சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனிடம், நீங்கள் பாஜகவின் B டீமா என்று கேள்வி எழுப்பியதற்கு கமல்ஹாசன் ஆவசேமாக மறுப்பு தெரிவித்தார். மேலும், ‘மனுஸ்மிருதி புழக்கத்தில் இல்லாத புத்தகம். அதைப்பற்றிய விமர்சனம் தேவையற்றது என்று கமல்ஹாசன் கூறினார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், மநீம தலைவர் கமல்ஹாசன் கடந்த 2 நாட்களாக சென்னையில் மநீம மாவட்ட செயலாளர்கள், சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார். இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு கமல்ஹாசன் அளித்த பதில்களும் விரிவாக இங்கே அளிக்கப்படுகிறது.
கேள்வி: ரஜினி அவருடைய உடல் நிலை பறி ஒரு ட்வீட் செய்திருந்தார். அவரிடம் நீங்கள் தொடர்பு கொண்டிருந்தீர்களா? அவருடைய அரசியல் நிலைப்பாடு குறித்து நீங்கள் ஏதாவது பேசியிருந்தீர்களா?
கமல்ஹாசன்: நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம். அதை எல்லோருக்கும் வெளியில் சொல்ல முடியாது. அதற்கு பல காரணங்கள் உண்டு. நாங்கள் பல காலமாக நண்பர்கள். அவர் அறிக்கையில் வெளியிட்டிருக்கும் அந்த செய்தி ஏற்கெனவே எனக்கு தெரிந்ததுதான். அவர் அதை மக்களுக்கு தெரியப்படுத்தியிருக்கிறார்.
கேள்வி: சீரமைப்போம் தமிழகத்தை அப்படி என்கிற தலைப்பில் இந்த செய்தியாளர் சந்திப்பு நடக்கிறது. சீரமைக்க வேண்டிய முதல் முக்கியமான விஷயங்கள் என்னென்ன என்று நினைக்கிறீர்கள்?
கமல்ஹாசன்: இல்லாத ஒரு விஷயம் வேண்டும் என்று ஆசைப்படுகிறோம் என்பதே சீரமைப்பை நோக்கிச் செல்லும் ஒரு முனைப்பு தான். ஊழல் முதலில் அகன்றால் பாக்கி எல்லா வேலைகளும் சரியாகிவிடும். மீதி எல்லா தீமைகளும் தன்னால் சாய்ந்துவிடும். சரிந்து விடும். அதற்குப் பிறகு சீரமைக்க வேண்டிய பட்டியல் நிறைய இருக்கிறது. ஒவ்வொரு தொகுதியிலும் எங்கள் ஆட்கள் போய் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். வேலையின்மை என்பது மிகப்பெரிய சவாலாகவும் இந்தியாவையும் முக்கியமாக தமிழகத்தையும் தாக்கிக் கொண்டிருக்கிறது. அவற்றிற்கெல்லாம் தீர்வு இருக்கிறது என்று கட்சி நம்புகிறது. அது என்ன தீர்வு என்று கேட்டால் செய்து காட்டிவிட்டு செல்வதோ அல்லது குறைந்தபட்சம் அந்தப் பட்டியல் மக்கள் நீதி மய்யத்துடையது என்று பிரகடனப்படுத்திவிட்டு பொதுவில் சொல்லலாம். இல்லாவிட்டால் அது நாங்கள் வெவ்வேறு கட்சிகளுக்கு ஆலோசனைகள் கொடுப்பது போல ஆகிவிடும்.
கேள்வி: ரஜினிகாந்த் சொன்ன கருத்து ஏற்கனவே எனக்கு தெரியும் என்று சொல்லி இருக்கிறீர்கள், ஆனால், ரஜினியுடன் சேர்ந்து பயணிக்க தயார் என்றும் சொல்லியிருந்தீர்கள் குறிப்பாக மக்கள் நீதி மையம் செயற்குழு கூட்டத்தில் உங்களை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மூன்றாவது கட்சிக்கான தலைமை என்று சொல்லியிருக்கிறீர்கள். ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படும் என்று சொல்லி இருக்கிறீர்கள். ஆனால், தற்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் திராவிட கட்சிகளுடன் கூட்டணிஇல்லை என்று நான் சொல்லவில்லை. தேசியகீதம் இருக்கும் வரை திராவிடம் என்ற வார்த்தை இருக்கும். ஆனால், கழகங்கள் உடன் கூட்டணி இல்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். அதனால், நீங்கள் மாறிமாறி அரசியல் கருத்துகளை தெரிவித்து வருவதாக அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்? இந்த சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை மக்கள் நீதி மையம் கூட்டணி அமைக்குமா? அமைக்காதா?
கமல்ஹாசன்: அதற்கு பதில் சொல்லும் நேரம் இதுவல்ல என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் நாங்கள் எங்கள் கட்டமைப்பை பார்த்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் எண்ணிக்கை இடங்கள், யாத்திரை முன்னேற்றங்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நீங்களும் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். இதில் இன்னொரு விஷயம், எங்களுக்கு புலப்படும் உண்மை, எங்களுக்கு கிடைத்திருக்கும் விழுக்காடுகள், கணக்குகள், இதையெல்லாம் பார்க்கும்போது நாங்கள்தான் தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மக்கள் நீதி மய்யத்தைச் சார்ந்தவர்கள் பெருமிதம் கொள்கிறோம்.
கேள்வி: கழகங்களுடன் கூட்டணி அமைத்தால் கலங்கம் வந்துவிடும் என்று சொல்லியிருந்தீர்கள் கூட்டணி அமைத்தால் உங்களுக்கு அப்படி என்ன கலங்கம் வந்துவிடும்
கமல்ஹாசன்: அது பத்திரிகையில் அந்த செய்தி. இது பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு அவ்வளவுதான்.
கேள்வி: இல்லை நீங்கள் சொன்ன கருத்துக்கள் தான் பத்திரிகையில் வெளி வந்திருக்கிறது?
கமல்ஹாசன்: இல்லை, என்னை கூட்டணிக்கு இவ்வளவு அவசர படுத்தும் காரணம் என்ன நீங்கள் சொல்லுங்கள்.
கேள்வி: இல்லை, நீங்கள் பேசும்போது மூன்றாவது அணி அமைக்கும் தகுதி வந்துவிட்டது மக்கள் நீதி மய்யத்திற்கு என்று சொல்லியிருந்தீர்கள். மூன்றாவது அணி அமைக்க போகிறீர்களா?
கமல்ஹாசன்: மூன்றாவது அணி அமைந்துவிட்டது என்றுதான் சொல்கிறேன். இதுவே ஒரு அணி. ஆகையால் நாங்கள் கூட்டணி வைப்பது என்பது நல்லவர்களின் கூட்டணியாக இருக்கும். அப்படியென்றால் உங்கள் கட்சியை தவிர வேறு எங்கும் நல்லவர்களே இல்லையா என்றால் கண்டிப்பாக இருக்கிறார்கள். அப்படி அந்த நல்லவர்களை கூட்டணி அமையும் போது இது முதல் அணியாக இருக்கும். மூன்றாவது அணியாக எல்லாம் இருக்காது. நல்லவர்களுடன் கூட்டணி உண்டு. நல்லவர்கள் வேறு கட்சியில் இருக்கிறார்கள் மனம் வெதும்பி மனம் நொந்து இருக்கிறார்கள். இந்த அறிவிப்பை அவர்கள் வரவேண்டும் என்று அழைப்பதற்கான ஒன்றாக கூட இதை எடுத்துக்கொள்ளலாம்.
கேள்வி: கழகங்களுடன் கூட்டணி இல்லை என்ற பட்சத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருக்கிறதா?
கமல்ஹாசன்: நல்லவர்களுடன் கூட்டணி என்று சொல்லி இருக்கிறேன். எல்லா கட்சிகளிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் இங்கே வந்து விடுங்கள் என்று சொல்லி இருக்கிறேன். எந்த கட்சிகளுடன் கூட்டணி என்பதை இந்த நேரத்தில் இவ்வளவு அவசரமாக சொல்லவேண்டிய அவசியம் இல்லை. நவம்பரில் தேர்தல் ஆணையம் எங்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை எங்கள் கட்சி தொண்டர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இது கூட்டணி பற்றி பேச வேண்டிய தருணம் இல்லை.
கேள்வி: சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி விட்டீர்கள். திமுக ஒரு பக்கம் அதிமுகவை எதிர்த்து அதை வைத்து ஓட்டு கேட்பார்கள். அதிமுக தாங்கள் என்ன செய்தோம் என்பதைக் கூறி ஓட்டு கேட்பார்கள். மக்கள் நீதி மய்யம் எதனை மையமாகக் கொண்டு ஓட்டு கேட்க போகிறீர்கள். சட்டமன்ற தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யத்தின் உத்தி என்ன?
கமல்ஹாசன்: இது என்னுடைய ஒரிஜினல் பதில் அல்ல. இதுக்கு முன்னாடியே சொல்லப்பட்ட ஒரு பதில். ஆனால் நல்லவர் ஒருவர் சொல்லியிருக்கிறார். நல்லதுக்கு காப்பிரைட் கிடையாது. அதனால் சொல்கிறேன். இது காந்தியார் சொன்னது உங்களுடைய உத்தி என்ன என்று கேட்கிறார்கள். நேர்மை தான் என்கிறார். அதை நான் தைரியமாக சொல்லலாம். மக்கள் நீதி மய்யத்தின் உத்தியே நேர்மைதான். அதை எப்படி சொல்ல முடியும் என்றால் அதற்கு பதில் எங்களுக்கும் அதுதான் உத்தி என்று சொல்லட்டுமே. சமமான கட்சி என்று சொல்லிக்கொள்பவர்கள் சரித்திரம் படைத்த கட்சி என்று சொல்லிக்கொள்பவர்கள் எங்கள் உத்தியும் நேர்மைதான் என்று சொல்லட்டுமே பார்ப்போம் மனசைத் தொட்டு உங்களை நம்ப வைக்கும்படி சொல்லட்டுமே. நாங்கள் செய்யப்போவது பழிபோடும் அரசியலும் அல்ல. பழிவாங்கும் அரசியலும் அல்ல. வழிகாட்டும் அரசியலாக இருக்க வேண்டுமென்று நம்பி நகர்ந்து கொண்டிருக்கிறோம்” என்று கமல்ஹாசன் பதில் கூறினார்.
இதையடுத்து செய்தியாளர்கள், மநீம தலைவர் கமல்ஹாசனிடம், மக்கள் நீதி மய்யம் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறீர்கள். எதனடிப்படையில் சொல்கிறீர்கள்? உங்கள் கட்சியின் முருகானந்தம் கூறியிருக்கிறார், மக்கள் நீதி மய்யம் தமிழகத்தில் 160 தொகுதிகளை வெல்ல வாய்ப்பு இருக்கிறது எந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் எந்த கள ஆய்வின் அடிப்படையில் சொல்லியிருக்கிறார்? என்று கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு பதிலளித்த மநீமவைச் சேர்ந்த முருகானந்தம், “இன்று இருக்கக்கூடிய கள நிலவரப்படி, தேர்தலில் 100 ஓட்டுக்கு கீழே தோல்வி அடைந்தவர்கள் 2 பேர். 1000 ஓட்டுக்கு கீழே தோல்வியடைந்தவர்கள் 16 பேர். 5000 ஓட்டுக்கு கீழே தோல்வியடைந்தவர்கள் நாற்பதுக்கு மேல். 10,000 ஓட்டுக்குக் கீழே தோல்வி அடைந்தவர்கள் மேலும் நாற்பதுக்கு மேல் இருக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கிறபோது எங்களுடைய களநிலவரம் 10லிருந்து 15 சதவிகிதம் பாராளுமன்ற தொகுதியில் எங்கெல்லாம் ஓட்டு வங்கி இருக்கிறோமோ புள்ளி விவரமாக எடுத்து கிட்டத்தட்ட 100 லிருந்து 150 இடங்கள் வரைக்கும் மக்கள் நீதி மய்யம் மிகப்பெரிய தாக்கத்தை மட்டுமல்ல மட்டுமல்ல வெற்றியை ஏற்படுத்தும். எங்களுடைய அகத் தரவுகளை தயார் செய்து கொண்டிருக்கிறோம். அதைத்தான் உங்களுக்கு சொல்லி இருக்கிறோம்.” என்று கூறினார்.
இதையடுத்து தொடர்ந்து பேசிய கமல்ஹாசன்: எங்களுடைய கள ஆய்வின் சாதனை நிலையை வைத்து சொன்னதுதான். தன்னம்பிக்கையில் வந்த வார்த்தைதான். எங்களுக்கு நம்பிக்கை வரவேண்டும் என்பதற்காக சொன்ன வார்த்தை அல்ல. பல ஆய்வுகள் எங்களுக்கு தெரிவிக்கும் எண்கள், கடந்த சில ஒரு குறுகிய காலகட்டத்தில் ஒரு லட்சம் பேர் கட்சியில் புதிதாக சேர்ந்து இருக்கிறார்கள். அது எங்களுக்கு மக்கள் கொடுக்கும் சமிக்கை என்று தோன்றுகிறது.
கேள்வி: மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தேர்வு எந்தளவுக்கு நடந்து கொண்டிருக்கிறது?
கமல்ஹாசன்: மக்கள் நீதி மய்யத்தில் வேட்பாளர்கள் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. அதை அறிவிக்கும் நாள்தான் நாங்கள் உங்களுக்கு தெரிவிக்கும் நாள்.
கேள்வி: ரஜினிகாந்த் உடல் நலத்தை பார்த்துக் கொள்ளவேண்டும் என்று சொல்லியிருக்கிறீர்கள். ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்கிறீர்களா? அல்லது ரஜினி உடல் நலத்தை பார்த்துக் கொள்ள வேண்டுமா?
கமல்ஹாசன்: அவர் உடல் நிலையைப் பார்த்து கொள்ள வேண்டும் என்று நண்பராக சொல்லும் விஷயம். நல்லவர்கள் வரவேண்டும் என்பது எனக்கு எப்பவுமே இருக்கும் ஆசை. ஆனால், இரண்டுக்கும் நடுவில் எது முக்கியம் என்று பார்க்கும்போது உடல்நலம் முக்கியம். ஆனால், முடிவெடுக்க வேண்டியது நானல்ல. அதை அவர் தான் செய்ய வேண்டும். அதனால், அவர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். எனது அன்பு என்ன என்பது அவருக்கு புரியும். அதை இங்கு விளக்க வேண்டிய அவசியமே இல்லை.
கேள்வி: சட்டசபை தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடுவாரா? சட்டசபையில் உங்களுடைய குரல் எம்.எல்.ஏ-வாக ஒலிக்குமா?
கமல்ஹாசன்: கண்டிப்பாக ஒலிக்கும்.
கேள்வி: நீங்கள் ஏதாவது ஒரு தொகுதியை முடிவு செய்து வைத்திருக்கிறீர்களா?
கேள்வி: நான் என்னுடைய ஆட்களுக்கு ஒரு சில விஷயங்கள் சொல்லும்போது நடைமுறைகள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். அதற்கு நான் சொன்ன உதாரணம் கண்டிப்பாக மக்கள் நீதி மய்யத்தின் குரல் சட்டசபையில் ஒலிக்கும். அதற்கான தகுதியுடையவர்களாக இன்று முதல் நீங்கள் நடக்கத் துவங்குங்கள் என்று சொல்லியிருக்கிறேன்.
கேள்வி: நீங்கள் எந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது?
கமல்ஹாசன்: நீங்கள் ஒரு யோசனை சொல்லுங்கள் நான் கேட்டுக்கொள்கிறேன். ஆனால், சட்டசபை தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பது கையெழுத்துப் போடும்போது தெரியும்.
கேள்வி: சட்டசபை தேர்தலில் திமுக அதிமுக என்று பெரிய கட்சிகள் இருக்கிறது திமுக உடைய வயது 70, அதிமுகவின் வயது 50, உங்களுடைய கட்சிக்கு 2 வயது கிட்டத்தட்ட குழந்தை. எப்படி இந்தப் போட்டியை, படைபலம். பண பலத்தை எதிர்கொள்வீர்கள். உங்களை முதல்வர் வேட்பாளராக சொல்லியிருக்கிறார்கள். உங்களால் முதல்வராக முடியும் என்று நினைக்கிறீர்களா?
கமல்ஹாசன்: எனக்கு மாற்றம் வேண்டும் என்பது முக்கியம். எங்கள் கட்சி முடிவு செய்து அவர்கள் யார் முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்துவிட்டார்கள். அதனால், அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டு நான் செயல்படுவேன்.
கேள்வி: தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக இரண்டு பெரிய விஷயங்கள் போய்க்கொண்டிருக்கிறது. ஒன்று மனுஸ்மிருதி சம்பந்தமான விஷயம். இரண்டாவது வேல் யாத்திரை. இது இரண்டு பற்றிய உங்களுடைய கருத்து என்ன?
கமல்ஹாசன்: மனுஸ்மிருதி புழக்கத்தில் இல்லாத புத்தகம். அதைப்பற்றி விமர்சனம் தேவையற்றது. அது புழக்கத்துல இல்லை. நீங்கள் ஐபிசி பற்றி கேளுங்கள். அரசியலமைப்பு பற்றி சொல்லுங்கள். அதன் மீது யாராவது கை வைக்கிறார்கள் என்றால் போராட்டம் வெடிக்கும். இது பத்தி பேச வேண்டிய அவசியமே கிடையாது. அது புழக்கத்தில் இல்லாத ஒரு புத்தகம்.
கேள்வி: ஆனால், பண்பாட்டில் இருக்கிறது இல்லையா?
கமல்ஹாசன்: பண்பாட்டில் எத்தனையோ இருக்கிறது. உடன்கட்டை ஏறுதல் பண்பாட்டிலிருந்தது தான். நீங்கள் அதில் ஏறக்கூடாது என்று நான் நினைக்கிறேன். எத்தகைய சோகம் உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டாலும் நீங்கள் அதற்கு ஆளாகக் கூடாது. பண்பாடு என்ற பெயரில் அதை செய்யக்கூடாது. இப்படி மாறிமாறி வருவதுதான் பண்பாடு நாம்தான் அதன் காவலர்கள். அதில் பழையதை காத்து வைப்பதில்லை பண்பாடு. காலத்துக்கு ஏற்ப தேவைக்கு ஏற்ப நம்முடைய பண்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். ஆனால், அந்த பண்பாடு மாறும்போது நம்முடைய தரம் எந்த விதத்திலும் குறைந்துவிடக்கூடாது.
கேள்வி: வேல் யாத்திரை பற்றி கூறுங்கள்?
கமல்ஹாசன்: ஐயா என்னுடைய ஆர்வமெல்லாம் வேலை எப்படி வாங்கித் தருவது என்பதுதான். இந்த வேலை யார் வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். ஆனால், அந்த வேலையை வாங்கித் தருவது என்பதுதான் பெரிய பொறுப்பு. தமிழகத்திற்கு நாம் செய்ய வேண்டிய முதல் கடமை அது. அந்த வேலை வேண்டாம் என்று ரத்து செய்தார்கள் என்றால் நல்லது. அவர்கள் சட்டம் ஒழுங்கை நினைத்து ரத்து செய்திருக்கலாம்.
கேள்வி: கேள்வி நீங்கள் பாஜக என்றால் மென்மையான போக்கையும் திமுக என்றால் கடுமையாக விமர்சிக்கிறீர்கள். நீங்கள் பாஜகவின் B டீம் என்று ஏற்றுக் கொள்ளலாமா?
கமல்ஹாசன்: நீங்கள ஏற்றுக் கொள்வது என்றால் எதை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ளுங்கள். நான் எதை ஏற்றுக் கொள்கிறேன் என்பதுதான் முக்கியம். குற்றச்சாட்டுக்கள் வைப்பார்கள். எந்த போட்டியிலும் நான் B டீமாக இருந்ததில்லை. நான் எப்பவுமே A டீம்லதான் இருந்திருக்கிறேன். எனக்கு கிடைத்த வாத்தியார்கள் அப்படி. சினிமா துறையிலும் சரி, அரசியலில் எனக்கு கிடைத்த நண்பர்கள் இவர்களும் சரி. இது A டீம்.
நாம் சமூகத்தைப் பற்றி தானே பேசிக்கொண்டிருக்கிறோம். மலத்தை... நீங்கள் ஏன் தலை நகரில் இருக்கும் ஒரு கட்சியை பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.
கேள்வி: அதிமுக திமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளும் மும்மொழிக் கொள்கை ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை ஆகியவை பற்றி வாக்குறுதிகளைபேசிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் தமிழகத்திற்கு எந்த விதமான வாக்குறுதியை அளிக்க உள்ளீர்கள். எங்களுடைய நிலைப்பாடு என்ன?
கமல்ஹாசன்: அதாவது, ஆதாரத் தேவை என்பது என்பதே மக்களுக்கு கிடைக்காமல் இருக்கின்றபோது அது தான் முதல் முன்னுரிமை. பல ஊர்களில் 8 நாளுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது என்பது உண்மை. இது எவ்வளவு கேவலமான நிலை. இதையெல்லாம் கவனிக்கப்பட வேண்டும். வேலையின்மை அதை எல்லாம் கவனிக்கப்படவேண்டும். பழிபோடும் அரசியல் இல்லை என்று சொல்லியிருக்கிறோம். இருந்தாலும், சில கணக்குகள் சொல்ல வேண்டும் உங்களுக்கு. பொங்கலுக்கு உங்களுக்கு ஒரு பரிசு கொடுக்கிறார்கள் திருவிழாவின்போது ஓட்டுக்கு காசு கொடுத்து காசு கொடுக்கிறார்கள். கடந்த ஆறு ஏழு மாதங்களாக நடந்த போது ஏன் அந்த பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை. அதற்கு இதற்கு செலவு செய்தோம் என்கிறீர்கள். மழைநீருக்காக ஒதுக்கப்பட்டது என்கிறார்கள். இரண்டு நாள் மழையில் தெப்பக்குளம் ஆகிவிடுகிறது சென்னை. இதெல்லாம் அடிப்படை விஷயங்களாக செய்ய வேண்டி இருக்கிறது. வேலையின்மை தமிழகத்தை விட்டு வேறு மாநிலங்களுக்குச் சென்று கொண்டிருக்கிற தொழிற்சாலைகள் தொழில்வாய்ப்புகள் இவற்றையெல்லாம் மீட்டெடுக்க வேண்டும் என்பது மக்களின் மய்யத்தின் ஆசை. ” இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.