நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் நுழைவதில்லை என்று முடிவெடுத்திருப்பது குறித்து கருத்து தெரிவித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “நண்பர் என்ற முறையில் தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன். சென்னை சென்றதும் அவரை சந்திப்பேன் என்றும் பாஜக தமிழகத்தில் பொருத்தமில்லாத கட்சி” என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் ஆன்மீக அரசியலை ஏற்றுக் கொள்ளும் மக்களை தங்கள் கூட்டணியில் சேர்ப்பதற்கான பாஜகவின் முடிவைப் பற்றி கேட்டபோது, தான் ஆன்மீகத்திற்கு எதிரானவர் அல்ல என்று கூறினார். மேலும், அவர், “தான் அதை நம்பவில்லை. எனக்கும் ஆன்மீகத்திற்கும் இடையே பகை இல்லை. பகுத்தறிவை ஏற்றுக்கொள்ள யாரையும் நான் கட்டாயப்படுத்த முடியாது என்பது போல ஆன்மீகத்தை ஏற்றுக்கொள்ள யாரும் என்னை கட்டாயப்படுத்த முடியாது. திராவிடம் யாருக்கும் சொந்தமில்லை. அனைவருக்கும் சொந்தம்.” என்று கூறினார்.
தமிழ்நாட்டில் காவிக் கட்சிகளின் தாக்கம் குறித்து கருத்து தெரிவித்த கமல்ஹாசன், இந்த மாநில மக்கள் காவிக் கட்சிகள் பொருத்தமில்லதவை என்று கருதுவதால் அவர்கள் இங்கே பாஜக ஆட்சிக்கு வருவதை விரும்பவில்லை என்று கூறினார்.
வரவிருக்கும் தேர்தலில் அவருடைய கட்சி ஆட்சிக்கு வந்தால், அவர் மத்திய அரசுடன் நல்ல உறவோடு செயல்படுவாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், “அது தேசிய நலனுக்கான விஷயமாக இருந்தால் நிச்சயமாக அதை செய்வேன்” என்று கமல் ஹாசன் கூறினார். “நாங்கள் அனைவரும் பொதுமக்களுக்கு நல்லது செய்ய அரசியலில் ஈடுபட்டுள்ளோம். மாறுபட்ட சித்தாந்தம் கொண்டவர்களை எதிரிகளாக கருத முடியாது” என்று கூறினார்.
அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சியினரிடமும் நடக்கும் சர்ச்சைகளைக் குறிப்பிட்ட கமல்ஹாசன், கட்சித் தலைவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுவதாகவும், ஊழல் குற்றச்சாட்டுகளின் பட்டியலை வெளியிடுவது தங்களின் வேலைகளை எளிதாக்குகிறார்கள் என்றும் பட்டியலை வெளியிட்டால் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.
கூட்டணி குறித்து தனது முடிவை ஜனவரி மாதம் அறிவிப்பேன் என்று கூறிய கமல்ஹாசன் தனது தலைமையின் கீழ் மூன்றாவது அணி உருவாகும் என்று உறுதி கூறினார்.
அவர் அரசியலில் எவ்வாறு நினைவுகூரப்பட விரும்புகிறார் என்ற கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், ‘நேர்மையான அரசியலில் ஈடுபட்டேன்’ என்று அவரது கல்லறையில் எழுதினால் அது போதுமானது என்றார். அவர் மேலும் கூறுகையில், முதல்வராக தனது முதல் செயல் வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதே ஆகும் என்று கூறினார்.