மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7வது ஆண்டு தொடக்க நாளான நாளை மறுநாள் (பிப்.21) புதன்கிழமை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கொடியேற்றி வைத்து உரையாற்ற உள்ளார். இதற்கான அக்கட்சியின் அறிக்கையில், "தாய்மொழி தினத்தில் (பிப்.21) பிறந்த மக்கள் நீதி மய்யம் கட்சி மக்களவைத் தேர்தல் களத்தில் வெல்லும். வரலாறு அதைச் சொல்லும். நாடாளுமன்றத்தில் நம்மவர்" என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்று செய்திகள் வெளியாகி வருகிறது. கமல் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறுவார் என்றும், தமிழக காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்களில் கமல் போட்டியிட வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர் ராகுல் காந்தியுடன் சமீப காலத்தில் கமல் காட்டிய நெருக்கம் அதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து திரும்பிய கமல் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், "தக் லைப் படத்தின் முன்னேற்பாடுகளுக்காக அமெரிக்கா சென்றிருந்தேன். அதை முடித்துவிட்டு தமிழகம் திரும்பியுள்ளேன். இன்னும் இரண்டு நாட்களில் நல்ல செய்தியுடன் சந்திக்கிறேன். நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் நன்றாக சென்றுகொண்டிருக்கிறது. கூட்டணி குறித்த தகவல்களை இரண்டு நாட்களில் சொல்கிறேன்." என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“