Advertisment

கிராமசபை கூட்டங்கள் எண்ணிக்கை அதிகரிப்பால் பலன் இல்லை: கமல்ஹாசன்

தமிழகத்தில் கிராம சபை கூட்டம் இதுவரை ஆண்டுக்கு 4 முறை மட்டுமே நடைபெற்று வந்த நிலையில், இனிமேல் கிராம சபைக் கூட்டம் ஆண்டுக்கு 6 முறை நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கிராமசபை கூட்டங்கள் எண்ணிக்கை அதிகரிப்பால் பலன் இல்லை: கமல்ஹாசன்

தமிழகத்தில் கிராம சபை கூட்டம் இதுவரை ஆண்டுக்கு 4 முறை மட்டுமே நடைபெற்று வந்த நிலையில், இனிமேல் கிராம சபைக் கூட்டம் ஆண்டுக்கு 6 முறை நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று முன் தினம் (ஏப்ரல் 23) வெளியிட்ட அறிக்கையில், “ஒவ்வொரு ஊராட்சியிலும்‌ அனைத்து வாக்காளர்களையும்‌ உள்ளடக்கி, கிராம சபை என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, கிராம சபைக்கென குறிப்பிட்ட அதிகாரங்களும்‌, பொறுப்புகளும்‌ வழங்கப்பட்டுள்ளன. 1998 ஆம்‌ ஆண்டில்‌ முதல்‌ ஆண்டிற்கு 4 முறை, குறிப்பிட்ட நாட்களில்‌ கிராம சபை கூட்டங்கள்‌ நடத்தப்பட்டு வந்தாலும்‌, அவ்வப்போது சிறப்பு கிராம சபைக்‌ கூட்டங்களும்‌ தேவையின்‌ அடிப்படையில்‌ மிகக்‌ குறுகிய கால அறிவிப்புகள் மூலம்‌ நடத்தப்பட்டு வருகின்றன.

எனவே, இதைக்‌ கருத்தில்கொண்டு, குறிப்பட்ட கால இடைவெளியில்‌ நடத்த வேண்டிய கிராம சபைக்‌ கூட்டங்களின்‌ எண்ணிக்கையை அதிகரித்து, மக்கள் பங்கேற்பினை உறுதி செய்வது அவசியம்‌ எனக்‌ கருதி, இந்த ஆண்டு முதல்‌, ஆண்டிற்கு 6 கிராம சபைக்‌ கூட்டங்கள்‌ நடத்தப்படும். அந்த வகையில்‌, ஜனவரி 26- குடியரசு தினம்‌, மே- 1 தொழிலாளர்‌ தினம்‌, ஆகஸ்ட்‌- 15 சுதந்திர தினம்‌, அக்டோபர்‌- 2 அண்ணல்‌ காந்தியடிகள்‌ பிறந்த தினம்‌ ஆகிய நாட்களில்‌ நடைபெற்று வரக்கூடிய கிராம சபை கூட்டங்கள்‌, இனி வரும்‌ காலங்களில்‌, கூடுதலாக மார்ச்‌- 22 உலக தண்ணீர்‌ தினம்‌ அன்றும்‌, நவம்பர்‌- 1 உள்ளாட்சிகள்‌ தினம்‌ அன்றும்‌ நடத்தப்படும்‌.

பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல்‌ இருக்கும் அமர்வுப்‌ படியினை உயர்த்தி வழங்கிடக்‌ கோரி பல்வேறு மக்கள்‌ பிரதிநிதிகளிடமிருந்து கோரிக்கைகள்‌ வரப்பெற்றதன்‌ அடிப்படையில்‌, மாவட்ட ஊராட்சி மற்றும்‌ ஊராட்சி ஒன்றியப்‌ பிரதிநிதிகளுக்கு கூட்டங்களில்‌ கலந்து கொள்ளும்‌ நாட்களில்‌ அமர்வுப்‌ படித்‌ தொகை பத்து மடங்காக உயர்த்தி வழங்கப்படும்‌ என்றும்‌, கிராம ஊராட்சித்‌ தலைவர்‌, கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு அமர்வுப்‌ படித்‌ தொகை ஐந்து மடங்காக உயர்த்தி வழங்கப்படும்‌. தமிழகத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியக்‌ குழுத்‌ தலைவர்களுக்கும்‌ புதிய வாகனங்கள்‌ வழங்கப்படும்‌.

சிறப்பாகச்‌ செயல்படக்கூடிய கிராம ஊராட்சிகளுக்கு “உத்தமர்‌ காந்தி விருது” 2022 ஆம்‌ ஆண்டு முதல்‌ மீண்டும்‌ வழங்கப்படும்‌ என்பதையும்‌, ஆண்டுதோறும்‌ மாவட்டத்திற்கு ஒன்று வீதம்‌, சிறந்த 37 கிராம ஊராட்சிகளுக்கு பத்து இலட்சம்‌ ரூபாய்‌ வீதம்‌

வழங்கப்படும்‌ என்பதையும்‌ மகிழ்ச்சியோடு தெரிவித்துக்‌ கொள்ள விரும்புகிறேன்‌.” என்று அறிவித்தார்.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கிராமசபை கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மாணங்கள் நடைமுறைப்படுத்தவில்லை என்றால், கிராம சபை கூட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் பலனில்லை என்று ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது கட்சி தொண்டர்களிடமும் மற்றும் ஊடகங்களிடமும் பேசினார். அப்போது, கமல்ஹாசன் கிராம சபைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். கிராம சபை கூட்டங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 6 முறை நடைபெறும் என்றும் வார்டு உறுப்பினர்களின் அமர்வுக் கட்டணம் 5 மடங்கு உயர்த்தப்படும் என்ற மாநில அரசின் அறிவிப்பை கமல்ஹாசன் வரவேற்றார்.

இருப்பினும், நெறிப்படுத்தப்பட்ட செயல்படுத்தல் மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்து அவர் கவலை தெரிவித்ததுடன், ஒவ்வொரு கிராமசபை கூட்டத்தின் நிகழ்வுகளையும் சாமானியர்கள் பார்க்க ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கேரளா போன்ற சிறிய மாநிலம் ஏற்கனவே அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டதை விட அதிகமாக வார்டு உறுப்பினர்களுக்கு அமர்வுப் படி செலுத்துகிறது. அதிகமாக அமர்வுப் படி செலுத்துவது வார்டு உறுப்பினர்களை அதிக பொறுப்புணர்வு உள்ளவராகவும் கடமை உணர்வு உள்ளவராகவும் மாற்றும் என்று கமல்ஹாசன் சுட்டிக்காட்டினார்.

“ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியின் பங்கு என்பது ஆளும் கட்சி எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் விமர்சிப்பதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. மக்களின் நலனுக்காக முன்மொழியப்படும் எதையும் எதிர்க்கட்சி பாராட்ட வேண்டும். சூழ்ச்சியான சுயநலத்திற்காக செய்யப்படும் எதையும் விமர்சிக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.

மக்கள் நீதி மய்யம் பாஜகவின் பி டீம்-ஆக செயல்படுகிறது என்ற பொதுவான கருத்துகளை கிண்டல் செய்த கமல்ஹாசன் அவ்வாறு கருத்து தெரிவித்தவர்கள் உண்மையில் பாஜகவின் பி டீம்-ஆகவே செயல்படுகிறார்கள் என்று கூறினார்.

கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்திய கமல்ஹாசன், ஆளுநரின் செயல்பாடு குறித்து கூறுகையில், தமிழகத்தில் ஜனம் தனியாகவும், நாயகம் தனியாகவும் இருப்பதாகக் கூறினார்.

கிராம சபை கூட்டத்தின் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டும் போதாது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்த வேண்டும். அவ்வாறு செயல்படுத்துவதை மக்கள் கண்கூடாக பார்க்க வேண்டும். அப்போது தான் கிராம சபை கூட்டங்களுக்கு முழு வெற்றி கிடைத்ததாக அர்த்தம். இல்லாவிட்டால் 6 ஆயிரம் கிராம சபை கூட்டங்களை நடத்தினாலும் எந்த பலனும் இல்லை.

அரசியல் கட்சிகளிடம் உண்மையாக நாங்கள் எதிர்பார்ப்பது மக்கள் நலன் என்பதை மட்டும் தான். மக்கள் நலன் என்ற பாதையில் இருந்து அரசியல் கட்சிகள் நழுவிவிடக் கூடாது. நான் அரசியலுக்கு வந்ததும், நாம் அரசியலுக்கு வந்ததும் அதற்காகத்தான். அதில் கொஞ்சம் கூட நழுவாமல் மக்கள் நீதி மய்யம் செயல்படுகிறது.

சுய நலத்துக்காகவும், ஆதாயங்களுக்காகவும் எடுக்கப்படும் முடிவுகளை விமர்சிப்போம். மாற்றங்களை கொண்டு வந்தால் வரவேற்போம். பாராட்டுவோம். அரசியலில் உறவும் தேவையில்லை. பகையும் தேவையில்லை என்று கமல்ஹாசன் கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu Kamal Haasan Mnm
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment