தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனி அணியை அமைத்துள்ள கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை புதன்கிழமை வெளியிட்டுள்ளது. அக்கட்சியில் இணைந்துள்ள கலாமின் ஆலோசகர் சென்னை அண்ணாநகர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆளும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, தமாக, புரட்சி பாரதம் கட்சி உள்ளிட்ட ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. எதிர்க்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம், ஐ.யூ.எம்.எல், மமக, தவாக, கொ.ம.தே.க ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையில், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இது மூன்றாவது அணி அல்ல முதல் அணி என்று கமல்ஹாசன் வலியுறுத்தி வருகிறார்.
மநீம தலைமயிலான கூட்டணியில் அக்கட்சி 154 தொகுதிகளிலும் ஐஜேகே 40 தொகுதிகளிலும் சமக 40 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன என்று தொகுதிபங்கீடு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யத்தின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 70 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் அண்மையில், மநீமவில் சேர்ந்த அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் சென்னை அண்ணாநகர் தொகுதியில் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.