/tamil-ie/media/media_files/uploads/2021/03/mnm-kamal-haasan.jpg)
கமல் சொத்து மதிப்பு, கடன் எவ்வளவு? ராஜ்யசபா வேட்பு மனு மூலம் வெளியான தகவல்
மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனின் சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளன. ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் கமல்ஹாசன் நேற்று தமது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதில் தமது சொத்து விவரங்களை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களை பதவியிடங்களுக்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் தேர்தல் ஜூன் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை அடிப்படையில் தி.மு.க. சார்பாக 4 பேரை தேர்வு செய்ய முடியும். அ.தி.மு.க. சார்பாக 2 பேரை தேர்வு செய்ய முடியும்.
இதனையடுத்து தி.மு.க சார்பாக வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். இதேபோல அதிமுக சார்பாக வழக்கறிஞர் இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் ஜூன் 9 ஆம் தேதி முடிவடையவுள்ள நிலையில், தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் நேற்று தங்களது வேட்புமனுவை தலைமை செயலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தனர். இதனையடுத்து கமல்ஹாசன் உள்ளிட்ட 6 வேட்பாளர்கள் பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்த மனுவில் சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது.
நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், சென்னை புரசைவாக்கம் சர் எம் சிடி. முத்தையா செட்டியார் பள்ளியில் 8-ம் வகுப்பு வரை படித்துள்ளதாக வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தமக்கு 2023-24-ஆம் நிதியாண்டில் ரூ.78.90 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.59.69 கோடி. ஒட்டுமொத்த அசையா சொத்துகளின் இப்போதைய சந்தை மதிப்பு ரூ.245.86 கோடி. கடனாக ரூ.49.67 கோடி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டை, உத்தண்டி, சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் மொத்தம் 4 வணிகக் கட்டிடங்களை அவர் வைத்திருக்கிறார். இவற்றின் மொத்த சந்தை மதிப்பு ரூ.111.1 கோடி. திண்டுக்கல்லில் உள்ள வில்பட்டி கிராமத்தில் ரூ.22.24 கோடி மதிப்புள்ள விவசாய நிலமும் கமலுக்கு உள்ளது. மேலும், கமல்ஹாசன் கையிருப்பில் உள்ள ரொக்கம் ரூ.2.60 லட்சம். மகேந்திரா பொலிரோ, பென்ஸ், பி.எம்.டபிள்யூ., லக்சஸ் ஆகிய 4 கார்கள் உள்ளன. இவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.8.43 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த சொத்து மதிப்பு ரூ.305.55 கோடி என்று கமல் குறிப்பிட்டுள்ளார். கமலின் வருமானம் 2019-2020 ஆம் ஆண்டில் ரூ.22.1 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ.78.9 கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.