'கர்நாடகத்து நாற்காலிக்காக நடத்தும் நாடகம்'! - காவிரி விவகாரத்தில் விளாசும் கமல்ஹாசன்

இது இயலாமை அல்ல; இழிவான அரசியல்

கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாகிஸ்தானோடு, வங்கதேசத்தோடு நதி நீரைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியா, தன் நாட்டுக்குள் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் காவிரி நீரைப் பகிர்ந்து தர முடியாதா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

காவிரி நதி நீர் பங்கீடு குறித்த தீர்ப்பை பிப்ரவரி 16ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கியது. அந்த தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்துக்குள் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர். இதை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள், விவசாயிகள் சங்கங்களில் ஆலோசனை கூட்டம் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் நடந்தது. அந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியை அனைத்து கட்சியினரும் நேரில் சந்தித்து வலியுறுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதுவரை பிரதமர் நேரம் ஒதுக்கித் தரவில்லை.

தமிழக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் போராடி வருகின்றனர். 14வது நாளாக நாடாளுமன்றம் முடங்கி வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்ற உறுதியளிக்கப்படும் வரையில் போராட்டம் தொடரும் என அதிமுக எம்பியும், துணை சபாநாயகருமான தம்பித்துரை தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்ற உத்தரவில் இல்லை. எனவே அதை அமைக்கும் வாய்ப்பு இல்லை என மத்திய நீர்வளத்துறை செயலாளர் கூறியுள்ளார்.

இதையடுத்து, இன்று தமிழக சட்டசபையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாகிஸ்தானோடு, வங்கதேசத்தோடு நதி நீரைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியா, தன் நாட்டுக்குள் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் காவிரி நீரைப் பகிர்ந்து தர முடியாதா? இது இயலாமை அல்ல; இழிவான அரசியல் . கர்நாடகத்து நாற்காலிக்காக நடத்தும் நாடகம்” என்று மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close