Advertisment

'மழை வெள்ளத்துக்கு பயந்து பதுங்கிய எடுபிடி தலைவர்': இ.பி.எஸ் மீது கமல்ஹாசன் கட்சி கடும் விமர்சனம்

மழை தொடங்குவதற்கு முன்னரே தலைமறைவான எடப்பாடி, பதுங்கு குழியிலிருந்து இப்போதுதான் வெளியே வந்து, மக்கள் தொண்டு புரிபவரை விமர்சிக்கிறார்; மக்கள் நீதி மய்யம் கண்டனம்

author-image
WebDesk
New Update
Kamal

மழை தொடங்குவதற்கு முன்னரே தலைமறைவான எடப்பாடி, பதுங்கு குழியிலிருந்து இப்போதுதான் வெளியே வந்து, மக்கள் தொண்டு புரிபவரை விமர்சிக்கிறார்; மக்கள் நீதி மய்யம் கண்டனம்

மழை வெள்ளத்துக்குப் பயந்து ஓடிப்போய் எங்கோ பதுங்கிக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, மக்கள் நலனுக்காக களத்தில் நிற்கும் கமல்ஹாசனை விமர்சிப்பதா? என மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Advertisment

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் பெய்த அதிகனமழையால் 4 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் வடிந்தாலும், ஒரு சில பகுதிகள் இன்னும் பழைய நிலைக்கு திரும்பவில்லை.

அதேநேரம், முதல்வர் ஸ்டாலின் உட்பட, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாநகராட்சி அதிகாரிகள் என அனைவரும் மழைநீர் தேங்கும் பகுதிகளில் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு நிவாரணப் பணிகளை செய்து வருகின்றனர். ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தி.மு.க அரசு சரியாக மேற்கொள்ளவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 2 நாட்களுக்கு முன்பு ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார். அதில், " அரசு எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டாலும் இயற்கைச் சீற்றங்களின் விளைவுகளை ஓர் எல்லை வரைதான் கட்டுப்படுத்த முடியும். இந்தத் தருணத்தில் நமது பாதுகாப்பை உறுதி செய்துகொண்டு, அரசு இயந்திரத்தோடு கைகோர்த்து செயல்பட்டு நிலைமை சீரடைய உதவ வேண்டியது அவசியம்" என்று கூறியிருந்தார்.

ஆனால், அ.தி.மு.க ஆட்சியில் மழை வெள்ள பாதிப்பின்போது அரசை விமர்சித்த கமல்ஹாசன், தற்போது அரசுக்கு ஆதரவாகப் பேசியது கடும் விமர்சனங்களைச் சந்தித்தது. மழை பாதிப்பு குறித்து அரசை குறை கூறும் நேரம் இதுவல்ல என்று கமல்ஹாசன் கூறியது பற்றி செய்தியாளர்கள் நேற்று எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “கமல்ஹாசன் ஒரு பச்சோந்தி போன்றவர், அவரை அரசியல்வாதியாக நான் மதிக்கவில்லை, அவர் கட்சியில் அவரை தவிர வேறு யாரும் இல்லைஎனக் கூறினார்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் நீதி மய்யம் பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் தலைநகரம் புயல் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, ​​எங்கோ ஓடிப்போய் பதுங்கிக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர், மக்கள் நலனுக்காக களத்தில் நிற்கும் நம்மவரை பச்சோந்தி என்று விமர்சித்திருப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது.

மக்கள் நீதி மய்யமும், அந்த தொண்டர்களும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் களப்பணியாற்றி வருகின்றனர். தலைவர் கமல்ஹாசன் அவர்களின் மேற்பார்வையில் மக்களைச் சந்தித்து, நிவாரணப் பொருட்களையும், தேவையான உதவிகளையும் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், மழை தொடங்குவதற்கு முன்னரே தலைமறைவான எடப்பாடி, பதுங்கு குழியிலிருந்து இப்போதுதான் வெளியே வந்து, மக்கள் தொண்டு புரிபவரை விமர்சிக்கிறார்.

தமிழக முதல்வரும், மாநில அரசும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் இருக்கிறார் என்பதற்கான எந்த அடையாளமும் இல்லாத, யாரையும் விமர்சிக்கத் தகுதியே இல்லாதவர், தன்னலமின்றிப் பணிபுரிவோரை குறைகூறுவதை பொதுமக்கள் மட்டுமல்ல, அவர்கள் கட்சியினரே ஏற்க மாட்டார்கள்.

2015-ம் ஆண்டு சென்னையே வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்தபோது, ​​தமிழகத்தை ஆண்ட முதல்வர் எங்கே இருக்கிறார், எந்த நிலைமையில் இருக்கிறார் என்பது மக்களுக்குத் தெரியாத நிலை. அப்போதும் இவர்கள் யாரும் களத்தில் இல்லை, இப்போது மக்களுடன் இல்லை.

பொதுமக்களைப் பற்றிக் கவலைப்படாமல், கூவத்தூரில் கும்மாளம் அடித்துக் கொண்டிருந்தவர்களுக்கு, தனது சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை மக்களுக்காகச் செலவழித்துக் கொண்டிருக்கும் தலைவரைப் பற்றி விமர்சிக்கத் தகுதி உண்டா?

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வலர்கள் நிவாரணப் பொருட்களை அனுப்பியபோது, அவற்றை வழியில் மறித்துப் பிடுங்கி, ஸ்டிக்கர் ஒட்டிய கும்பலைச் சேர்ந்தவர்தானே எடப்பாடி பழனிசாமி?

கஜா புயலின்போது எங்கள் தலைவர் நம்மவர் களத்தில் இறங்கி நிவாரணப் பணிகளைச் செய்துகொண்டிருக்கும்போது, ​​ஹெலிகாப்டரில் வந்து வேடிக்கை பார்த்துவிட்டுச் சென்றவர்தானே எடப்பாடி.

தனது வாழ்நாளை எடுபிடி பழனிசாமியாகக் கழித்த இவர், அந்தக் கட்சியின் தலைவி மறைந்த பின்னர், மேஜைக்கடியில் தவழ்ந்து சென்று, கூழைக்கும்பிடு போட்டு திடீரென எடப்பாடி பழனிசாமியானார். அதற்குப் பிறகும், பதவி, அதிகாரத்தைத் தக்கவைக்கவும், சிறைப் பறவையாகாமல் இருப்பதற்காகவும் மீண்டும் பா.ஜ.க.,வின் அடிமையானார். வாழ்வு அளித்தவருக்கே துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமியை பச்சோந்தி என்று விமர்சித்தால், பச்சோந்திக்குத்தான் அவமானம். உயிர்ச்சூழலில் பச்சோந்திக்கும் முக்கியப் பங்கு உண்டு. எடுபிடி பழனிச்சாமிக்கு அந்த முக்கியத்துவமும் கிடையாது.

மத்திய பா.ஜ.க அரசின் அடிவருடியாகச் செயல்பட்டு, மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்களைக் கொண்டுவந்ததுடன், சிறுபான்மையினரைப் பாதிக்கும் சட்டங்களுக்கு கையெழுத்திட்டுவிட்டு, இப்போது திடீரென கூட்டணியை முறித்துக் கொண்டதாக நாடகம் போடும் இவர், தனது கொள்கையில் மாறாமல் இருக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவரை விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என கடுமையாக எச்சரிக்கிறோம். இனியும் ஏதாவது பேசினால், இவர் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றாமல் விடமாட்டோம்.எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Edappadi Palanisamy Mnm Kamalhaasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment