நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசனால் உருவாக்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. இதைப் பற்றி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அந்த கட்சியின் டுவீட் பொதுமக்களிடையே வைரலாகி வருகிறது.
இணையதளம் ஹேக் செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, மக்கள் நீதி மையம் கட்சியின் டுவிட்டர் பக்கத்தில், கட்சியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் சில தவறான நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், அத்தகைய அச்சுறுத்தலுக்கு கட்சி பயந்துவிடாது என்றும், தகுந்த பதிலை அளிக்கும் என்றும் அறிவித்தது.
ஜனவரி 30 அன்று மக்கள் நீதி மையம் கட்சி காங்கிரஸுடன் இணைப்பதாக இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையால் பலர் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில் தற்போது அவர்கள் வெளியிட்டுள்ள இந்த தகவல் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இதை தொடர்ந்து, இந்த கட்சியின் செய்தித் தொடர்பாளர், "காங்கிரஸுடன் கட்சியை இணைப்பது தொடர்பான முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை, இது ஹேக்கர்களின் கைவேலையாகும்" என்று கூறினார்.
பிப்ரவரி 27ம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிப்பதாக மக்கள் நீதி மையம் அறிவித்திருந்தது. கடந்த மாதம் நடந்த பாரத் ஜோடோ யாத்திரையின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கமலஹாசன் ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.