நடிகர் கமலஹாசன் நேற்று இரவு திமுக தலைவர் கருணாநிதியை, நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
நடிகர் கமலஹாசனின் அரசியல் பயணம் இன்னும் இரண்டு நாட்களில் துவங்க உள்ளது. வரும் 21 ஆம் தேதி ராமேசுவரத்தில் உள்ள மறைந்த அப்துல்காம் வீட்டில் இருந்து கமல் தனது அரசியல் பயணத்தை தொடங்கி, அங்கிருந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து நேரில் உரையாடுகிறார். தமிழக அரசியல் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியிருக்கும் கமலின் இந்த அரசியல் பிரவேசம் நாளுக்கு நாள் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், நேற்று இரவு, கோபாலபுரம் சென்ற கமல், திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். கோபாலபுரம் இல்லத்துக்கு சென்ற நடிகர் கமல்ஹாசனை தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் வரவேற்றார். அதன் பின்பு, திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து தனது அரசியல் பயணம் குறித்து தெரிவித்துள்ளார். கமலின் இந்த திடீர் பயணம், தமிழக அரசியல் களத்தில் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2018/02/3-1-300x225.jpg)
சந்திப்புக்கு பின்பு, செய்தியாளர்களை சந்தித்த கமலஹாசன் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். இதுக் குறித்து பேசிய அவர், ”அரசியல் பயணத்துக்கு செல்வதால் எனக்கு பிடித்தவர்களை சந்தித்து வாழ்த்து பெறுகிறேன். எனது அரசியல் பயணம் குறித்து கருணாநிதியிடம் தெரிவித்தேன். கருணாநிதியின் அறிவுக்கூர்மை, தமிழ் மற்றும் தமிழக மக்களின் பால் உள்ள அக்கறை ஆகியவற்றை கண்டு நான் பலமுறை வியந்திருக்கிறேன். அத்துடன் நான் பல விதமான அரசியல் கொள்கைகளை தெரிந்துகொண்டு அவற்றில் இருந்து சிறந்தவற்றை எடுத்துக்கொள்வேன். கருணாநிதியிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது” என்றார்.
/tamil-ie/media/media_files/uploads/2018/02/2-2-300x217.jpg)
திமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கமல், “என்னுடைய கொள்கையை திமுக புரிந்த பின் கூட்டணி குறித்து யோசிக்கலாம். தேசிய கீதத்தில் திராவிடம் இருக்கும் போது, என் கொள்கையிலும் திராவிடம் இருக்கும்” என்று சூசகமாக பதில் அளித்தார்.
இதனிடையில், காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பாக திமுக அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கமலை அழைத்ததாகவும் அவரும் கலந்துகொள்வதாக உறுதியளித்துள்ளதாக திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மேலும், இந்த கூட்டத்திற்கு அதிமுக மற்றும் பாஜகவிற்கும் அழைப்பு விடுத்துள்ளதாக ஸ்டாலின் கூறினார்.