார்.

கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் சார்பில் திருச்சியில் ஏப்ரல் 4-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்துகிறார். மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சென்னையில் பொதுக்கூட்டம் நடத்திய கமல்ஹாசன், ‘இது எண்ணிக்கையை காட்ட வந்த கூட்டம் அல்ல. எண்ணிப் பார்க்க வேண்டுமென்றால் திருச்சிக்கு வாருங்கள்’ என்றார்.

கமல்ஹாசன் தனது திருச்சி பொதுக்கூட்டத்தை மாநாடாக நடத்த திட்டமிட்டிருப்பதையே அப்படி உணர்த்தினார். இதற்கிடையே 4-ம் தேதி திருச்சி பொதுக்கூட்டத்திற்காக 3-ம் தேதியே சென்னையில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக திருச்சிக்கு கிளம்புகிறார் கமல்ஹாசன். சென்னை தாம்பரத்தில் இருந்து திருச்சி வரை முக்கிய ரயில் நிலையங்களில் கட்சியினரின் வரவேற்பை ஏற்கவும், அவர்களை சந்திக்கவும் கமல்ஹாசன் திட்டமிட்டிருந்தார்.

கமல்ஹாசன் தனது கட்சி சார்பில் நேரம் வாரியாக இதை அதிகாரபூர்வ அறிக்கையாக வெளியிட்டார். ஒரு திடலில் கூட்டம் நடத்துவதாக இருந்தாலும்கூட முறையாக போலீஸ் அனுமதி பெறவேண்டும். ஆனால் ஆயிரக்கணக்கில் பயணிகள் கூடுகிற ரயில் நிலையங்களில் தனது கட்சியினரை சந்திக்க இருப்பதாக கமல்ஹாசன் அறிவித்தது சர்ச்சையை கிளப்பியது.

கமல்ஹாசனின் அந்த அறிவிப்பால், பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் என்கிற விமர்சனங்களும் வந்தன. இதைத் தொடர்ந்து தாம்பரம் டூ திருச்சி முக்கிய ரயில் நிலையங்களில் தொண்டர்களை சந்திப்பதாக இருந்த நிகழ்ச்சிகளை கமல்ஹாசன் ரத்து செய்தார்.

கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் இது தொடர்பாக கூறியிருப்பதாவது : ‘மக்களுடன் நான் கலக்கவிருந்த பயணத்தை அரசியலாக்குகிறார்கள் . அதற்கு ரயில் மேடையல்ல என்பதை நாமறிவோம். மக்கள் நலனை மய்யமாகக் கொண்ட கட்சி இது. ரயில் நிலையங்களில் பயணிகளுக்கும் மக்களுக்கும் இடையூறின்றி செய்து விடுவோம் திருச்சியில் சந்திப்போம். நாளை நமதே’.
இவ்வாறு ட்விட்டரில் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.

 

×Close
×Close