கமல்ஹாசன் திட்டம் என்ன? மீண்டும் கேரள முதல்வருடன் சந்திப்பு!

கமல்ஹாசன் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தையே தமிழக இடதுசாரிகள் புறக்கணித்த நிலையில், பினராயி விஜயன் வருவாரா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

கமல்ஹாசன் மீண்டும் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார். தமிழகத்தில் இடதுசாரிகள் கைவிட்ட நிலையில், பினராயி சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கும் முன்பு கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அவரது கட்சித் தொடக்க விழாவுக்கு பினராயி வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வரவில்லை.

கமல்ஹாசன், விவசாயிகள் பிரச்னைக்காக நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தினார். இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமையில் அந்தக் கூட்டம் நடைபெறும் என முதலில் அறிவித்திருந்தார். ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், அதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை விட்டார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில், ‘திமுக.வுடன் தோழமையாக உள்ள 9 கட்சிகளும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை’ என்றார்.

தமிழ்நாட்டில் இடதுசாரிகள் இப்படி கமல்ஹாசனை கைகழுவிவிட்ட நிலையில், இன்று (மே 20) கேரளா சென்றார் கமல்ஹாசன். தனியார் தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காககொச்சி சென்றார் அவர். அங்கு பிற்பகலில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயனை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் அரசியல் பற்றியும், காவிரி பிரச்சினை குறித்தும் பேசினர்.

ஏற்கனவே, நீட் தேர்வு எழுத கேரளா சென்ற தமிழக மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு உதவிகள் செய்ததற்கு நன்றி தெரிவித்து இருந்தார். விரைவில் கோவையில் கமல்ஹாசன் நடத்த இருக்கும் நிகழ்ச்சிக்கு பினராயி விஜயனை கமல்ஹாசன் அழைத்ததாக தெரிகிறது.

கமல்ஹாசன் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தையே தமிழக இடதுசாரிகள் புறக்கணித்த நிலையில், பினராயி விஜயன் வருவாரா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

 

×Close
×Close