தமிழக சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வியடைந்தது. கோவையில் போட்டியிட்ட கமல்ஹாசனும் மிகவும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதனைத் தொடர்ந்து, அக்கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் மகேந்திரன், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி மயூரா, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, பொன்ராஜ், பத்ம பிரியா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நீதி மய்யத்தில் இருந்து வெளியேறினார்கள்.
மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறியதாலும், கட்சியின் தலைவர் கமல்ஹாசனே தேர்தல்ல் தோல்வியைத் தழுவியதாலும் கமல்ஹாசன் அரசியலில் இருந்து விலகிவிடுவார் என்றும் அவருடைய மக்கள் நீதி மய்யம் கரைந்து போகும் என்றும் அரசியல் களத்தில் பேசப்பட்டது.
இந்த நிலையில், “என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன்; அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும்” என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: “மாற்றம் என்றும் மாறாது நிகழ்ந்து கொண்டே இருக்கும். அரசியல் மாற்றம் நாட்டில் ஏற்பட நாம் ஏற்றிய கொடி பறந்துகொண்டிருக்கிறது. நேர்மை வழியில் மாற்றத்தை தேடுபவர்களாய் நாம் உள்ள வரையில், நம் கொடி புத்தொளியுடன் பறந்துகொண்டே இருக்கும். மூச்சுள்ளவரை அதன் பாதுகாவலனாய் நான் இருப்பேன். நாம் ஒரு சிறு விதைதான். இந்த விதை வீழ்ந்தது, வீழ்த்துவோம் என்று கொக்கரிக்கும் பழைய புள்ளிகளுக்கும் சுள்ளிகளுக்கும் ஒரு செய்தி. விதை விழுந்தாலும் மண்ணைப் பற்றி விட்டால், விரைவில் அது காடாகும். நாளை நமதாகும்.” என்று அந்த வீடியோவில் கமல்ஹாசனின் குரல் உடன் தொடங்குகிறது.
இதையடுத்து பேசுகிற கமல்ஹாசன், “உயிரே, உறவே, தமிழே, ஊரடங்கினாலும் வாயடங்காது என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்றாக நாம் ஆகிவிடக் கூடாது. தோல்வியை ஆராய்ந்து அதில் வெற்றி பாடம் கற்பது நாம் இதுவரை கண்ட சரித்திரம். மக்களிடம் முக அறிமுகம் இல்லாதவர்களையும் சற்றே தெரிந்தவர்களையும் புது எழுச்சி அரசியலின் நட்சத்திரங்களாக மின்ன வைக்க நாம் நினைத்ததுதான் சிலருக்கு சர்வாதிகாரமாய்த் தெரிகிறது. திறமையின் அடிப்படையில் பெரும் பொறுப்புகளை கட்சியில் சேர்ந்த சில நாட்களிலேயே தந்து வளர வழி செய்தது அன்று அவர்களுக்கு ஜனநாயகத்தின் உச்சகட்டமாகத் தெரிந்திருக்கிறது. பிறகு, காலச்சூழலில் கண்ணுக்கு ஏற்பட்ட மறதியில் அது அவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது. கூட்டணி வைத்துக்கொள்வதில் நான் காட்டிய வெளிப்படைத் தன்மையும், அதைத் தேர்ந்தெடுப்பதில் அவர்களுக்கு பொறுப்பு கொடுத்த ஜனநாயகமும் அனைவரும் அறிந்தவையே. தோல்விக்குப் பின் அவரவருக்கு இருக்கும் தார்மீக கடமையை ஏற்பது நல்ல ஜனநாயகவாதி செய்யும் செயல். கடமைகளை மறந்து நிகழ்ந்துவிட்ட தவறுகளை கொட்ட ஒரு குழி தேடுவது சிலருக்கு ஜனநாயகமாகப்படுகிறது. அது ஜனநாயகமே அல்ல.
நம் மையக் கிணறு அவ்வளவு சாதாரணமாக தூர்ந்துபோய்விடாது என்பது தற்கால தாக சாந்திக்காக குடிக்க வந்தவர்களுக்கு புரியாது. நாற்பது ஆண்டு கால இறைந்து நீர் வார்த்ததில் உடல் சற்றே வியர்த்தாலும் உற்சாக ஊற்று ஊறிக்கொண்டே இருக்கும் என்பது நமக்கு நமது அனுபவம் சொல்லும் பாடம். இதுதான் நம் புலம். இதுதான் நாம் செய்யப்போகும் விவசாயம் என்று களம் இறங்கிவிட்ட நமக்கு, நம் நீர்நிலையைச் சுற்றித்தான் வேலை. நாடோடிகள், யாத்ரீகர்கள் அப்படியல்ல. ஓரிடம் தங்க மாட்டார்கள். வணிகர்களாக அவர்கள் இருக்கும் பட்சத்தில் வியாபாரம் உள்ளவரை தங்குவார்கள், பிறகு அவர்கள் வெளியேறிவிடுவார்கள். சிலநேரம் திரும்பவும் சென்ற வழியே வருவார்கள். இந்த ஊற்று அன்றும் சுரந்துகொண்டிருக்கும். ஆனால், மீண்டும் ஊரணியை, நம் நீர்நிலையை அசுத்தப்படுத்த விடமாட்டோம் எனும் உறுதியுடன் நாம் நம் பணியை நேர்மையாகத் தொடர வேண்டும். அதுவே நாம் தரும் செய்தியாக உலகறிய வேண்டும்.
மற்றபடி சிலர் தன் தவறுகளை மறைக்க எழுப்பும் பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு நாம் பதில் சொல்ல வேண்டியதில்லை. காலம் பதில் சொல்லும். உண்மையெல்லாம் தெரிந்தும் ஊமைகளாக இருக்கச் சொல்கிறீர்களா? என்று வெகுண்டு குரல் எழுப்பும் தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோள், உயிரே உண்மை பேசு. உறவே வாதாடு. என்னருமைத் தமிழே போதும் அதற்கு. மறந்தும் நம் மொழி மாசுபடாது இருக்கட்டும். நம் தரம் குறையாதிருக்கட்டும். கட்சியின் உள்கட்டமைப்பை தனிமனிதர்கள் தங்கள் ஆதாயத்திற்கு ஏற்ப மாற்றி ஆடிய விளையாட்டுகள் இனி தொடராது. செயல் வீரர்கள் செயலாற்றுபவர்களின் கரங்கள். வலுப்படுத்தப்படும். உருமாறிய மக்கள் நீதி மய்யத்தை அனைவரும் விரைவில் காண்பார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.