கர்நாடகத்திலிருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 4ம் தேதி திருச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், 'காவிரியில் நமக்கு கிடைக்கவேண்டிய பங்கு, நமது உரிமை. அதை விட்டுக்கொடுக்க முடியாது. இந்த நீர் பேரத்தினால் தமிழர்களை எவ்வளவு கெஞ்ச வைக்க முடியுமோ அவ்வளவு கெஞ்ச வைத்துவிட்டனர். அதற்கு காரணம், மத்திய அரசின் முதுகுக்கு பின்னே இருக்கும் தமிழக அரசு தான்.
இதற்கான நிவாரணத்தை பல சட்ட அறிஞர்களும் நீர்நிலை ஆராய்ச்சியாளர்களும் சொல்லியிருக்கின்றனர். சாதாரண பாமர மக்களுக்கு, பாதசாரிகளுக்கும் கூட தோணுகிறது, 'இதை ஏன் இவர்கள் செய்யவில்லை என்று?'. இப்போதும் நான் கேட்கிறேன், ஏன் செய்யவில்லை? செய்யுங்கள், இல்லையெனில் தள்ளி நில்லுங்கள். செய்ய எங்களிடம் ஆள் இருக்கிறது" என்றார்.
இதற்கிடையே, சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவை சேர்ந்த கல்வியாளர் எம்.கே.சூரப்பா என்பவரை, தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் நியமித்து உத்தரவு பிறப்பித்தார். ஏற்கனவே தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு ஆந்திராவை சேர்ந்த சூரியநாராயண சாஸ்திரியையும், தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழகத்திற்கு கேரளாவை சேர்ந்த பிரமிளா தேவியையும் நியமனம் செய்த நிலையில், எம்.கே.சூரப்பா 3-வது வெளிமாநில துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கமல்ஹாசன் தனது ட்விட்டரில், "கர்நாடகத்திலிருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள். தமிழக மக்களின் மனநிலையை மத்திய மாநில அரசுகள் உணரவில்லையா? இல்லை உணரத்தேவையில்லை என எண்ணி விட்டார்களா? சீண்டுகிறார்கள். இந்தச் சீண்டல் எதை எதிர்பார்த்துச் செய்யப்படுகிறது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடகத்திலிருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள். தமிழக மக்களின் மனநிலையை மத்திய மாநில அரசுகள் உணரவில்லையா? இல்லை உணரத்தேவையில்லை என எண்ணி விட்டார்களா? சீண்டுகிறார்கள். இந்தச் சீண்டல் எதை எதிர்பார்த்துச் செய்யப்படுகிறது?
— Kamal Haasan (@ikamalhaasan) 6 April 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.