கடந்த ஜூன் 19 ஆம் தேதி நடைபெற்ற ஆறு மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) சார்பில் களமிறக்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வாகியிருந்தார். இந்நிலையில், அவர் இன்று (ஜூலை 25, 2025) மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார். மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு விழாவில், "கமல்ஹாசன் எனும் நான், இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும் பற்றுறுதியும் கொண்டிருப்பேன், இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் உறுதியாகப் பற்றி நிற்பேன், நான் இப்போது ஏற்கவிருக்கும் கடமையினை நேர்மையாக நிறைவேற்றுவேன்" என்றும் தமிழில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
கமல்ஹாசனின் இந்தப் பதவியேற்பு, மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. இது அவரது அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த நிகழ்வில், தமிழகத்திலிருந்து புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு கட்சி உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். குறிப்பாக, தி.மு.க.வைச் சேர்ந்த வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா (ராஜாத்தி), எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாகப் பதவியேற்றனர். இதில், தி.மு.க. எம்.பி. வில்சன் ஏற்கனவே எம்.பி.யாகப் பதவி வகித்து, பதவிக் காலம் நிறைவடைந்த நிலையில் மீண்டும் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மாநிலங்களவை எம்.பி.யாக கமல்ஹாசன் பதவியேற்ற நிலையில், மக்களின் பிரச்னைகள் குறித்து பேச இது ஒரு வலிமையான வாய்ப்பு என முரளி அப்பாஸ் கூறியுள்ளார்.