கமல்ஹாசன் ரசிகர்கள் அவரை ‘ஆழ்வார்பேட்டை ஆண்டவர்’ என அழைப்பதுண்டு. அரசியல் கட்சி ஆன பிறகு தொண்டர்களும் அப்படி அழைக்க வேண்டுமா?
கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி புதிய கட்சியை தொடங்கினார். கட்சியின் புதிய நிர்வாகிகள் இன்று(ஜூலை 12) அறிவிக்கப்பட்டனர். ‘தலைவராக உங்கள் நான்’ என தன்னை அறிவித்தார் கமல்ஹாசன்.
கமல்ஹாசனை வாழ்த்தி துண்டுச் சீட்டில் கோஷம்
கமல்ஹாசன் கட்சியில் உயர்நிலைக் குழு உறுப்பினர்களாக இருந்த பாரதி கிருஷ்ணகுமார், ஸ்ரீபிரியா, கமீலா நாசர் உள்பட 11 பேரும் செயற்குழு உறுப்பினர்களாக மாற்றி அறிவிக்கப்பட்டனர். கட்சியின் பொதுச் செயலாளராக அருணாசலம், துணைத் தலைவராக ஞானசம்பந்தன், பொருளாளராக சுரேஷ் ஆகியோரும் நியமிக்கப்பட்டார்கள்.
இதுவரை எல்லாம் ஓ.கே! இன்று இந்த புதிய நிர்வாகிகள் நியமன நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கைகளில் ஒரு துண்டுச் சீட்டு வழங்கப்பட்டது. அதுதான் அதிர்ச்சி!
கமல்ஹாசன் ... ஆண்டவர்..!
அதில் நிர்வாகிகள் அறிவிப்பு விழாவுக்கு வரும் கமல்ஹாசனை வாழ்த்தி எழுப்பும் கோஷங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. பொதுவாக போராட்டங்களில் எழுப்பப்படும் கோஷங்களை முன்கூட்டியே முடிவு செய்து எழுதி வைப்பது எல்லாக் கட்சிகளிலும் உள்ள நடைமுறை. ஆனால் ஒரு தலைவரை வாழ்த்தி எழுப்ப வேண்டிய கோஷங்களையும் எழுதி வினியோகம் செய்தது முதல் அதிர்ச்சி!
அடுத்தபடியாக, அந்த துண்டு சீட்டில் ஒருவர் சொல்ல வேண்டிய கோஷம் எவை, அனைவரும் சேர்ந்து சொல்ல வேண்டிய கோஷங்கள் எவை? என இரு பகுதிகளாக பட்டியல் இடப்பட்டிருந்தது. அதில் முதல் கோஷமே, ‘ஆள வாங்க.. ஆள வாங்க’ என ஒருவர் கூறுவார். உடனே அனைவரும், ‘ஆழ்வார்பேட்டை ஆண்டவரே ஆள வாங்க ஆள வாங்க’ என சொல்ல வேண்டும்.
‘நம்மவரே, நம்மவரே’ என ஒருவர் எழுப்பும் கோஷத்திற்கு, ‘நாளைய முதல்வர் நாளைய முதல்வர்’ என அனைவரும் பதில் கோஷம் எழுப்ப வேண்டும். இந்த முறைப்படிதான் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இது அங்கு கூடிய பத்திரிகையாளர்களை அதிர வைத்தது.
சினிமா ரசிகர்களாக இருந்த வரை அவர்கள் விருப்பம் போல கோஷம் போட்டிருக்கலாம். கமல்ஹாசன் அரசியல் தலைவர் ஆனபிறகு தன்னை ஆண்டவர் என தொண்டர்கள் கோஷம் போட்டாலும்கூட, அதை தடுப்பவராக அவர் இருந்திருக்க வேண்டும். மாறாக கட்சி நிர்வாகிகள் தரப்பிலிருந்தே ஆண்டவர் என கோஷம் போட துண்டுச் சீட்டு எழுதி கொடுப்பதை என்னவென்று சொல்வது?
அட... ஆண்டவா!