Advertisment

‘என்னுடைய அரசியல் எதிரி இதுதான்; அதை அரசியலில் இருந்து நீக்க வேண்டும் - கமல்ஹாசன் ஓபன் டாக்

இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் நீலம் புத்தக நிலையத்தை நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் திறந்துவைத்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kamal Haasan open talks

கமல்ஹாசன்

இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் நீலம் புத்தக நிலையத்தை திறந்து வைத்துப் பேசிய மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன், “என்னுடைய அரசியல் எதிரி சாதி தான் என்றும் அரசியலில் இருந்து சாதியை நீக்க வேண்டும்” என்று கூறியது கவனத்தைப் பெற்றுள்ளது.

Advertisment

இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னையில் நீலம் புத்தக மையம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நீலம் புத்தக நிலையத்தை மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் திறந்து வைத்தார்.

நீலம் புத்தக நிலையத்தைத் திறந்து வைத்த கமல்ஹாசன் பேசியதாவது; “உயிரே உறவே வணக்கம், இது நான் என்னுடைய மேடைப் பேச்சுகளில் உபயோகிக்கும் வார்த்தைகள் என்றாலும், இதுதான் என் வாழ்க்கையின் உண்மைத் தத்துவம்.

அலங்காரத்துக்காக சொல்லும் வார்த்தை அல்ல. இதுதான் நான் உயிர்வாழ்வதற்கான காரணம். இந்த உறவு இருந்தால்தான் நான் நிமிர்ந்து நிற்க முடியும். என் மொழி இருந்தால்தான் நான் இவர்களுடன் அளவளாவ முடியும்.

இது மூன்றையும் காக்க வேண்டியது என் கடமை. இவர் (பா. ரஞ்சித்) நிறைய சினிமா எடுத்திருக்கிறார். நான் அந்த விழாவிற்காக எல்லாம் வரவில்லை. அதையெல்லாம்விட ஒரு முக்கியமான விஷயம், நானும் இவரும் இல்லாதபோதும் இருக்கப்போகும் ஒரு தாக்கம், நான் எப்படி 36 வருடங்களுக்கு முன்னாடி, 26 இதழ்களே மட்டும் நடத்தி முடித்த மய்யத்தை பற்றிய பேச்சு இன்றும் இருக்கிறதோ, அதே போன்று, இங்கே நம் சரித்திரத்தைச் சொல்லும்போது, முயன்றார்கள், பலர் முயன்றார்கள், அதில் நீலம் என்கிற ஒரு பண்பாட்டு மையம் இயங்கிக் கொண்டிருந்தது என்று சொல்வார்கள். நீங்கள் எத்தனை காலம் இயங்கிக்கொண்டிருந்தீர்களோ உங்களுக்கு அத்தனை நூற்றாண்டு ஆயுள்.

இங்கே உள்ளே பேசிக்கொண்டிருக்கும்போது சொன்னேன், அரசியல் என்பது தனியாகவும் கலாச்சாரம் என்பது தனியாகவும் வைத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் நாம் இருக்கிறோம். ஆனால், நாம் உருவாக்கியதுதான் அரசியல், மக்களுக்கானதுதான் அரசியல்.

அதை திருப்பிப்போட்டு தலைகீழாகப் பிடித்துக் கொண்டிருக்கிறோம். ஆளும் கட்சி, ஆள்பவர்கள் என்னும் வார்த்தையே இனி வரக்கூடாது என்று நான் நினைக்கிறேன். நாம் நியமித்தவர்கள் அவர்கள் என்ற எண்ணம் மக்களுக்கு வரும் பட்சத்தில், ஜனநாயகம் நீடூழி வாழும். அப்படியில்லாமல், தலைவனை வெளியே தேடிக்கொண்டிருக்கும் தலைவர்கள் பலர் இங்கே கீழே குடிமகன்களாக அமர்ந்திருக்கிறார்கள்.

அவர்கள் தன் அளவில் தலைவன்தான், என்பதை உணரும் பட்சத்தில் விரைவில் உலகில் மிகப்பெரிய ஜனநாயகமாக இந்தியா வரக்கூடும்.

என்னுடைய முக்கியமான அரசியல் எதிரி என்று பார்க்கும்போது, அது சாதிதான். நான் அதை இன்றைக்கு சொல்லவில்லை. 21 வயது பையனாக இருந்தபோதே நான் சொல்லிக்கொண்டிருந்தேன். இப்போது அதை நல்ல வார்த்தைகளில் இன்னும் பலமான வார்த்தைகளில் சொல்லும் அளவுக்கு பக்குவம் எனக்கு வந்திருக்கிறது.

வேறு கருத்து மாறவே இல்லை. சக்கரத்திற்குப் பிறகு, மனிதனின் மாபெரும் சிருஷ்டி கடவுள். அதை மறந்துவிடாதீர்கள். நம்முடைய உருவாக்கம் நம்மையே தாக்குவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. அதில் கொடூமான ஆயுதம் இந்த சாதி. அதை அரசியலில் இருந்து நீக்க வேண்டும் என்று எனக்கு 3 தலைமுறை தள்ளி இருந்த அம்பேத்கர் ஆரம்பத்திலிருந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இன்றும் நடந்தபாடில்லை. அந்த தொடர்போராட்டத்தின் ஒரு நீட்சியாகத்தான் நான் நீலம் பண்பாட்டும் மையத்தைப் பார்க்கிறேன். எழுத்துகள் வேண்டுமானால் வேறாக இருக்கலாம். என்னைப் பொறுத்தவரைக்கும் மய்யமும் நீலமும் ஒன்றுதான்.

முயற்சி எல்லாம் ஒன்னுதான். நான் மய்யம் பத்திரிகை ஆரம்பித்தபோது அதற்கான காரணமும் அதுதான். இன்றைக்கு அதில் எழுதியிருக்கும் தலையங்கங்களைப் பார்த்து நானே வியக்கிறேன். அரசியல்வாதி ஆன பிறகு, சில சமரசங்கள் செய்துகொள்ள வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது.

25-27 வயது இளைஞனுக்கு அந்த சமரசங்கள் எதுவுமில்லை. அவர் எடுத்து வைத்த கருத்துக்கள் இன்று எனக்கு வியப்பாக இருக்கிறது. அது போல, ரஞ்சித் அவர்களுக்கு தான் ஆரம்பித்து வைத்த இந்தப் போராட்டம், அவருக்கு இன்னும் தாடியெல்லாம் எள்ளையான பிறகு, அவருடைய முயற்சிக்கு ரசிகராக மாற வேண்டும் என்று என்னுடைய வாழ்த்துகள்.” என்று கூறினார்.

இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் நீலம் புத்தக நிலையத்தை திறந்து வைத்துப் பேசிய நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன், “நாம் உருவாக்கியது தான் அரசியல், மக்களுக்கானதுதான் அரசியல். என்னுடைய அரசியல் எதிரி சாதி தான். அரசியலில் இருந்து சாதியை நீக்க வேண்டும்” என்று கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Nadu Kamal Haasan Ranjith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment