‘நாங்கள் ஒத்துழையாமை இயக்கம் நடத்தினால் நாடு அதிரும்’ : காவிரி பிரச்னையில் கமல்ஹாசன் எச்சரிக்கை

கமல்ஹாசன் திருச்சி பொதுக்கூட்டம், காவிரி பிரச்னையை மையமாக எடுத்துக் கொண்டது. மேடையில் காவிரி பிரச்னையை சுட்டிக்காட்டி பதாகை வைக்கப்பட்டது.

கமல்ஹாசன் திருச்சி பொதுக்கூட்டம், காவிரி பிரச்னையை மையமாக எடுத்துக் கொண்டது. மேடையில் காவிரி பிரச்னையை சுட்டிக்காட்டி பதாகை வைக்கப்பட்டது.

கமல்ஹாசன் திருச்சி பொதுக்கூட்டத்தை திட்டமிட்டபோது, காவிரி பிரச்னை இவ்வளவு சீரியஸாக இல்லை. ஆனாலும் காவிரிக்காக வேறு போராட்டம் எதையும் நடத்தாத கமல்ஹாசன், இந்தப் பொதுக்கூட்டத்தை காவிரி பிரச்னைக்காக களமாக எடுத்துக் கொண்டார்.

கமல்ஹாசன் திருச்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று (ஏப்ரல் 3) சென்னையில் இருந்து வைகை எக்ஸ்பிரஸில் கிளம்பினார். 3 பெட்டிகளை முன்பதிவு செய்த கமல் தரப்பு, அதில் சென்னையில் இருந்து பத்திரிகையாளர்களையும் அழைத்துச் சென்றார். ஒவ்வொரு பத்திரிகையாளருக்கும் சில நிமிடங்கள் ஒதுக்கி, ரயில் பயணத்தில் அவர்களுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக்கொண்டு பேட்டியும் கொடுத்தார் கமல்!

கமல்ஹாசன் திருச்சி ரயில் நிலையத்தில் இறங்கியபோது, அங்கு அவரது கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இன்று மதியம் பத்திரிகையாளர்களை சந்தித்த கமல்ஹாசன், மாலையில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தயாரானார்.

திருச்சி பொன்மலை திடலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்கூட்டத்திற்காக பிரமாண்ட மேடை போடப்பட்டிருந்தது. மாலை 6.30 மணிக்கே மைதானத்தில் கூட்டம் திரண்டது. பொதுக்கூட்டம் தொடர்பான LIVE UPDATES

இரவு 9.50 மணி : ‘வேகத்தை குறைத்து வாகனங்களை பாதுகாப்பாக ஓட்டிச் செல்லுங்கள். சொன்னவற்றை சிந்தியுங்கள். செயல்படுங்கள்’ என கூறி முடித்தார் கமல்.

இரவு 9.45 : பள்ளிகளில் சாதி ஒழிப்பு குறித்த ஒரு கேள்விக்கு, ‘கேரளாவில் பள்ளிகளில் சாதியை குறிப்பிடாவிட்டாலும் இட ஒதுக்கீடு உண்டு என சட்டம் இயற்றியிருக்கிறார்கள். இங்கும் அந்தச் சட்டத்தை நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன். அதைச் செய்தால், சாதி படிப்படியாக ஒழியும்’ – கமல்ஹாசன்

இரவு 9.40 : எஸ்.சி., எஸ்.டி சட்டம் இப்போது இருப்பது போல இறுக்கத்துடன் தொடரவேண்டும் என்பது எங்கள் கருத்து என மற்றொரு கேள்விக்கு கமல்ஹாசன் பதில் அளித்தார்.

இரவு 9.35 : ‘சினிமாவில் நீங்கள் நன்றாக நடிக்கலாம். அரசியலில் நீங்கள் எதுவும் செய்ய முடியாது என ஒரு அமைச்சர் கூறியிருக்கிறாரே?’ என கேட்கப்பட்டது. அதற்கு கமல்ஹாசன், ‘யார் என்று புரிந்துவிட்டது. (அமைச்சர் ஜெயகுமார்) அந்தக் கட்சியில் எனக்கு சம்பளம் வாங்காத செய்தி தொடர்பாளராக அவர் இருக்கிறார். அதற்காக அவருக்கு பாராட்டு. அவரது சேவை தொடரவேண்டும்.

அவருக்கு நான் சொல்லிக் கொள்கிறேன். நான் அரசியலில் நடிப்பதில்லை’ என்றார் கமல்ஹாசன்.

இரவு 9.35 : அடுத்து ஏற்கனவே தயாரிக்கப்பட்ட கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதில் அளித்தார்.

இரவு 9.30 : ‘தமிழகம் ஒத்துழையாமை இயக்கம் நடத்தினால், நாடு அதிரும். கைப்பாவையாக மாற்றி தமிழகத்தை விளையாட பார்க்கிறார்கள். நடக்காது. மருது சகோதரர்கள் காலத்தில் இருந்து நடக்கவில்லை. இப்போதும் நடக்காது. இது ஒன்றுபட்ட நாடு. அதை மாற்றக்கூடாது என்கிற பதற்றம் எங்களுக்கு இருக்கிறது’ – கமல்ஹாசன்

இரவு 9.20 : ‘கர்நாடகாவில் இருந்து பெறவேண்டிய நீரை பெற்றே தீருவோம். அது நம் உரிமை. மற்ற மாநிலங்களில் இருந்து பெற வேண்டிய நீரை சட்ட ரீதியாகவும் பேச்சுவார்த்தை மூலமாகவும் பெறுவோம். அது நம் கடமை!’ – கமல்ஹாசன்

இரவு 9.15 : விவசாயம், மகளிர் நலம், கல்வி என ஒவ்வொரு தலைப்பாக மக்கள் நீதி மய்யத்தின் செயல் திட்டங்களை விரிவாக விவரித்தார் கமல்ஹாசன்.

இரவு 9.00 : காவிரி பிரச்னை குறித்து நிபுணர்கள் தெரிவித்த கருத்துகளை மேடையில் வீடியோவாக போட்டுக் காட்டினார் கமல்ஹாசன்.

இரவு 8.50 : ‘காவிரி பிரச்னையில் தீர்வை நோக்கி நகரவே இல்லை. இது என் அழுத்தமான கருத்து. இதில் மத்திய அரசின் முதுகுக்கு பின்னால் மாநில அரசு ஒழிந்து நிற்கிறது’ – கமல்ஹாசன்

இரவு 8.45 : ‘சுதந்திரத்திற்கு ஒத்துழையாமை இயக்கம் நடத்தினோம். எங்கள் மாண்புமிகு மத்திய அரசுக்கு நாங்கள் சொல்வது, நீங்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், தமிழகம் சாத்வீக முறையில் ஒத்துழையாமையை நடத்தும். வீரத்தில் உச்சகட்டம், சாத்வீகம்தான்’ – கமல்ஹாசன்

இரவு 8.40 : ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீரவேண்டும். திசை திருப்பாதீர்கள். நீங்கள் எத்தனை கலவரங்களை ஏற்படுத்த நினைத்தாலும், திரும்பவும் இந்த கோரிக்கையை வைப்போம்.’-கமல்ஹாசன்

இரவு 8.37 :  ‘இங்கே முதல்வர் ஆனால், முதல் கையெழுத்து என பேசினார்கள். அது சிலருக்கு அதிகப் பிரசிங்கித்தனமாக இருக்கலாம். ஆனால் பறக்க நினைத்தால் பறக்கலாம். அப்படி மனிதன் கண்டுபிடித்ததுதான் விமானம். எனவே நடக்கும்’ (முதல்வர் ஆவேன்!) என்று கூறினார் கமல்.

இரவு 8.35 : உயர் மட்டக் குழு உறுப்பினர் பாரதி கிருஷ்ணகுமாரின் உரைக்கு பிறகு, இரவு 8.35 மணிக்கு கமல்ஹாசன் பேச ஆரம்பித்தார்.

இரவு 8.00 : ‘செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு முன்னோட்டமாக மலைக்கோட்டையில் குழுமியிருக்கிறோம். திருச்சி மாவட்டம் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும். தமிழர்களால் இழக்கப்பட்ட அனைத்தும் நம்மவரால் மீட்கப்படும்’ என ஜல்லிக்கட்டு ராஜேஷ் பேசினார்.

இரவு 7.45 : திருச்சி பொதுக்கூட்டத்தையொட்டி கொடியேற்ற வந்த கமல்ஹாசன், ‘எங்கள் கொடியை தலைவன் என்ற முறையில் நான் ஏற்றுவதை விட தொண்டர்கள் ஏற்றவேண்டும். இம்முறை இங்கே திருச்சியில் ஒரு பெண்மணி, நமது கட்சியின் கொடியை ஏற்றவேண்டும் என்று நினைக்கின்றேன். ஈரோடு மாவட்டத்தைச்சேர்ந்த ரெஜினா ஆர் அவர்கள் இங்கு கொடியேற்றுவார்!’ என அறிவித்தார். ரெஜினா கொடியேற்றினார்.

இரவு 7.30 : நடிகை ஸ்ரீபிரியா பேசுகையில், ‘நம்மவர் முதல்வர் ஆக வேண்டும். மாணவர்களைத்தான் நம்பியிருக்கிறோம். மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரபூர்வ பாடலை வித்யாசாகர் இசையில் இங்கு அறிமுகப்படுத்துகிறோம். நம் தலைவர் கமல்ஹாசன் எழுதிப் பாடியிருக்கிறார்’ என கூறவும், ‘நாளை நமதே’ என தொடங்கும் பாடல் ஒலிபரப்பப்பட்டது.

இரவு 7.15 : ‘காவிரி பெரிதா? கங்கை பெரிதா? என்ற கேள்விக்கு காவிரியே பெரிது எனக்காட்டிய திருச்சிக்கு நன்றி! ஊர் கூடி தேர் இழுப்போம், அனைவரும் வாரீர்!’ என உயர் மட்டக்குழு உறுப்பினர் கமீலா நாசர் பேசினார்.

இரவு 7.00 : பொதுக்கூட்டத்தில் நிர்வாகிகள் பேசத் தொடங்கினர். கமீலா நாசர், நடிகை ஸ்ரீபிரியா உள்ளிட்டோர் பேசினர்.

மாலை 6.45 : பொதுக்கூட்ட மேடையில் கமல்ஹாசனை புகழ்ந்து, இசை நிகழ்ச்சி நடந்தது.

மாலை 6.30 : தமிழ்நாடு முழுவதும் இருந்து அந்தந்த மாவட்ட நிர்வாகிகள், கமல்ஹாசன் அபிமானிகள் பெருமளவில் வந்திருந்தனர். அண்மையில் திருச்சியில் போக்குவரத்து போலீஸார் உதைத்ததில் பலியான உஷா குடும்பத்தினருக்கு காலையில் ஆறுதல் கூறிய கமல்ஹாசன், ஏற்கனவே அறிவித்த ரூ10 லட்சம் நிவாரண நிதியையும் வழங்கினார். பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் இதை சிலாகித்து பேசினர்.

 

×Close
×Close