கமல்ஹாசன் இன்று டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக கூட்டணியில் கமல்ஹாசன் நுழைவாரா?
கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கருத்துகளை கூறி வருகிறார். அவ்வப்போது மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், பினராயி விஜயன், குமாரசாமி என பாஜக.வுக்கு எதிரான மாநில முதல்வர்களை அவர் சந்திக்கவும் தவறவில்லை.
இந்தச் சுழலில் மக்கள் நீதி மய்யம் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய மனு அளிப்பதற்காக டெல்லி சென்றார் கமல்ஹாசன். அந்தப் பணிகளை முடித்துக் கொண்டு இன்று (ஜூன் 20) மாலை டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
ராகுல் காந்தியை சந்திக்க அவரது இல்லம் வந்த கமல்ஹாசன்
கமல்ஹாசன் - ராகுல் காந்தி சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. நேற்று ராகுல் காந்தி தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாகவும் இந்த சந்திப்பு அமைந்தது. இருவரும் இந்திய மற்றும் தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்தும் பேசினர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய கமல்ஹாசன், ‘அரசியல் குறித்து பேசினோம். ஆனால் கூட்டணி குறித்து பேசவில்லை’ என்றார். தமிழ்நாட்டில் திமுக அணியில் இடம்பெறும் ஆசையை பல்வேறு கட்டங்களில் நாசூக்காக கமல்ஹாசன் வெளிப்படுத்தி வந்திருக்கிறார். திமுக சார்பிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு வந்தால் செல்வேன் என்றும் வெளிப்படையாக கூறினார்.
ஆனால் கமல்ஹாசனுக்கு அப்படியொரு அங்கீகாரம் கொடுத்து அரசியல் ரீதியாக அவரை வளர்த்துவிட திமுக தயாராக இல்லை. திமுக.வின் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுப்பதையும் திமுக தவிர்த்தது.
இந்தச் சூழலில் ராகுல் காந்தியை சந்தித்து கமல்ஹாசன் பேசியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. திமுக அணியில் இடம் பெற்றிருக்கும் மற்றொரு தலைவரான திருமாவளவனும் அண்மையில் திருச்சி மாநாட்டில் பங்கேற்க ராகுல் காந்தியை சந்தித்து அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசன் டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தது மூலமாக திமுக அணியில் நுழைய முயற்சிக்கிறாரா? அல்லது, திமுக.வை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டில் காங்கிரஸை உள்ளடக்கிய அணி அமைக்க முயற்சிக்கப் போகிறாரா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் திருச்சி மாநாட்டுக்கு ராகுல் காந்தியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழக கட்சிகள் ஒவ்வொன்றாக காங்கிரஸ் தலைமையுடன் நேரடி தொடர்பை வலுப்படுத்தி வருவது திமுக அணியை பலப்படுத்த உதவுமா? பலவீனப்படுத்துமா? என விவாதம் எழுந்திருக்கிறது.
இதற்கிடையே கமல்ஹாசன் சந்திப்பை மெச்சும் விதமாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி பகிர்ந்திருக்கிறார். அதில் கமல்ஹாசன் சந்திப்பை கொண்டாடியதாகவும், இருவரும் இரு கட்சிகளின் செயல்பாடுகள் குறித்தும், தமிழகம் உள்ளிட்ட அரசியல் நிலவரங்களை பேசியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.