திமுக - காங்கிரஸ் கூட்டணி உடையும் என கமல்ஹாசன் பரபரப்பாக பேட்டி கொடுத்திருக்கிறார். முதல் முறையாக திமுக.வுக்கு எதிராக கமல்ஹாசன் பொங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி செயல்பட்டு வருகிறார். பெரும்பாலும் அதிமுக அரசையும், அமைச்சர்களையும் சீண்டுகிற விதமாக தனது பேச்சு மற்றும் பேட்டிகளை அமைத்து வந்தார் கமல்ஹாசன்.
இந்தச் சுழலில் தந்தி டிவி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பரபரப்பான பல தகவல்களை வெளியிட்டார் கமல்ஹாசன். அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுடன் சம அளவில் இடைவெளி கடைபிடிப்பதாக கூறினார். திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைய வாய்ப்பு இருப்பதாகவும், காங்கிரஸுடன் தனது கட்சி கூட்டணி அமைக்கும் என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கமல்ஹாசன் தனது பேட்டியில் கூறியிருப்பதாவது: ‘மாணவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு இருக்கிறது. அனைத்து கட்சிகளும் கல்லூரிகளில் அரசியல் பேசினாலும் தவறில்லை. ஆனால் தமிழக அரசு, ‘நடிகர்களை அழைக்காதீர்கள், அரசியல் பேச அனுமதிக்காதீர்கள்’ என கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்புகிறது. அதேசமயம் எடப்பாடி பழனிசாமி, மாணவர்கள் மத்தியில் அரசியல் பேசுகிறார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி உடையக் கூடிய வாய்ப்பு உண்டு. அதனால் அந்த கூட்டணி உடையும் பட்சத்தில் மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் காங்கிரசுடன் இணைந்து போட்டியிடும். மேலும் அதிமுக மற்றும் திமுகவை தமிழக அரசியலில் இருந்து அகற்ற மக்கள் நீதி மய்யம் பாடுபடும். திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்காது’. இவ்வாறு அவர் கூறினார்.
திமுக நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டங்களுக்கு தனக்கு அழைப்பு வரும் என கமல்ஹாசன் எதிர்பார்த்தார். வெளிப்படையாக அது குறித்து, ‘அழைப்பு வந்தால் கலந்து கொள்வோம்’ என வேண்டுகோளாகவும் வைத்தார். ஆனால் திமுக கண்டுகொள்ளவில்லை.
திமுக.வுடன் கூட்டணி வைப்பீர்களா? என இதற்கு முன்பு கேட்ட நேரங்களில், ‘நல்லது செய்ய நினைக்கிறவர்களுடன் கூட்டணி வைப்பேன்’ என்கிற ரீதியில் பேசி வந்தார் கமல். முதல் முறையாக திமுக.வுடனும் கூட்டணி இல்லை என அவர் தெளிவுபடுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.