Kamal Haasan | Makkal Needhi Maiam: நடிகர் கமல்ஹாசன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக ராமேஸ்வரத்தில் தனது பயணத்தை தொடங்கி மதுரையில் தனது கட்சி பெயரை அறிவித்தார். தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற முனைப்போடு மக்கள் நீதி மய்யம் என்று தனது கட்சிக்கு பெயர் வைத்தார்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்க விழா சென்னையில் இன்று நடைபெற்றது. அப்போது கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நான் முழு நேர அரசியல்வாதி அல்ல என்ற விமர்சனத்தை முன் வைக்கின்றனர். முழு நேர அரசியல்வாதி என்று யாரும் இல்லை. முழு நேர குடிமகனாக இருந்து ஓட்டுப்போடாதவர்கள்தான் என்னை கேள்வி கேட்கின்றனர். கோவை தெற்கு தொகுதியில் 90 ஆயிரம் பேர் ஓட்டு போடவில்லை. அவர்கள்தான் நான் தோல்வியடைய காரணம். நாட்டில் 40 சதவீதம் மக்கள் வாக்களிப்பதே இல்லை.
டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை தடுக்க ஆணிப்படுக்கை போட்டு இருக்கிறார்கள். எதிரிப்படையை நடத்துவதுபோல மத்திய அரசு நடத்துகிறது. விவசாயிகளுக்கு மாநில அரசு செய்ததை கூட மத்திய அரசு செய்யவில்லை. தெற்கு தேய்ந்தால் கூட பரவாயில்லை என்று நினைப்பவர்கள்தான் மத்தியில் இருக்கிறார்கள்.
நான் கோபத்தில் அரசியலுக்கு வந்தவன் அல்ல சோகத்தில் வந்தவன். என்னை அரசியலுக்கு வர வைப்பது கடினம் என்றார்கள். ஆனால் போக வைப்பது அதைவிட கடினம். எனது சொந்த காசில்தான் அரசியல் செய்து வருகிறேன். கட்சியை ஆரம்பித்ததால் எனக்கு எந்த லாபமும் இல்லை, நஷ்டம் தான். என்னுடைய அரசியல் பயணம் ஆரம்பித்து விட்டது. அதில் அழுத்தமாக நடைபோடுவேன். ஓட்டுக்காக காசு வாங்குவதை நிறுத்தினால் ஏழ்மை ஒழியும்.
அதிக வரி செலுத்தும் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு திருப்பி தருவது 29 பைசா தான். அனைத்து மாநிலங்களுக்கும் சமநிலையான நிதி பகிர்வு வேண்டும். 6 ஆண்டு கால அரசியல் பயணம் எனக்கு நிறைய அனுபவத்தை கற்றுக்கொடுத்துள்ளது. மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்போம். எல்லா கட்சியும் ஒன்று சேர்ந்தால்தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும். நல்ல செய்தி தாமதமாகத்தான் வரும்." என்று கூறினார்.
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் சேருமா? என்ற கேள்விக்கு, “நான் ஏற்கனவே கூறியது படி, நீங்கள் கட்சி அரசியலை மழுங்கடித்து தேசத்தைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது. தேசத்தைப் பற்றி தன்னலமின்றி சிந்திக்கும் கட்சியுடன் தான் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கும். உள்ளூர் நிலப்பிரபுத்துவ அரசியல் செய்பவர்களுடன் கைகோர்க்க மாட்டோம்." என்று கூறினார்.
மக்கள் நீதி மய்யம் இந்தியா கூட்டணியில் குழு சேர்ந்துவிட்டதா என்று கேட்டதற்கு, "இல்லை" என்றார். தனது கட்சியின் சாத்தியமான அரசியல் கூட்டணி குறித்து, "விவாதங்கள் நடைபெற்று வருகின்றன" என்றும், இது தொடர்பாக எந்த "நல்ல செய்தியும்" ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் கமல்ஹாசன் கட்சி ஈடுபட்டுள்ளதாக ஊகங்கள் எழுந்துள்ள நிலையில் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது.
மக்கள் நீதி மய்யம் முன்பு 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 தமிழக சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொண்டது, ஆனால் ஈர்க்கக்கூடிய அளவில் வாக்குகளை பெற தவறிவிட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.