'ஆண்டவர்' எனும் கோஷத்தை இனி தவிர்ப்பேன்! - கமல்ஹாசன்

ஆழ்வார்பேட்டை ஆண்டவர் என்பது சர்ச்சைதான். இது பழைய கூக்குரல்

ஊழலை ஒழிக்கவே அரசியலுக்கு வந்துள்ளதாகவும், மூட நம்பிக்கைகளை மட்டுமே ஒழிக்க வந்ததாக கூற முடியாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன். அப்போது, ‘அமாவாசை தினமான நேற்று ஆழ்வார்பேட்டை கட்சி அலுவலகத்தில் கட்சி கொடியேற்றியதன் மூலம் பகுத்தறிவாதி என்ற போலி முகத்திரை கிழிந்துவிட்டதாக உங்களை பற்றி பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளாரே?’ என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “பல்வேறு தரப்பு, மதத்தை சேர்ந்தவர்கள் இந்தியாவில் உள்ளனர். எனது மகள் ஷ்ருதி கூட பகுத்தறிவாதி என கூற முடியாது. மூட நம்பிக்கையை மட்டும் ஒழிக்க அரசியலுக்கு வரவில்லை. ஏழ்மையையும், ஊழலையும் ஒழிக்கவே வந்துள்ளதாக நான் நினைக்கிறேன். இதற்கு எல்லோருடைய உதவி தேவை. நேற்று அமாவாசை என்றெல்லாம் எனக்கு தெரியாது” என்றார்.

நேற்று சென்னையில் நடந்த மக்கள் நீதி மய்யம் கட்சி நிகழ்ச்சியின்போது, ‘ஆழ்வார்பேட்டை ஆண்டவரே’ என கோஷமிட தொண்டர்களுக்கு துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த கமல், “ஆழ்வார்பேட்டை ஆண்டவர் என்பது சர்ச்சைதான். இது பழைய கூக்குரல். இதை தவிர்க்கத்தான் வேண்டும். இதைப்பற்றி வந்த விமர்சனங்கள் சரியானவைதான். பழையபடி சினிமா நட்சத்திரங்களை போற்றும் நாகரீகம் மாற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். அவர்கள் சார்பில் இனிமேல் நிகழாது என வாக்குறுதி அளிக்கிறேன். எனது கட்சியின் சார்பில் இப்படி ஏற்பாடு செய்திருந்தால் அவர்களை கண்டிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், “சட்டசபை-நாடாளுமன்ற தேர்தல்கள் ஒரே நேரத்தில் குவியலாக நடைபெற கூடாது என்பது, மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு. சத்துணவு முட்டை முறைகேட்டை ஓராண்டுக்கு முன்பே நாங்கள் அம்பலப்படுத்தியுள்ளோம். லோக்ஆயுக்தா மசோதாவில் நிறைய தண்ணீர்தான் உள்ளது. பால் இல்லை” என்றார். இதற்காக என்ன செய்யலாம்? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, பாலை சேர்க்கக் கூடாது. பாலாகத்தான் இருக்க வேண்டும் என்றார்.

‘அமித்ஷா வருகைக்கு பிறகு தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது, தமிழகத்தில் தாமரை மலரும்’ என்று தமிழிசை கூறியுள்ளாரே என்ற நிருபர்கள் கேள்விக்கு, ‘அவர் எந்த தாமரையை சொல்கிறார் என தெரியவில்லை’ என்று கூறி விடைபெற்றார் கமல்ஹாசன்.

×Close
×Close