ரஜினிகாந்த் வீட்டில் அவரை கமலஹாசன் சந்தித்து பேசினார். மதுரை கூட்டத்திற்கு ரஜினியை அழைத்தார் கமல். வெற்றி பெற வாழ்த்து கூறினார் ரஜினி.
ரஜினிகாந்தும், கமலஹாசனும் திரையுலகின் போட்டியாளர்கள்! ஆனாலும் நட்பை பேணி வருகிறவர்கள். ஒரே காலகட்டத்தில் சினிமாவில் கோலோச்சியது போல, இருவரும் ஒரே காலகட்டத்தில் அரசியலிலும் நுழைகிறார்கள்.
ரஜினிகாந்த் தனது அரசியலை, ‘ஆன்மீக அரசியல்’ என அடையாளப்படுத்துகிறார். வருகிற சட்டமன்றத் தேர்தலில் தனிக் கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிட இருப்பதாகவும் ரஜினி திட்டவட்டமாக அறிவித்தார். ஆனால் கமலஹாசன், ‘தேர்தல் வெற்றி மட்டுமே இலக்கு இல்லை. தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்’ என்கிற ரீதியில் பேசி வருகிறார்.
ரஜினிகாந்தும், கமலஹாசனும் ஒரு கட்டத்திற்கு மேல் சினிமாவிலேயே இணைந்து நடிப்பதில்லை என முடிவு எடுத்தவர்கள்! அதேபோல அரசியலிலும், ‘இலக்கு ஒன்று, ஆனால் வழி வேறு’ என கூறி வருகிறார்கள். இருவரும் ஒருவரையொருவர் விமர்சிப்பதையும் கவனமாக தவிர்த்து வருகிறார்கள்.
இந்தச் சூழலில் இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்திற்கு பிற்பகலில் கமலஹாசன் வந்தார். ரஜினியை சந்தித்து சிறிது நேரம் பேசினார். வருகிற 21-ம் தேதி ராமநாதபுரத்தில் தனது முதல் அரசியல் சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்க இருப்பது குறித்து தெரிவித்த கமலஹாசன், அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ரஜினியை அழைத்தார்.
ஏற்கனவே முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன், நல்லகண்ணு ஆகியோரை சந்தித்த கமலஹாசன், அதன் தொடர்ச்சியாக ரஜினியை சந்தித்ததாகவும் தெரிகிறது. கமலஹாசனின் சுற்றுப் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த், நட்பு ரீதியாக சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தார்.
பின்னர் வெளியே வந்த கமலஹாசனிடம் இந்த சந்திப்பு குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், ‘மதுரை பொதுக்கூட்டத்திற்கு ரஜினியை அழைத்தேன்’ என்றார். ‘வருவதாக கூறியிருக்கிறாரா?’ எனக் கேட்டபோது, ‘அதை அவர்தான் முடிவு செய்யணும்’ என்றபடி கிளம்பினார் கமல்.
சற்று நேரத்தில் ரஜினிகாந்தும் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘உங்க எல்லாருக்கும் தெரியும். நண்பர் கமலஹாசன் பணத்திற்கோ, பெயருக்கோ, புகழுக்கோ அரசியலுக்கு வரவில்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்யணும், எல்லோரையும் நல்லா பார்த்துக்கணும் என்றுதான் அரசியலுக்கு வந்திருக்கிறார். அவரது எல்லாப் பயணத்திலும் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.’ என்றார் ரஜினி.
அரசியலில் போட்டியாளர்களாக இருந்தாலும், இவர்களின் சந்திப்பும் மனதார வாழ்த்துவதும் நல்ல அம்சமே!