நடிகர் கமல்ஹாசன், கடந்த 2018ம் ஆண்டு மதுரையில் தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார். மதுரையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் 'மக்கள் நீதி மய்யம்' என்று கட்சியின் பெயரை அறிவித்து, கொடியையும் அறிமுகம் செய்தார்.
கடந்த மக்களவை தேர்தலில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், 3.72 சதவீத வாக்குகளை பெற்றது. ஆனால், நகர்ப்பகுதிகளில் அவருக்கு இருந்த செல்வாக்கு கிராமப்புறங்களில் கிடைக்கவில்லை.
இருப்பினும், அடுத்து வரும் தேர்தல்களில் கமல்ஹாசன் தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார். அதற்கான வலிமை அவரிடம் இருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதையடுத்து கட்சியை பலப்படுத்தும் வேலையில் கமல்ஹாசன் இறங்கியுள்ளார். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய கட்டமைப்பு விளக்க கூட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது. அதில் மக்கள் நீதி மய்யத்தின் தென் மாவட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
டிவி சேனல் தொடங்கப்படும்: மகேந்திரன்
இந்தக் கூட்டத்தில் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் சிறப்புரை ஆற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, 'தமிழகத்தில் வரும் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பெருவாரியான தொகுதிகளைக் கைப்பற்றி, ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இதற்கான பிரச்சாரத்தை வரும் நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசன் தொடங்குகிறார். இதற்காக பெரிய அளவில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் அளவிற்கு மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வலிமை உள்ளது. இதற்கு கடந்த மக்களவை தேர்தல் முடிவுகளே உதாரணம். உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை, முதலில் அறிவிப்பு வெளியாகட்டும். அதன் பின்னர் போட்டியிடுவது பற்றி கட்சி முடிவெடுக்கும். புதிய நிர்வாகிகள் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. எங்கள் கட்சிக்கு புதிதாக தொலைக்காட்சி தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்கான பணிகள் நடந்து வருகிறது" என்று கூறினார்.
அந்த வகையில், நதியின் பெயரை கொண்ட ஒரு சேனலை கமல் கட்சி சார்பில் வாங்கி இருப்பதாகவும், கமலின் பிறந்தநாள் முதல் இந்த டிவி சேனல் புதிய பரிமாணத்தோடு களமிறங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில், ஒரு பிரபல தமிழ் சேனலில் இருந்து பணியாளர்கள் திடீரென்று நீக்கப்பட்டு, நிதிப் பற்றாக்குறை காரணமாக சேனலும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சேனலை கமல்ஹாசன் வாங்கியிருக்கிறார் என்றே கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
முன்னதாக இன்னும் கட்சியே தொடங்காத ரஜினிகாந்தும் தனியாக டிவி சேனல் தொடங்க உள்ளதாக கடந்தாண்டு செய்திகள் வெளியானது. 'சூப்பர்ஸ்டார் டிவி’, ‘ரஜினி டிவி’ ‘தலைவர் டிவி’ என்ற பெயரில் டிரேட்மார்க் பதிவு செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.