Kamal haasan tamil news: தமிழகத்தில் வரும் 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலுக்கு தயாராகும் வகையில் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. மேலும் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தங்களை தயார்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் அங்கிகரிக்கப்படாத கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நேற்று சின்னங்கள் வழங்கியது. இதில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பிரசர் குக்கர் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சின்னம் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு சேர்த்து ஒதுக்கப்பட்டுள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விவசாயி சின்னம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த பட்டியலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதுச்சேரியில் மட்டும் டார்ச் லைட் சின்னம் வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இன்னும் சின்னம் வழங்கப்படவில்லை.
சினிமாவில் உச்சநட்சத்திரமாக இன்றளவும் திகழ்ந்து வரும் கமல்ஹாசன் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 21-ந்தேதி மதுரையில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சி தொடங்கி தனது அரசியல் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார். கட்சி தொடங்கிய அடுத்த வருடமே நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் கனிசமான வாக்குகள் பெற்றனர்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்படவில்லை. ஆனால் டார்ச் லைட் சின்னம் கிடைக்கவில்லை என்றால் கலங்கரை விளக்கமாவோம் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் செய்தியாளர்ளை சந்தித்த அவர், தான் நடித்த தசவதாரம் படத்தில் வரும் ‘’தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன் ஞாபகம் வருகிறதா’’ என் பாடல் வரிகளை கூறி இப்போது நமக்கு டார்ச் லைட் சின்னம் தேர்தல் ஆணையத்தால் மறுக்கப்பட்டுள்ளது. டார்ச்லைட் இல்லை என்றால் கலங்கரை விளக்கமாவோம் என தெரிவித்துள்ளார். மேலும் சாதாரண ஒரு ரூபத்தை விஸ்வரூபமாக்குவது இவர்கள் தான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.