”அரசியல் தலைவனாகி கட்சியை நடத்தும் திறமை எனக்கு கிடையாது”: கமல்ஹாசன்! (ஃப்ளாஷ்பேக்)

எனக்கு ஒரு தலைவர் வேண்டும். அந்தத் தலைவனுக்குரிய அருகதைகளை நான் தான் தீர்பானிப்பேன்

இன்றைய தினம் தொலைக்காட்சிகள்,பத்திரிக்கைகள், சமூக வலைத்தளங்கள் என அனைத்திலும் ப்ரேக்கிங் நியூஸாக வந்துக் கொண்டிருப்பது நடிகர் கமல்ஹாசனின் அரசியல் பயணம் குறித்த நிகழ்வுதான்.

ராமேஸ்வரத்தில் தனது அரசியல் அரிதாரத்தை பூசியுள்ள கமல், இன்று மாலை மதுரையில் நடைபெறவுள்ள பொதுகூட்டத்தில் தனது கட்சியின் சின்னம், பெயர், கொள்கை குறித்த முழு விபரத்தையும் அறிவிக்கிறார். அரசியல் களத்தில் கமலின் இந்த பார்வை எப்போது ஆரம்பித்தது என்று யவருக்கும் தெரியாது.

ஆனால், 2002 காலக்கட்டத்தில் அரசியல் குறித்து கமலின் எண்ணம் எப்படி இருந்தது? என்பதை அவரே பகிர்ந்துக் கொண்டுள்ளார். அந்த பேட்டியை தற்போது புரட்டிப் பார்க்கலாம்

குமுதம் பப்ளிக்கேஷன் நிறுவனத்தினரால் 2002 ஆம் ஆண்டு முதல் தீவிர இலக்கியத்துக்கான மாத இதழாக வெளியானது ‘தீராநதி’. இந்த இதழிற்கு நடிகர் கமலஹாசன் பேட்டியளித்த போது அவரிடம் அரசியல் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு உலகநாயகன் அளித்திருந்த பதில் மீண்டும் உங்கள் பார்வைக்கு…

கேள்வி: உங்களது தந்தை காங்கிரஸ் இயக்கத்தின் அனுதாபியாகவும், காமராஜரும் நண்பராகவும் இருந்தவர். நீங்கள் பெரியார் பற்றிப் பேசினாலும் எந்த அரசியல் இயக்கத்தின் சார்பு நிலையிலும் இல்லையே! நம்பிக்கை வைக்கக்கூடிய அளவுக்கு எந்த இயக்கத்தின் செய்ல்பாடு இல்லை என்று நினைக்கிறீர்களா?

கமலின் பதில்: ”அந்த மாதிரியான சார்புநிலை ஏனோ வரவில்லை. ‘ஏன் எந்தக் கட்சியிலும் சேரவில்லை? அரசியல் கட்சியில் சேர்ந்தால் உங்களுக்குப் பின்னுள்ள பலத்தை தசை வலுவைச் சேர்க்கலாமே’ என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கான ‘பிரஷரே’ எனக்கிருந்தது. அப்போது நான் சொன்னேன். நானே தலைவனாகி அரசியல் கட்சியை நடத்துகிற அளவுக்கு எனக்குத் திறமையும் கிடையாது. அனுபவமும் கிடையாது. அதற்கான ஆசையும் கிடையாது. எனக்கு ஒரு தலைவர் வேண்டும். அந்தத் தலைவனுக்குரிய அருகதைகளை நான் தான் தீர்பானிப்பேன். அதில் முதல் அருகதையாக நான் தேடுவதென்றால் எதிலும் சாதி நோக்கம், அதற்கான பார்வை இருக்கக்கூடாது. ‘காரைக்குடியா’ செட்டியார் சமூகத்திலிருந்து போடுங்க…. விருதுநகரா? நாடாரைப் போடுங்க’ன்னு சொல்லாத ஒரு அரசியல் தலைவர் இருந்தால், கண்டிப்பாக இவ்வளவு பேரையும் கூட்டிக் கொண்டு போய்ச் சேர்ந்து பச்சை குத்திக் கொள்ளவும் தயார்.

இந்த நிலையில் குறிப்பிட்ட கட்சியில் நான் சேர வாய்ப்பிருக்கிறது என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? காங்கிரஸை எப்போது இழுத்து மூட வேண்டும் என்று காந்தியார் சொல்லியிருக்கிறார் என்பதும் நமக்குத் தெரியும். எந்தவொரு அரசியல் கட்சியிலும் ஏன் நான் சேரவில்லை என்பதற்கான பதிலை மக்களே சொல்வார்கள். எந்த அரசியல்வாதியும் தேவலோகத்திலிருந்து வரவில்லையே. மக்கள் வசிக்கிற தெருவிலிருந்துதானே வருகிறார்கள். மக்கள் மோசமாக இருந்தால் திருடன்தானே தலைவனாக வரமுடியும். ஒருத்தருடைய தனிப்பட்ட தகுதி, நேர்மை இரண்டையும் வைத்தல்லவா தலைவனுக்குரிய தலைமையைத் தீர்மானிக்க வேண்டும்?

கமல்ஹாசன் வெறுமேன ஜெயலலிதா ஆட்சியோ, கருணாநிதி ஆட்சியோ, நாயனார் ஆட்சியோ சரியில்லை என்று சொல்லிக் கொண்டிருப்பதில்லை. என்னுடைய சினிமா, என்னுடைய திரைக்கதை, ஆகியவற்றில் நான் ஒழுங்காக இருக்கிறேனா என்பது மிக முக்கியம். என் பெட்டிக் கடையை சரியாக கவனிக்கிறேனா? நம் வீட்டுத் திண்ணை சரியில்லையே, அது சுத்தமாக இருக்க வேண்டாமா? இந்த விஷயத்தில் நான் ஒரு போதனையாளனாகவும் இருக்க விரும்பவில்லை.

ஒரு பிரதிபலிக்கக்கூடிய ஊடகம். அதில் என்னால் சொல்ல முடிந்ததைச் சொல்கிறேன். அதை பார்த்தாலாவது தனக்குத் தாடி இவ்வளவு வளர்ந்திருப்பதை உணர்ந்து சவரம் பண்ண மாட்டார்களா? அலங்காரம் கருதியாவது தனது அலங்கோலத்தை மாற்ற மாட்டார்களா என்று ஒரு நம்பிக்கை”.

கமலின் இத்தகைய பதில், அவரின் அரசியல் பார்வை எந்த அளவிற்கு பரந்து விரிந்து இருக்கிறது என்பதை தெளிவாக உணர்த்துகிறது. ஒரு தலைவரைப் பொறுத்த வரையில் கமலின் எண்ணம் சீராக இருந்துள்ளது. தற்போது தனிக் கட்சி துவங்கவுள்ள கமல் இதுவரை அளித்து வந்த எல்லா பேட்டியிலும் ”நான் தனிக்கட்சி ஆரம்பிக்க உள்ளேன், மக்களுடன் என்னை இணைத்துக் கொள்ள வந்திருக்கிறேன்” என்பதையே ஆழமாக பதிவு செய்து வருகிறார். அப்படியென்றால், கட்சியின் தலைவனாக கமல் முன்னிருத்துவது யாரை?

இதற்கான பதில் இன்று மாலை தெரிந்துவிடும். அதுவரை பொருந்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close