’கழிவை நீக்குவதற்கான எந்த உபகரணங்களும் வழங்கப்படவில்லை. வெறும் பாத்ரூம் பக்கெட்டை மீனவர்களிடம் கொடுத்து அள்ளச் சொல்வது, மனிதாபிமானமற்ற செயல்’என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
எண்ணெய் கசிவை ஆய்வு செய்த பின் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது ” நான் இங்கு வருவது முதல் முறை அல்ல. ஒவ்வொரு முறையும் இந்த மாசுபாடு குறையும் என்று நம்பிக்கொண்டிருக்கிறேன். இதில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று மக்களுக்கு நம்பிக்கை கொடுத்து 7 வருடம் ஆகிறது. ஆனால் நிலை இன்னும் மோசமாக மாறியிருக்கிறது. இதற்கு ’நாங்க என்ன பன்ன முடியும் இயற்கை என்று சொல்லிவிட்டு’ தப்பிக்க முடியாது. இதற்கு காரணம் எண்ணெய் என்பது நதிக்கு மேலே பிளாஸ்டிக் விரித்ததுபோல் உள்ளது.
17ம் தேதிக்குள் கழிவை எடுக்க வேண்டும் என்று மதிப்பிற்குறிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இன்று தேதி 17. இது நடக்கும் என்று தெரியவில்லை. இன்னும் 17 நாட்கள் ஆனாலும் இது நீக்கப்படும் என்று தெரியவில்லை. மேலும் இங்கு வேலை செய்யும் ஆட்கள் யாரும் டெக்னீஷியன் அல்லது இத்துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் கிடையாது. கழிவை நீக்குவதற்கான எந்த உபகரணங்களும் வழங்கப்படவில்லை. வெறும் பாத்ரூம் பக்கெட்டை மீனவர்களிடம் கொடுத்து அள்ளுவது, மனிதாபிமானமற்ற செயல்.
இந்த கழிவுக்கு நீங்கள்தான் காரணம் என்று ஒருவரை ஒருவர் கைகாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்த கழிவை சுத்தம் செய்வதற்கு இவர்கள் அல்ல துப்புரவுத் தொழிலாளர்கள். இவர்களுக்கு பொங்கல் போனஸ், புது வருட போனஸ் கொடுத்து தப்பிக்க முடியாது. இதுபோன்ற கழிவுகள் ஏற்பட காரணமாக இருந்தவர்களுக்கு அரசு பெரும் தண்டனை வழங்கவேண்டும். அந்த பயம் இருந்தால் யாரும் தவறு செய்யமாட்டார்கள். இவர்கள் மீன் பிடி தொழிலை நம்புபவர்கள். மீன்களை எண்ணெய்யில்தான் பொறிக்க உள்ளீர்கள். இப்போது எண்ணெய் தடவி கொடுத்துவிட்டோம் பொறித்திக்கொள்ளுங்கள் என்று சொல்வது சரியாக இருக்காது. மாநில அரசு, மத்திய அரசு என்பதெல்லாம் இவர்களுக்கு புரியாது. இது இவர்கள் பூமி. தப்பு செய்தவர்கள், இழப்பிற்கான பணத்தை கொடுக்க வேண்டும்.
மேலும் பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் இந்த சுத்திகரிப்பு வேலையை செய்ய வேண்டும். கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் இது எல்லா வருடமும் ஏற்படும் ஒன்றாக இருக்கும். 2 நாட்களுக்கு முன்பு வந்திருந்தால், என்னால் சரியாக பேசிருக்க கூட முடியாது. இருமல், மூச்சி திணறல் வந்திருக்கும். சந்திரயான் விட முடிகிறது. ஆனால் மலம் அள்ளுவதற்கு, இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படும் போது அதை கையாள கருவிகள் கண்டுபிடிக்கப்படவில்லை” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“