இந்தியாவில் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, ஜிஎஸ்டி போன்ற பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரை நடந்து வருகிறது. இந்த நடைபயணத்தில் பல்வேறு முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டு தங்களது ஆதரவை வழங்கி வருகின்றனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை 9 மாநிலங்களைக் கடந்து, கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி டெல்லி வந்தது. தற்போது ஒன்பது நாள் இடைவெளிக்கு பிறகு யாத்திரை, ஜனவரி 3 ஆம் தேதி உத்தரபிரதேசத்தில் மீண்டும் தொடங்குகிறது.
இதற்கிடையே டெல்லிக்குள் யாத்திரை நுழைந்த போது, ராகுல் காந்தியுடன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
யாத்திரையின் போது பேசிய கமல்ஹாசன், ராகுல், நேருவின் கொள்ளுப்பேரன்… நான் காந்தியின் கொள்ளுப்பேரன். அரசியல் அமைப்பிற்கு எந்த நெருக்கடி ஏற்பட்டாலும் நான் தெருவில் வந்து நிற்பேன், எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறது என்பதைப் பற்றி எனக்கு கவலை இல்லை.
தேசத்திற்காகவே, எனது அரசியல் பயணம் தொடங்கப்பட்டது, எனக்காக தொடங்கவில்லை. தேசத்திற்கு நான் தேவைப்படும் நேரம் இதுதான் என்று எண்ணுகிறேன் என்று கூறினார்.
இந்த நடைபயணத்துக்குப் பிறகு கமல்ஹாசன் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது எடுத்த வீடியோவை மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் சு.ஆ.பொன்னுசாமி தனது ட்வீட்டரில் பகிர்ந்துள்ளார்.
அதில், மொழி, கலாச்சாரம், விவசாயம், சீனா உள்ளிட்ட ஏராளமான விஷயங்கள் குறித்து ராகுல் காந்தியும், கமல்ஹாசனும் விவாதிக்கின்றனர். இந்த வீடியோ இப்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“