ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25-ம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க உள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் உடன் சந்தித்துள்ளார். “புதிய பயணத்தை நண்பர் ரஜினிகாந்த் உடன் பகிர்ந்தேன்; மகிழ்ந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா ரசிகர்களால் உலக நாயகன் என கொண்டாடப்படும் கமல்ஹாசன், 2018-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி அரசியலில் நுழைந்தார். 2019, 2021 என 2 தேர்தல்களிலும் ஒரு இடத்தில்கூட மநீம வெற்றி பெறவில்லை. இந்நிலையில், 2024-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு கமல்ஹாசன் ஆதரவு அளித்தார். கமல்ஹாசனுக்கு ராஜ்ய சபா எம்.பி சீட்டு அளிப்பதாக உடன்பாடு செய்யப்பட்டது. அதன்படி, தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் கமல்ஹாசன் ராஜ்ய சபா எம்.பி-யாகத் தேர்வு செய்யப்பட்டார். மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கான சான்று கமல்ஹாசனுக்கு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25-ம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கிறார் என்ற அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க உள்ள நடிகர் கமல்ஹாசன், இன்று (16.07.2025) நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்துள்ளார்.
இது குறித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்டிருப்பதாவது: “புதிய பயணத்தை நண்பர் ரஜினிகாந்த் உடன் பகிர்ந்தேன். மகிழ்ந்தேன்.” என்று தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், தனது உடல்நிலை காரணமாக அரசியல் பிரவேசத்தை கைவிடுவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.